நடிகைக்குக் கேக் ஊட்டிவிட்ட ரஜினி!

நடிகைக்குக் கேக் ஊட்டிவிட்ட ரஜினி!

லோகேஷன் 1 – போயஸ் தோட்டம்

ரஜினி வீட்டுக்கு சுமார் 100 அடி முன்பே ரசிகர்கள் நிறுத்தப்பட்டார்கள். வெளியே ரஜினியின் உதவியாளர்கள் ரமேஷ், ஆறுமுகம் ஆகியோருக்கு ரசிகர்களைக் கட்டுப்படுத்தி நிறுத்தி வைப்பதற்குள் ‘பெண்டு’ கழன்றுவிட்டது.

உள்ளே வரவேற்பறையில் தொடர்ந்து டெலிபோன் சிணுங்கிக்கொண்டிருக்க, ‘ஸார் முதல்வர் லைன்ல இருக்கார், மூப்பனார் பேசறாருங்க... வை.கோங்க...’ என்று உள்ளே லைன் கனெக்ட் செய்துகொண்டிருந்தார் இன்னொரு உதவியாளரான ஜெயராமன்.

முதன் முதலாக நேரில் வாழ்த்த வந்த வி.ஐ.பி. குமரி அனந்தன். சிறிது நேரம் காத்திருந்து அவர் உள்ளே நுழைந்த அதே வேகத்தில், புகைப்படக்காரர்களும் ஸாடிலைட் டீ.விக்காரர்களும் நிருபர்களும் உள்ளே நுழைந்தார்கள்.

மாடிப்படியை ஒட்டி கீழ்ப்பகுதி ஹாலில் ராதை கிருஷ்ணர் சிலைகள் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. பக்கத்தில் இரண்டு நாற்காலிகளில் ரஜினியின் தாய், தந்தை, காலமான அக்கா ஆகியோரது படங்கள், மாலையுடன் எதிரில் வாழைப்பழங்கள், ஆப்பிள் இன்னபிற.

‘ராமர்’ நிறத்தில் நீலப் பட்டுப் புடைவை சரசரக்க டென்ஷனுடன் ஓடியாடிக்கொண்டிருந்தார் லதா. கூடவே ஒன்றிரண்டு ‘ஆஷ்ரம்’ டீச்சர்கள், ‘மேடத்தின்’ கட்டளைக்கு ஏற்ப செயல்படத் தயாராக நின்றுகொண்டிருந்தார்கள். பரபரப்பாக இருந்த அவரை ‘ஸார், காலையில் எழுந்து கோயிலுக்கு எங்காவது போனாரா?” என்று கேட்க, “இன்னமும் பூஜையே முடியலை” என்று பட்டுனு பதில் வந்தது.

‘முத்து’ படத்துக்குப் பிறகு பல மாதங்கள் தன்னுடைய ‘பர்ஸனாலிட்டி’ பற்றிக் கவலைப்படாமல் தாடியுடனும், மொட்டைத் தலையுடனும் காட்சியளித்து வந்த ரஜினி, ‘அருணாசலத்’திற்காக தாடியை மழித்து விட்டிருந்தார். நெற்றியில் விபூதி, முடி, பழைய ஸ்டைலில் வளர்ந்திருக்க, பட்டு வேட்டி, பட்டுச் சட்டையுடன் மாப்பிள்ளையாக மாறியிருந்தார்.

குமரி அனந்தன் வந்து சென்றவுடன் அடுத்து ஸ்டாலின். மகன் உதயநிதியுடன் வந்திருந்தார். ஸ்டாலினின் கார், நேராக வீட்டு வளாகத்திற்குள்ளாகவே அனுமதிக்கப்பட்டது. ஸ்டாலின் பொன்னாடை போர்த்தியபோது புகைப்படக்காரர்களைப் பார்த்து ‘தாடி எடுத்திட்டது நல்லாயிருக்கில்ல?’ என்று தம் பிரத்யேக ஸ்டாலில் கையை ஆட்டியபடி ரஜினி கேட்க, அனைவரும் ஆமோதித்தார்கள்.

பின்னர் ஸ்டாலினை மாடியிலுள்ள தன்னுடைய தனியறைக்குக் கூட்டிச் சென்று பத்து நிமிடத்துக்கு மேல் பேசி, வாசல்வரை வந்து வழி அனுப்பினார் ரஜினி!

இதற்கிடையில் மதுரையிலிருந்து மு.க.அழகிரியும் முதல்வரின் துணைவியார் தயாளு அம்மாவும் போனிலேயே வாழ்த்துச் சொன்னார்கள்.

அதன்பின் ரசிகர்களைச் சந்திக்கத் தயாரானார் ரஜினி.
சத்திய நாராயணாவும், உதவியாளர்களும் மிகுந்த டென்ஷன் பார்ட்டிகளாக மாறிவிட்டார்கள். கேட் அருகில் ரஜினி நின்றுகொண்டிருக்க, ஒவ்வொரு ரசிகராக வந்து பொன்னாடை, மாலை, புத்தகங்கள் என்று கொடுத்துவிட்டுப் போனார்கள். பலர் ‘தலைவா’ என்று காலில் விழுந்து எழுந்தனர். ஆனால்,  இப்படி ஒவ்வொருவராகப் பார்த்துக்கொண்டிருந்தால் படப்பிடிப்புக்குப் போக முடியாது என்று ரஜினி படபடக்க, (ஏவி.எம்மில் ‘அருணாசலம்’ நடந்து கொண்டிருக்கிறது!) ஒரு மேடை மீது ஏறி நின்று மொத்தமாக ரசிகர்களைப் பார்த்து ஒரு ‘கும்பிடு’ போட்டுச் செல்வதாக முடிவாயிற்று.

