
அம்மாகளின் அன்பை பேசும் சினிமாக்கள் இங்கே அதிகம். அதிகம் சொல்லப்படாத அப்பாவின் அன்பை சொல்லும் படமாக வந்துள்ளது விமானம் திரைப்படம். கிரண் கொரபதி மற்றும் ஜீ ஸ்டூடியோ தயாரித்துள்ள விமானம் படத்தை சிவபிரஷாத் யானாலா இயக்கி உள்ளார்.
கழிப்பறையை சுத்தம் செய்யும் உடல் ஊனமுற்ற நபர் வீரையா(சமுத்திரக்கனி). இவரது ஒரே மகன் சிறுவன் ராஜுவுக்கு (மாஸ்டர் துருவன்) ஆகாய விமானத்தில் பறக்க வேண்டும் என்ற ஆசை. ஒரு நாள் ராஜுவுக்கு புற்றுநோய் இருப்பதும், இந்த நோயால் மகன் விரைவில் இறந்து விடுவான் என்றும் தெரிய வருகிறது. இதனால் அதிர்ச்சி அடையும் அப்பா வீரையா மகனின் கடைசி ஆசையான விமானத்தில் செல்லும் ஆசையை நிறைவேற்ற துடிக்கிறார். ஒரு விமான நிறுவனம் பத்தாயிரம் ரூபாய் பணம் இருந்தால் போதும் விமானத்தில் பயணம் செய்ய முடியும் என்கிறது. இதற்காக, இந்த பணத்திற்காக படாதபாடு படுகிறார் வீரையா. இறுதியில் நாம் எதிபார்க்காத ஒரு கிளைமாக்ஸை தந்து நம்மை ஈர்க்கிறார் டைரக்டர்.
படத்தில் முதல் பாதி தேவையற்ற காட்சிகள் இருந்தாலும் இரண்டாவது பாதி ஒரு சிறந்த எமோஷனலை தருகிறது. ஒரு உடல் ஊனமுற்ற விளிம்பு நிலையில் உள்ள தந்தையாக வாழ்ந்துளார் சமுத்திரக்கனி. சிறுவன் துருவன் ஒரு அழகான நடிப்பை இயல்பாக தந்துள்ளான். விமானத்தை பார்த்து துள்ளி குதிக்கும் காட்சியில் நாமும் குழந்தைகளாகி விடுகிறோம்.
குப்பத்தில் வாழும் ஆட்டோ டிரைவர், செருப்பு தைய்ப்பவர் என அனைவரும் சரியான தேர்வாக இருக்கிறார்கள். பாலியல் தொழில் செய்யும் பெண் வரும் காட்சிகளை தவிர்த்து இருக்கலாம். கலை இயக்குனர் ஜெ.கே.மூர்த்தியின் உருவாக்கத்தில் குப்பம் மிக அழகாக உள்ளது. படத்தில் பல காட்சிகளில் நாம் எமோஷனல் கனெக்ட்ஆகி விடுகிறோம். மகனின் ஆசையை நிறைவேற்ற மௌன போராட்டம் நடத்தும் அனைத்து அப்பாக்களுக்கும் இந்த படம் ஒரு சமர்ப்பணம்.