டாப் கியரில் பறக்கும் ‘டிரைவர் ஜமுனா'

ஐஸ்வர்யா ராஜேஷ்
ஐஸ்வர்யா ராஜேஷ்

'வத்திக்குச்சி' படப் புகழ் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கும் அடுத்த படம், ‘டிரைவர் ஜமுனா.’ ‘18 ரீல்ஸ்’ பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.பி.சௌத்ரி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் ஆடுகளம் நரேன், கவிதா பாரதி, அபிஷேக் குமார், இளைய பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். டான் பாலா கலை இயக்கத்தை கவனிக்க, படத்தொகுப்புப் பணிகளை ஆர்.ராமர் கவனிக்கிறார். அனைத்துப் பணிகளும் நிறைவடைந்த நிலையில் நவம்பர் மாதம் 11ஆம் தேதி இப்படம் வெளியாகவிருக்கிறது.

இயக்குநர் கின்ஸ்லின்
இயக்குநர் கின்ஸ்லின்

“இது ஒரு க்ரைம் திரில்லர் படம். இரண்டு மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்புதான் இந்தத் திரைப்படம். நெடுஞ்சாலை பயணமும், காரிலும்தான் மொத்த திரைக்கதையும் பயணிக்கும். இதனை திரைக்கதையாக எழுதும்போதும், காட்சிப்படுத்தும்போதும் ரசிகர்களுக்கு சோர்வை தராமல் இருப்பதற்கான விஷயங்கள் பலவற்றை இணைத்திருக்கிறோம். திரைக்கதை காரில் பயணிப்பதால் கதாபாத்திரங்களுக்கு இடையே நீண்ட நேரம் உரையாடலை வைக்க இயலாது. அதனால் நடிகர்களின் முகபாவனைகளையும், நடிப்புத் திறனையும் வைத்துதான் காட்சிகளை நகர்த்த வேண்டியதிருந்தது.

படத்தின் முழு கதைக்கும் கதையின் நாயகிதான் மைய பாத்திரம். இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது பங்களிப்பை அற்புதமாக வழங்கியிருக்கிறார். காரை ஓட்டிக்கொண்டே இருக்க வேண்டும். அதனுடன் சக நடிகர்களிடமும் பேசி நடிக்க வேண்டும். வண்டியை ஓட்டும்போது போக்குவரத்து நெரிசல், சாலை விதிகள் அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் சவாலாக ஏற்று நடித்து அசத்தியிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்” என்கிறார் இயக்குநர் கின்ஸ்லின்.

'''கனா' படத்துக்குப் பிறகு வெளியாகும் எனது திரைப்படம் 'டிரைவர் ஜமுனா.' இந்தப் படத்தின் கதையைக் கேட்டு உடனே நடிக்கலாம் எனத் தீர்மானித்தேன். இந்தப் படத்தில் எனது நடிப்புத் திறன் ரசிகர்களால் பாராட்டப்பட்டால், அதற்கான முழு புகழும் பட இயக்குநரையே சாரும். எனது மூன்று திரைப்படங்கள் கொரோனா தொற்று காலகட்டத்தில் டிஜிட்டல் தளங்களில்தான் வெளியானது. ஆனால், இந்தப் படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதற்காக தயாரிப்பாளர் எஸ்.பி.சௌத்ரி அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்குக் கார் ஓட்டுவது மிகவும் பிடிக்கும் அதிலும் வேகமாக கார் ஓட்டுவேன். அதனால் சண்டை பயிற்சி இயக்குநர் அனல் அரசிடம் அனைத்து சண்டை காட்சிகளிலும், சாகசக் காட்சிகளிலும் டூப் போடாமல் நானே நடிக்கிறேன் என வாக்குறுதி அளித்தேன். இந்தப் படத்தில் லாரியுடன் நேருக்கு நேர் மோதும் ஒரே ஒரு காட்சியில் சிறிய பகுதியை தவிர, படம் முழுவதும் அனைத்து சண்டை காட்சிகளிலும், சாகசக் காட்சிகளிலும் நானே காரை ஓட்டினேன்'' என்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com