தெருவில் மேடை போடப்பட்டதும், நூறடி தொலைவில் நின்றுகொண்டிருந்த ரசிகர்கள், பக்கத்தில் வருமாறு அழைக்கப்பட்டனர். ஸிக்னல் கொடுக்கப்பட்டதும், கணுக்கால் அளவு இருந்த தண்ணீரைக் கூடப் பொருட்படுத்தாமல், ‘தலைவா’ என்று ஏகக் கூச்சலுடன் ஓடி வந்தார்கள் ரசிகர்கள். அவர்களைக் கட்டுப்படுத்தி நிற்க வைப்பதற்குள் போலீஸுக்கும் உதவியாளர்களுக்கும் வேர்த்து விறுவிறுத்துவிட்டது! உள்ளேயிருந்து விறுவிறுவென்று வந்த ரஜினி, தாவி மேடையில் ஏறி எல்லோருக்கும் வணக்கம் சொல்ல, உற்சாகத்தில் அந்த ஏரியாவே அதிர்ந்தது! பின்னர் மேடையில் இருந்து இறங்கி, நடந்து வீட்டிற்குள் வருவதற்குள் கீழே தண்ணீர் இருப்பதையும் பொருட்படுத்தாமல், ஆங்காங்கே தட, தடவென காலில் விழுந்தார்கள் பலர்.

மணி ஒன்பதேகால் ஆகிவிடவே, ஷூட்டிங் போக வேண்டுமென்று பரபரத்தார் ரஜினி. ரசிகர்கள் தொல்லை இருந்தாலும், சமாளித்துக்கொள்ளலாம் என்று அம்பாஸிடரில் கிளம்பிவிட்டார். வழியெல்லாம் கூப்பிய கையுடன் செல்ல, கார் ஏ.விஎம்முக்கு விரைந்தது.

லொகேஷன் 2 - ஏவிஎம். ஸ்டுடியோ

எட்டாவது தளத்தில்தான் ‘அருணாசலம்’ ஷூட்டிங். உள்ளே போக பலத்த கெடுபிடி. ‘அடையாளக் கார்டு’ இருக்கா என்று கேட்டபடி அனுப்பிக்கொண்டிருந்தார்கள். தயாரிப்பாளர்களில் ஒருவரான நாகராஜ ராஜா மிகவும் கலவரத்துடன் ரஜினியை மேக்கப் அறையிலிருந்து எதிர்பார்த்துக்கொண்டிருந்தார். தளத்துக்கு வெளியே கொஞ்சம் ஒதுக்குப்புறத்தில் பாட்டு சீனுக்கான ரிகர்சல் நடந்துகொண்டிருந்தது. மஞ்சளும் சிவப்பும் கலந்த குடைகளை கையில் வைத்துக்கொண்டு, இரண்டு வரிக்கு இருபது முறை ரிகர்சல் பார்த்துக்கொண்டிருந்தார்கள். சிறிது நேரம் கழித்து, பத்திரிகையாளர்களையும் புகைப்படக்காரர்களையும் உள்ளே அழைத்துக்கொண்டு போனார் நாகராஜ ராஜா.

பெரிய மேஜை ஒன்று கொண்டு வரப்பட்டது. இரண்டுக்கு ஒன்றரை அடி அளவில் தாஜ் கொரமண்டலில் செய்த கேக். ஒரே ஒரு மெழுகுவர்த்தியை அதில் ஏற்றி ரஜினி அணைக்க, (நடிகை) சவுந்தர்யா மற்றும் யூனிட் ‘ஹாப்பி பர்த் டே”’ பாடிற்று! பின்னர், “ஸார், கேக் வெட்டுங்க...” என்றவுடன் ஒவ்வொரு துண்டாக வெட்டி, தயாரிப்பாளர், டைரக்டர், வெ.ஆ.நிர்மலா, ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஊட்டினார் ரஜினி.

“சவுந்தர்யாவுக்கு கொடுக்கலேன்னா அழுதுடுவாங்க” என்றபடி அவருக்கும் ஒரு துண்டு ஊட்டி விட்டார் ரஜினி. “செந்தில் அண்ணன் எங்கே?” என்று கேட்டவுடன், மறைந்திருந்த செந்தில் முன்னுக்கு வந்தார். ரஜினி செந்திலுக்கு ஊட்டிவிட, அவர் ரஜினிக்கு ஊட்டிவிட, ஒரே கல, கலதான்!

ரஜினியின் பிறந்த நாள் கேக்கில் ‘An Institution By Himself. To Our Dearest Hero’ என்று கிரீமில் பொறிக்கப்பட்டிருந்தது!

12-12-1996 வருட ரஜினி பிறந்தநாள் நேரடி ரிப்போர்ட்

போட்டி :

1.ரஜினி முடி திருத்துபவராக நடித்த படம் ?

2.ரஜினி நடித்த முதல் திரைப்படம் ?

3.ரஜினி மற்றும் கமல் இணைந்து நடித்த இசைக்குழு படம் ?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com