King of Crime Novels: ராஜேஷ்குமார் கலகலப்பு பேட்டி!

King of Crime Novels: ராஜேஷ்குமார் கலகலப்பு பேட்டி!

பேட்டி: சேலம் சுபா.

இன்று .விஞ்ஞான உலகம் முன்னேறி கைக்குள் உலகம் அடங்கி விட்டாலும் அன்றே அந்த விஞ்ஞானத்தை பாமரரும் அறியும் வண்ணம் எளிய எழுத்துக்களால் விவரித்த பெருமைக்குரியவர் ..1500 நாவல்களுக்கும் மேல் எழுதி சாதனை படைத்தவர் ..கிரைம் என்றால் குற்றம் என்று நினைத்து தள்ளிப் போனவரையும் தன் கிரைம் நாவல் மூலம் குற்றத்திற்கும் தீர்வு உண்டு என்று சுவாரஸ்யமான எழுத்து நடையால் வசீகரித்தவர் ..ஆண்களை மட்டுமின்றி ஏராளமான பெண்களையும் ஆபாசமற்ற கண்ணியமான எழுத்து நடையால் கவர்ந்தவர் ..ஐம்பது வருடங்களுக்கும் மேலாக எழுத்துலகில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை பதித்தவர் ..இத்தனை பெருமைகளுக்கும் சொந்தக்காரர் கிரைம் நாவல் மன்னர் .ராஜேஷ்குமார். அவரை கல்கி இணையதளத்திற்காக சந்தித்து பிரத்தியேக பேட்டி எடுத்தோம்..

இனிமையான முகத்துடன் வரவேற்று கலகலவென்று நாம் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையாகவும் சமூக அக்கறையுடனும் பதிலளித்தார். அவை இதோ..

எழுத்துலகில் நீங்கள் சாதனை மன்னராக வலம் வருவதின் ஆரம்பப் புள்ளி எது ?

என் துவக்கப் பணியானது விஞ்ஞான ஆசிரியராக தொடங்கியது. அந்த வகையில் என்னிடம் பயிலும் மாணவர்களுக்கு விஞ்ஞானம் எளிதாக புரிய வேண்டும் என்பதற்காக மிகவும் மெனக்கேடுவேன். ஆசிரியப் பணியில் நான் கற்றுக்கொண்டது.- எதையும் எளிமைப்படுத்தி சொன்னால் மாணவர்களின் மனதில் நன்கு பதியும் என்பதுதான்!.

ஒரே பாடங்களை சொல்லித் தரும் ஆசிரியப்பணியிலேயே இருப்பது என் வாழ்வை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்ல உதவாது என்பதாலும் வித்யாசமாக ஏதேனும் முயற்சிக்க வேண்டும் என்பதாலும் அந்தப் பணியை விட்டு விலகினேன் .ஏனெனில் அப்போதே நான் எழுத்தில் ஆர்வமாக எழுத துவங்கி விட்டேன் .1969 ல் மாலைமுரசில் முதல் கதை பிரசுரமாகியது அன்று அதற்கு சன்மானம் பத்து ருபாய் ..தினத்தந்தி மாலைமுரசு தினமணி ராணி போன்றவற்றில் என் கதைகள் வந்து கொண்டிருந்தன .

அன்று முன்னணி பத்திரிக்கைகளான விகடன் குமுதம் கல்கி போன்றவைகளில் என் கதைகள் வருவதற்காக பெரும் முயற்சிகளில் இறங்கினேன் .70-லிருந்து 77-ம் வருடம்வரை ஏழு வருட கால போராட்டம். சுமார் 167 கதைகளை குமுதத்திற்கு விடாமல் எழுதி அனுப்பி எந்த பதிலும் இன்றி நேரடியாக குமுதம் அலுவலகம் சென்று ஆசிரியர் திரு .ரா கி ரங்கராஜனிடம் நின்றேன் .நான் புதுமுக எழுத்தாளன் என்பதால் என் கதைகளை உதவி ஆசிரியர்கள் அப்படியே கிடப்பில் போட்டதை அறிந்தார். நான் அனுப்பிய கதைகளின் எண்ணிக்கையைக் கேட்டதும் ஆச்சர்யத்தில் பிரமித்து உதவி ஆசிரியரை அழைத்தார். அவரிடம் ''இந்தத் தம்பியிடம் ஏதோ விஷயம் இருப்பதாலேயே இத்தனைக் கதைகளை எழுதி அனுப்பியிருக்கார் .இது சாதாரண விஷயமில்லை.. அவற்றை என்னவென்று பாருங்கள்'' என்றார். என்னிடமும் ''நீங்க கவலைப்படாமப் போங்க'' என்று அனுப்பி வைத்தார். அவர் சொன்னது போலவே அடுத்த இரண்டாவது வாரம்" இது நியாயமா" என்ற என் கதை குமுதத்தில் பிரசுரமானது.

