மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் விமர்சனம் - யூகிக்க முடியாத மர்மம்!
நமக்கு பிரச்சனை என்றால் போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்வோம். போலீஸ் ஸ்டேஷனில் ஒரு பிரச்சனை என்றால் என்ன ஆகும் என்பது தான் மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் படத்தின் ஒன் லைன்.
இப்படம் ஆஹா தமிழ் ஒடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. தயாள் பத்மநாபன் இந்த படத்தை இயக்கி தயாரித்துள்ளார். ஒரு சிறுமி கடத்தப்படுவதை பார்க்கும் இளைஞன் ஜெய் காவல்நிலைய ஆய்வாளரிடம் புகார் செய்கிறார். ஆய்வாளர் உதவி செய்வது போல் நடித்து, கடத்தியவர்களிடமே காட்டி கொடுத்து விடுகிறார். கடத்தல் கும்பல் தலைவன் நாகா (சுப்பிரமணிய சிவா) ஜெய்யை கொலை செய்து விடுகிறான். இதை கண்டுபிடிக்கும் ஜெய்யின் தோழியான உதவி ஆய்வாளர், அர்ச்சனா (வரலக்ஷ்மி சரத் குமார்) கொலைக்கு உடந்தையாக இருந்த ஆய்வாளரை பழி வாங்க மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றலாகி வருகிறார். தனது நண்பர்களுடன் ஆய்வாளரை கொலை செய்ய திட்டம் போடுகிறார். திட்டத்தை செயல் படுத்தும் நாளில் வேறொரு மர்ம நபர் ஆய்வாளரையும், தாதா நாகவையும் சுட்டு கொன்று விடுகிறார்கள். இதை விசாரணை செய்ய உதவி ஆய்வாளர் நெடுஞ்செழியன் (ஆரவ்) வருகிறார். அதன் பிறகு நாம் அனுமானம் செய்ய முடியாத அளவிற்கு நகர்கிறது படம்.
கதை நகரும் விதத்தையும், சொல்லப்படும் வழி முறையையும் மேக்கிங் என்பார்கள் இந்த மேக்கிங் என்ற விஷயத்தை நன்றாக தந்துள்ளார் டைரக்டர் தயாள் பத்மநாபன். இது சாதாரண பழி வாங்கும் படம் என்று நாம் எண்ணும் போது கதை வேறு திசையில் பயணித்து பல்வேறு திருப்பங்களுடன் செல்கிறது. ஒரு நல்ல கிரைம் திரில்லர் படத்தில் ஒரு நீதி இருக்கும். இந்த நீதி இந்த படத்திலும் இருக்கிறது. ப்ரீத்தி - பாபுவின் ஒளிப்பதிவு படத்தின் தூண் என்று சொல்லலாம். மணிகாந்த் கத்ரியின் பின்னணி இசை திரில்லிங்கை கூட்டுகிறது. அதிகமாக அலட்டாமல் கத்தி பேசாமல் ஒரு மிரட்டல் நடிப்பை தந்துள்ளார் ஆரவ். ஆரவ்வின் நடிப்பு இதற்கு முன் எந்த நடிகருடன் ஒப்பிட முடியாதபடி வித்தியாசமாக உள்ளது. வரலக்ஷ்மி கோபம், சோகம் என கலந்த நடிப்பை தந்துள்ளார். சந்தோஷ், சுப்பிரமணிய சிவா, விவேக் என பலரும் கதாபாத்திரதை உணர்ந்து நடித்துள்ளார்கள். ஆர்ப்பாட்டம் இல்லை. மாஸ் வசனங்கள் இல்லை ஆனால் ரசிக்கும் படி உள்ளது மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன். மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் -அதிகம் ரத்தம் சிந்தாத ஒரு கிரைம் திரில்லர்.