அசோக் செல்வன்
அசோக் செல்வன்

நம்பிக்கையின் வெளிச்சம் - நித்தம் ஒரு வானம்!

திரை விமர்சனம்!

நமக்கு துன்பமோ, அவமானமோ ஏற்படும் போது, துவண்டு போகாமல் நம்மை சுற்றி இருப்பவர்களை உற்று நோக்கினால் அவர்களுக்கும் பல துன்பங்களும், சோகங்ககளும் இருக்கும்.

இதை ஒப்பிடும் போது நமக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை தற்காலிகமானதே என்ற உணர்வு ஏற்படும். நம்பிக்கை பிறக்கும். இந்த பாசிட்டிவ் எண்ணத்தை விதைக்கும் படம் தான் ரா. கார்த்திக் இயக்கியுள்ள நித்தம் ஒரு வானம் திரைப்படம்.

அசோக் செல்வன் - அபர்ணா பாலமுரளி
அசோக் செல்வன் - அபர்ணா பாலமுரளி

யாரிடமும் பேசாமல் கொஞ்சம் சிடுமூஞ்சி குணமும், கூச்ச சுபாவமும் கொண்டவர் அர்ஜுன் (அசோக் செல்வன் ). இவருக்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண். திருமணத்திற்கு முதல் நாள் தான் காதலித்த பெண்ணுடன் சென்று விடுகிறார். இதனால் மனசிதைவுக்கு ஆளாகும் அர்ஜுன் மருத்துவரை நாடுகிறார்.

மருத்துவர் இரண்டு கதைகளை தந்து படிக்க சொல்கிறார். இந்த இரண்டு கதைகளின் நாயகனாக அர்ஜுன் தன்னை தானே கற்பனை செய்து கொள்கிறார். இக்கதைகளுக்கு முடிவு இல்லை. இந்த கதையில் உள்ள மனிதர்கள் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். முடிவு தெரிய வேண்டும் என்றால் நீ கொல்கத்தாவிற்கும், ஹிமாச்சல் பிரதேசத்திற்கும் செல்ல வேண்டும் என்கிறார் மருத்துவர்.

 சிவாத்மிகா
சிவாத்மிகா

அர்ஜுனும் இந்த இரு இடங்களுக்கும் செல்கிறான். இந்த பயணமும், இந்த கதைகளின் முடிவும் என நகர்கிறது திரைக்கதை. மூன்று இடங்களில் நடக்கும் சம்பவங்களை எந்த குழப்பமும் இல்லாமல் சொல்லி இருக்கிறார் ரா. கார்த்திக்.

அறிமுக படத்திலேயே அனுபவம் மிக்க இயக்குனர் போன்று படம் தந்ததற்கு கார்த்திக்கை பாராட்டலாம். தரன் குமாரின் பின்னணி இசையும், அந்தோணியின் படத்தொகுப்பும் ஹிமாச்சல் பிரதேசத்தின் பனிப்பொழிவில் நம்மை பயணிக்க வைக்கிறது.

அசோக் செல்வன் - ரிது வர்மா
அசோக் செல்வன் - ரிது வர்மா

அர்ஜுன், வீரா, பிரபா என மூன்று கேரக்டர்களிலும் நடிப்பில் நல்ல வேறுபாட்டை காட்டுகிறார் அசோக் செல்வன். நடிப்பில் ஒவ்வொரு படத்திலும் முன்னேறி வருகிறார் அசோக். ரிது வர்மா கியூட், அபர்ணா பாலமுரளி நகைச்சுவை, சிவாத்மிகா காதல், சிவதா சோகம் மற்றும் நம்பிக்கை என இந்த படத்தில் நடித்துள்ள பெண்கள் தங்கள் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

வாழ்க்கை என்பது ஏதோடும் முடிந்து போய் விடுவதில்லை. நம்பிக்கையுடன் கடந்து போக முடியும் என நித்தம் ஒரு வானம் சொல்கிறது. பயணங்களும், மனிதர்களும் இதை புரிய வைக்கிறார்கள்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com