அந்தக் கதைக்கு நிறைய பாராட்டுகள் வரவும் தொடர்ந்து என் கதைகள் அச்சில் ஏறின .இதை தொடர்ந்து விகடன், கல்கியிலும் எனது கதைகள் வரத் துவங்கியது ஆரம்பப்புள்ளி என்றால் ஆசிரியர் வேலையை விட்டு விட்டு .பத்திரிக்கைகளுக்கு இடைவிடாமல் எழுதி எழுதிக் குவித்த விடாமுயற்சிதான் .

உங்கள் சிறுகதைகளுக்கு வந்த வரவேற்பின் காரணம் ?

அப்பா ஜவுளி வியாபாரம் என்பதால் ஜவுளி கொள்முதலுக்கும் பணம் வசூல்செய்யவும் வட நாடுகளுக்கு செல்வது வழக்கம் .நான் ஆசிரியப் பணியை விட்டதுமே என் தந்தையிடம் ''இனி நான் வடநாட்டுக்கு செல்கிறேன்'' என்று சொல்லி விட்டேன்அதன்படி புனே, பாம்பே, கல்கத்தா, நாக்பூர், டெல்லி போன்ற நகரங்களுக்கு சென்று இரண்டு மூன்று மாதங்களாவது தங்க வேண்டியிருந்தது. அப்போது அந்தந்த ஊரின் இயல்புகளை அப்படியே என் எழுத்தாள மூளை கிரகித்துக்கொள்ளும் . ரயில் பயணங்களில் பார்க்கும் வேற்று நகரத்து மக்கள் மற்றும் அங்கு நிகழும் சம்பவங்களையும் குறித்துக் கொள்ளும் .அவை அப்படியே கதை வடிவமும் பெற்று விடும் .

அன்றைய எழுத்தாளர்கள் பெரும்பாலும் சென்னை நகரத்தை மட்டுமே களமாக அமைத்து கதைகளை தந்தனர் .இந்த நேரத்தில் சென்னையைத் தாண்டி வடநாட்டின் இடங்கள் மற்றும் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கதைகளை நான் தொடர்ந்து தந்ததால் குமுதத்தில் என் கதைகளுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது .உதாரணமாக "சலார்ஜங் மியூசியத்தில் சந்தித்தவள்" எனும் கதை ஹைதராபாத்தில் நடந்ததாகவும் "கட்டபிரபா அணைக்கட்டில் ஆசையாய் ஒருத்தி" எனும் கதையில் ஹுப்ளி நகரத்தையும் காட்டியிருந்தேன் .

இப்படி என் கதைகளை வாசிப்பவர்கள் வர்ணனைகளின் மூலம் என்னுடன் சேர்ந்து அந்த நகரத்தை சுற்றிப் பார்த்தார்கள் .அவர்களுக்கு சென்னையைத் தாண்டி வேறு உலகத்துக்கு அழைத்துச் சென்றது என் கதைகள் .அது மட்டுமல்ல..ஒவ்வொரு பத்திரிக்கைக்கும் அவற்றின் ரசிகர்களுக்கேற்ப வெவ்வேறு வகையான எழுத்து பாணியும் இருந்தது .அதையும் நான் கவனித்து பின்பற்றினேன் .முக்கியமாக எளிமையாகவும் புரியும்படியும் இருந்ததால் என் கதைகளுக்கு வரவேற்பு அந்தப் பத்திரிக்கைகளே எதிர்பாராத வண்ணம் அமோகமாக இருந்தது .

