விமர்சனம் : மியூசிக் ஸ்கூல் : நாம் அனைவரும் படிக்க வேண்டிய பள்ளி!
டைரக்டர் பாப்பா ராவ் பிய்யாலா இயக்கத்தில் ஸ்ரேயா சரண், ஷான் நடித்து வெளி வந்துள்ள படம் மியூசிக் ஸ்கூல்.இளையராஜா இசையமைத்துள்ளார். ஹைத ராபாத்தில் உள்ள ஒரு பள்ளியில் இசை ஆசிரியை யாக வேலைக்கு சேர்கிறார் ஸ்ரேயா. அந்த பள்ளியோ விளையாட்டு, இசை மற்ற கலைகள் எதற்கும் முக்கியத்துவம் தராமல் படிப்பு ஒன்றிற்கு மட்டுமே முக்கியத்துவம் தருகிறது. பள்ளியின் வரவு செலவு கணக்குகளை இசை ஆசிரியரை வைத்து பார்க்க சொல்கிறது பள்ளி நிர்வாகம். இதனால் ஸ்ரேயா தான் வசிக்கும் பிளாட்டிலேயே பள்ளியின் நாடக ஆசிரியர் ஷானுடன் இணைந்து இசை பள்ளி ஒன்றை ஆரம்பிக்கிறார். அருகில் வசிப்பவர்களே மாணவ, மாணவியராக சேர்கிறார்கள். தி சவுண்ட் ஆப் மியூசிக் என்ற நாடகத்திற்க்கு ஒத்திகை பார்க்க இசைப்பள்ளி மாணவர்களை தனது சொந்த ஊரான கோவா விற்கு அழைத்து செல்கிறார்.அங்கே காதல் வயப்படும் ஒரு மாணவனும், மாணவியும் காணாமல் போய் விடுகிறார்கள்.போலீஸ் அதிகாரியான மாணவியின் அப்பா கோபம் கொண்டு நாடகத்தை நடக்கவிடாமல் தடுக்க முயல்கிறார். நாடகம் அரங்கேற்ற செய்யும் முயற்சிதான் படத்தின் மீதிக் கதை. படத்தின் மிகப்பெரிய பலமே இளையராஜாதான். படத்தில் நிறைய பாடல்கள் இருந்தாலும் அனைத்து பாடல்களும் மிக நன்றாகவே உள்ளது.ஸ்ரேயாவின் நடிப்பை பார்க்கும் போது நமது தமிழ் இயக்குனர்கள் ஸ்ரேயாவை சரியாக பயன் படுத்தி கொள்ளவில்லை என்று சொல்ல தோன்றுகிறது. நடனத் தையும், நடிப்பையும் சரியான விகிதத்தில் தந்துள்ளார். ஷான் அமைதியான நடிப்பில் அழகாக நடித்துள்ளார்.பிரகாஷ் ராஜ், லீலா சாம்சன், வினய் வர்மா, ஸ்ரீகாந்த் அய்யங்கார், மங்கள் பட் பெஞ்சமின், சிறுவர், சிறுமிகள் என அனைவருக்கும் சரியான தேர்வு. கிரண் டிஹோஹன்ஸ்ஸின் ஒளிப்பதிவில் கோவா ரம்மியமாக இருக்கிறது. பள்ளியும் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை மதிப்பெண் பெரும் இயந்திரங்களாக பார்க்காமல், அவர்களின் உள்ளே இருக்கும் திறமைகளை கண்டறிய வேண்டும் என்கிறது இப்படம். மியூசிக் ஸ்கூல் -பெற்றோர்களுக்கான பாடம்.