சுதந்திரமும் வலியும் ‘ஆகஸ்ட் 16,1947’

சுதந்திரமும் வலியும் ‘ஆகஸ்ட் 16,1947’

சுதந்திரப் போராட்ட காலத்தில் அனுபவித்த பல்வேறு இன்னல்களைப் பற்றிய படங்கள் பலவும் வந்துள்ளன. இந்த வரிசையில் வந்துள்ள மற்றொரு படம்தான் பொன்குமார் இயக்கியுள்ள ஆகஸ்ட் 16, 1947 திரைப்படம். இந்தப் படத்தில் கெளதம் கார்த்தி, ரேவதி சர்மா, புகழ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தியாவுக்கு சுதந்திரம் தர முடிவு செய்யும் பிரிட்டிஷ் அரசு, சுதந்திரத்துக்குப் பின்பும் தமிழ் நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் விளையும் பஞ்சுக்கு உரிமை கொண்டாட நினைக்கிறது.

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த தகவலை அந்த கிராமத்தில் உள்ள ஆங்கிலேய அதிகாரிக்கு கடிதம் மூலம் சொல்ல நினைக்கிறது பிரிட்டிஷ் அரசு. அந்த அதிகாரி ராபர்ட் கொடுங்கோன்மையானவர். தன்னை எதிர்ப்பவர்களை சுட்டுக் கொல்வதும், கைகளை வெட்டுவதுமாக இருக்கிறார். இவரது மகன் ஜஸ்டின், அந்த கிராமத்து பெண்களை வன்புணர்வுக்கு உள்ளாக்குகிறான். இதனால் அந்த கிராமத்தில் சிலர் தங்களது பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்து விடுகின்றனர்.

இந்த நிலையில் ஜஸ்டினுக்கு அந்த கிராமத்து ஜமீன்தார் மகள் மீது ஆசை ஏற்படுகிறது. இதனால் ஜமீன்தாரும் தனது மகளை கொன்றுவிட நினைக்கிறார். ஜமீன்தாரின் மகளை காதலிக்கும் அந்த கிராமத்து இளைஞன் ஒருவன் ஜஸ்டினை கொலை செய்து, அந்தப் பெண்ணைக் காப்பாற்றுகிறான். இதனால் கோபம் கொள்ளும் ஜஸ்டினின் தந்தை ராபர்ட் அந்த இளைஞனை கொலை செய்ய முடிவு செய்வதோடு, சுதந்திரம் கிடைத்த தகவலையும் அந்த கிராமத்து மக்களிடம் மறைக்கிறார். சுதந்திர தினத்துக்கு மறுநாள் அந்த ஊர் மக்கள் அனைவரையும் கொடுமைப்படுத்தி தண்டனை தர நினைக்கிறார். ஜஸ்டினின் எண்ணம் நிறைவேறியதா? ஜமீன்தாரின் மகளை அந்த கிராமத்து இளைஞன் திருமணம் செய்தானா என்பது கதையின் முடிவு. படத்தின் கிளைமாக்ஸ் காட்சி யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாக உள்ளது.

இது ஒரு கற்பனை கதைதான். நேர்த்தியான திரைக்கதை மூலம் வணிக ரீதியாக படத்தின் வேகத்தைக் கூட்டியிருக்கிறார் இயக்குநர் பொன்குமார். பெருமாள் செல்வனின் டிசைன் திறமை 75 ஆண்டுகளுக்கு முந்தைய கிராமத்தை கண் முன் நிறுத்துகிறது. செல்வகுமாரின் கேமரா கைவண்ணம் இயக்குநரின் கனவை நிறைவேற்றி உள்ளது. ஒவ்வொரு காட்சியிலும் கலை இயக்குநர் சந்தானத்தின் கடின உழைப்பு தெரிகிறது. கெளதம் கார்த்திக்கின் நடிப்பு இந்தப் படத்தில் பக்குவப்பட்டுள்ளது. ரேவதி சர்மா நடிப்பிலும், உருவத்திலும் பழைய ஹீரோயின்களை நினைவுபடுத்துகிறார். ராபர்ட் வேடத்தில் வில்லனாக நடித்திருக்கும் ரிச்சர்ட் ஆஸ்டனின் நடிப்பு அபாரம். ஒரு மோசமான வெள்ளை அதிகாரியை கண் முன் நிறுத்துகிறார். ஜஸ்டினாக நடிக்கும் ரோல்டன் இவருக்கு இணையாக நடித்துள்ளார்.

நகைச்சுவை நடிகர் புகழை இந்தப் படம் அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்லும். இந்தப் படத்தில் லாஜிக் மீறல்கள் போன்ற சில குறைகள் இருப்பினும், சுதந்திர உணர்வுவோடு படம் பார்க்கையில் அவையெல்லம் மறந்து விடுகிறது. பல வருடங்கள் பேசாத ஒரு தம்பதியின் கதாபாத்திரத்தை இயக்குநர் மிக அழகாக சித்தரித்துக் காட்டியிருப்பது அருமை. ‘ஆகஸ்ட் 16, 1947’ முகம் தெரியாத சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com