எப்படி உங்களால் இடைவிடாமல் எழுத முடிகிறது ? கதைகளுக்கு கரு எங்கிருந்து கிடைக்கிறது ?

அனைவருமே தங்களுக்குப் பிடித்தமான ஆர்வமான விஷயங்களில் நேரம் காலம் பார்க்காமல் ஈடுபடுவார்கள் .எனக்கு எழுத்து குறிப்பாக அறிவியலை வேறு கோணத்தில் ஆராய்ந்து எழுத பிடிக்கும் என்பதால் ஐம்பது வருடங்களாகியும் எழுத்தின் மீது கொண்ட நேசம் இன்னும் அப்படியே இருக்கு .

அடுத்து கதைக்கான கரு..நான் எப்போதும் அதிகம் புத்தகங்களை வாசித்ததில்லை..ஆனால் சுற்றியுள்ள மனிதர்களை வாசித்துள்ளேன் .அவர்களின் சிக்கல்களை கேட்டுள்ளேன் .அவற்றை எப்படித் தீர்ப்பது என்று சிந்திப்பேன் ஒரு பிரச்சினை அதற்கான தீர்வு..அவ்வளவுதான் .அது ஒரு சிறுகதையாகி விடும் .நான் பார்க்கும் அல்லது கேட்கும் சம்பவங்களே இதுவரை எனக்கு கதைக்கான கருவாக அமைகிறது .

சிறுகதையிலிருந்து கிரைம் நாவலுக்கு மாறியது எப்படி ?

1977-லிருந்து 80 வரை ஏராளமான சிறுகதைகள் மட்டுமே எழுதி வந்தேன் .ஒரு நாள் குமுதம் ஆசிரியர் ரங்கராஜன் சார் "மாலைமதிக்கு ஒரு நாவல் எழுதுங்கள்" என்றார் "இல்லை என்னால் முடியாது" என்றேன் "முடியும் உங்களால். உங்கள் கதைகளில் எப்படியோ பிரச்சினையும் அதற்கான தீர்வையும் சொல்லி விடும் திறமை இருக்கு .அதையே இன்னும் நான்கைந்து கதாபாத்திரங்கள் பல சம்பவங்கள் கடைசியில் எல்லாம் ஒன்றுடன் ஒன்று இணைந்து தீர்வுடன் கதையின் முடிவை எழுதுங்கள்..முழு நாவல் வந்துவிடும் ".என்று சொல்லி ஊக்கம் தந்தார் .முக்கியமாக ''ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு முடிச்சு வைத்து கதையை கொண்டு வந்து கடைசியில் மெயின் முடிச்சை இழுத்து கதையை முடியுங்கள் .நீங்கள் நாவலாசிரியர்'' என்றார் . .

குமுதம் நிறுவனர் எஸ் ஏ பி சாரும் என்னிடம் ஒரு சூத்திரம் கற்றுத்தந்தார் ."கதையை இரண்டு வெவ்வேறு ட்ராக்கில் கொண்டு போய் இரண்டையும் முடிவில் ஒன்றாக்குங்கள் .வாசகர்களுக்கு இரண்டு கதைகள் படித்த திருப்தி கிடைக்கும் .உங்களுக்கும் முழுவெற்றி கிடைக்கும்" என்றார் .இந்த இரண்டு பார்முலாவைதான் இன்றும் கடை பிடிக்கிறேன்.

