சாதி ஒழிப்பை வலியுறுத்தும் ’தமிழ்க்குடிமகன்’

சாதி ஒழிப்பை வலியுறுத்தும் ’தமிழ்க்குடிமகன்’

ட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம், ‘தமிழ்க்குடிமகன்.’ இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தை பெட்டிக்கடை, பகிரி ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ளார். ’மிக மிக அவசரம்’ படப் புகழ் ஸ்ரீபிரியங்கா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடிகர்கள் லால், எஸ்.ஏ.சந்திரசேகர், வேல ராமமூர்த்தி, தீபிக்ஷா, அருள்தாஸ், ரவிமரியா மற்றும் பலர் நடித்துள்ளனர். ‘விக்ரம் வேதா’ படப் புகழ் சாம் சி.எஸ். இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவை கவனிக்க, படத்தொகுப்பை கார்த்திக் மேற்கொள்கிறார்.

இந்தப் படம் குறித்து இயக்குநர் இசக்கி கார்வண்ணன் கூறுகையில், “இந்தச் சமூகத்தில் சாதிய கட்டமைப்பை உடைப்பதற்காக தனி மனிதனாகப் போராடும் ஒருவனை பற்றிய கதைதான் தமிழ்க்குடிமகன். குலத்தொழில் முறையை இன்று ஒழித்து விட்டோம். ஆனால், அதை மையப்படுத்தி உருவான சாதியை இதுவரை ஏன் ஒழிக்க முடியவில்லை? ஒவ்வொருவரும் அவர்கள் செய்த தொழிலின் அடிப்படையில் தான் சாதி உருவானது. தொழில் ‘சார்ந்து’ உருவானதால்தான் அதற்கு சாதி என்ற பெயரே வந்தது. அது குறித்த புரிதல் சமூகத்தில் பலருக்கும் இல்லை. தற்போது பலரும் தாங்கள் செய்து வந்த தொழிலில் இருந்து வெவ்வேறு தொழிலுக்கு மாறி விட்டனர். அதனால், அவர்களை இதற்கு முன் அவர்கள் செய்து வந்த தொழில் சார்ந்த சாதியை வைத்து அழைக்க வேண்டியத் தேவையில்லை. அதற்கு பதிலாக சாதி என்கிற இடத்தில், ‘தமிழ்க்குடிமகன்’ என்று குறிப்பிட வேண்டும்.

‘சாதி என்கிற வார்த்தை என்னை அழுத்துகிறது. அதனால் சமூகத்துடன் என்னால் ஒன்றி வாழ முடியவில்லை’ என்று பலரும் குமுறுகிறார்கள். அதற்கு ஒரு விடிவு தரும் விதமாக இந்தப் படத்தின் கதை அமைந்துள்ளது. குறிப்பாக, உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் இந்தப் படம் உருவாகி உள்ளது. இந்தப் படத்தில் இயக்குநர் சேரனின் ஒத்துழைப்பு மிகவும் அபரிமிதமானது. படப்பிடிப்பின்போது அவர் என்னிடம், ‘இந்த சாதிய அமைப்பை உடைக்க முடியவில்லை. ஆனால், இந்தப் படம் அதை உடைக்கும் விதமாக இருக்கும்’ என்று பாராட்டினார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக் ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் பிப்ரவரியில் இந்தப் படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம” என்கிறார் இயக்குநர் இசக்கி கார்வண்ணன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com