‘இதுவே எனது கடைசித் திரைப்படம்’ அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!

‘இதுவே எனது கடைசித் திரைப்படம்’ அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!

பிரபல திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் திரைப்படம், 'மாமன்னன்.' இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு பேசிய உதயநிதி ஸ்டாலின், “மாரி செல்வராஜ் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் முதன்முறையாக நடித்திருக்கிறேன். சொல்லப்போனால் இது என்னுடைய கடைசி படம். வடிவேலு இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். பெரிய குழுவுடன் இந்தப்படம் அமைந்தது எனக்கு மகிழ்ச்சி. மாரி செல்வராஜ் படங்களில் நீங்கள் என்ன எதிர்பார்ப்பீர்களோ அது அனைத்தும் இந்தப் படத்திலும் இருக்கிறது. இந்தத் திரைப்படத்தை இம்மாதம் 29ம் தேதி வெளியிட முடிவு செய்து இருக்கிறோம்.

நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படம் நான் நடிப்பதாக இருந்தது. அமைச்சர் பொறுப்பேற்ற பின்பும் நான் படங்களில் நடித்தால் அது சரியாக இருக்காது. நிறைய பணிகள் இருக்கிறது. என் மீது எதிர்பார்ப்பும் கூடிக்கொண்டே உள்ளது. பல்வேறு பணிச்சுமைகளுக்கு இடையேதான் படத்தின் டப்பிங், இசை வெளியீட்டு விழாவுக்கு நேரம் ஒதுக்கி வந்திருக்கிறேன். எனக்கு தெரிந்து இதுதான் எனது கடைசிப் படமாக இருக்கும். இது ஒரு நல்ல படமாக அமைந்தது எனக்கு திருப்தி.

மாரி செல்வராஜின் அரசியல் இந்தப் படத்திலும் நிறைய உள்ளது. அவருக்கும் எனக்குமான புரிதல் இந்தப் படத்தில் அதிகரித்து இருக்கிறது. அவர் கூட என்னிடம், ‘அடுத்து நீங்கள் படம் நடித்தால் என் இயக்கத்தில்தான் நடிக்க வேண்டும்’ என்றார். அடுத்த மூன்று வருடத்துக்கு எனது படம் கிடையாது. அதற்குப் பின்பு எனக்குத் தெரியவில்லை. அதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். நானும் மாரியிடம், ‘அடுத்து படம் நடித்தால் உங்களுடன்தான் நடிப்பேன் என்று வாக்குறுதி கொடுத்து இருக்கிறேன்' என்று பேசினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com