பெண் நிர்வாகிகளுக்கு அட்வைஸ்: களைகட்டிய விஜய் மக்கள் மகளிர் அணி கூட்டம்!
சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் மகளிர் அணி நிர்வாகிகளுடன் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனை நடத்தினார். இதில் லியோ இசை வெளியீட்டு விழா குறித்து பேசியதோடு, மேலும் விஜயை தளபதி என்று தான் அழைக்க வேண்டும் என்று பெண் நிர்வாகிகளுக்கு அட்வைஸ் வழங்கினார்.
நடிகர் விஜய் ஒரு பக்கம் திரைப்பயணம், மறுபக்கம் விஜய் மக்கள் இயக்கத்தை பலப்படுத்தும் பணி என்று தீவிரமாக செயல்பட்டு வருகிறார். விஜய் மக்கள் இயக்கத்தை பலப்படுத்தும் வகையில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் வழக்கறிஞர் அணியுடன் ஆலோசனை, ஐடி விங் அணியுடன் ஆலோசனை என்று விஜய் மக்கள் இயக்கத்தில் உள்ள நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக இன்று சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகி ஒருவர் "எங்களுக்கு விஜய் சந்திக்க உங்களால் ஏற்பாடு செய்ய முடியுமா" என்று கேள்வி எழுப்பினார். அதற்கு "விஜய் தளபதி என்று தான் சொல்ல வேண்டும், பெயரை சொல்லக்கூடாது" என்று புஸ்ஸி ஆனந்த் குறிப்பிட்டார். இது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து நிர்வாகி ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு இந்த மாத இறுதியில் லியோ இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறும், இதற்கான அனுமதி சீட்டுகளை மாவட்ட நிர்வாகிகளிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
இது குறித்து கேட்கும் போது சென்னை நேரு விளையாட்டு அரங்கில் வரும் செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி லியோ படத்தினுடைய இசை வெளியீட்டு விழாவை மிகப் பிரமாண்டமாக நடத்த படக்குழுவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். மேலும் எப்போதும் குட்டி கதையோடு முடிக்கும் நடிகர் விஜய், தற்போது நடைபெற உள்ள இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் அரசியல் குறித்து பல்வேறு வகையான கருத்துக்களை பகிர்வார் என்று விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.