நாவல் எழுத உத்திரவு கிடைத்தது ,ஆனால் என்ன எழுதுவது ? யோசித்தேன் .ஜெயகாந்தன் லட்சுமி இந்துமதி சிவசங்கரி போன்ற ஜாம்பவான்களின் வரிசையில் எனக்கு வந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டுமே ? அவர்கள் தொடாத சப்ஜெக்ட் எது என்று பார்த்தேன்..குடும்பம் உறவுகள் பாசம் பெண்ணுரிமை போன்றவைகள் மட்டுமே கதைக்கருவாய் வந்த சமயத்தில் கிரைம் சப்ஜெக்ட்டை தந்தால் என்ன? என்று ஆராய்ந்து எழுதியது தான் எனது முதல் நாவலான "வாடகைக்கு ஓர் உயிர்" ஆகும். .செயலற்றுப்போன இதயத்தை வேறு ஒரு இதயம் மூலம் இயங்க வைக்கும் ஒரு விஞ்ஞானி. இதுதான் கதையின் கரு இது 80-ம் வருடம் ஆகஸ்ட் மாதம் வந்தது . நான் கிரைம் சப்ஜெக்டை தேர்ந்தெடுத்தது இப்படித்தான்அந்த நாவல் வாசகர்களிடையே பெரும் பாராட்டுப் பெற்று என்னை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றது

அதே வருடத்தில் எழுத்துலகில் மிகப்பெரிய ஜாம்பவானான திரு .தமிழ்வாணனின் மறைவு கல்கண்டில் வெற்றிடத்தை ஏற்படுத்த அதை நிரப்ப நான்தான் தகுதியானவன் என்று முடிவு செய்து தொடர் எழுதும் வாய்ப்பும் வந்தது .நவம்பரில் கல்கண்டில் "ஏழாவது டெஸ்ட் டியூப்" எனும் தொடர் வந்தது .இதில் என்ன குறிப்பிட வேண்டும் என்றால் விஞ்ஞானக் கதையை எளிய இல்லத்தரசிகள் வரை புரிந்து படிக்கும்படியாக எளிமையாக தந்தேன் .இதுவே இன்றளவும் எனக்கான வெற்றியின் சூத்திரம் .இப்படித்தான் நான் கிரைம் நாவலுக்குள் வந்தேன் .

உங்கள் வெற்றியின் ரகசியம் ?

ரகசியம் எல்லாம் ஒன்றுமில்லை.எல்லோருக்கும் இதேதான் .ஒன்று அவரவரின் தனித்திறமையை புரிந்து அதை உத்வேகத்துடன் செயல்படுத்துவது .அதற்கான களத்தை விடாமுயற்சியுடன் அணுகுவது

அடுத்து மிக முக்கியமானது குடும்பத்தின் ஆதரவு .நான் ஆசிரியருக்குப் படித்திருந்தாலும் தந்தையின் தொழிலுக்கு உதவியாக வேலையை விட்ட போதும் என் ஆர்வம் முழுவதும் எழுத்தில் உள்ளது எனத் தெரிந்ததும் அதை ஊக்குவித்து என் உடன் இருந்ததும் என் பெற்றோரும் மனைவியும்தான் .இவர்களின் ஆதரவு இல்லாவிட்டால் இவ்வளவு பெரிய உயரத்தை அடைவது சாத்தியமற்றது .

இதோ.. இப்போது கஷ்டப்பட்டு எழுதிய என் எழுத்துக்கள் காலக்கிரமத்தில் அழிந்து போகாமல் பொன்னியின் செல்வன் போல் என்றும் நிலைத்திருக்க என் மகன் வங்கிப் பணியை விட்டு விட்டு தனியே பதிப்பகம் துவங்கி ஆங்கிலத்திலும் என் நாவல்களை வெளியிடுவது மகிழ்ச்சியாக உள்ளது .எனது பேரன் என் நாவலின் அட்டைப்படத்துக்கு ஓவியம் வரைவது அதனினும் உவகை தரும் விஷயம் .

இன்னும் ஒரு அதிமுக்கியமான ரகசியம் .என் வாசக ரசிக ரசிகைகள்.இவர்கள் இல்லையெனில் எங்கள் படைப்புகளுக்கு வெற்றி இல்லை வெளியான என் நாவல்களின் பட்டியலை மாதம் மற்றும் வருடத்துடன் என்னை விட மிகச்சரியாக வைத்திருக்கும் பெருமைமிகு ரசிகர்களை எண்ணி பெருமிதம் கொள்கிறேன் .

கிரைம் நாவல்களை பாமரரும் படிக்கும் வண்ணம் பாக்கெட்நாவல் மூலம் மாதந்தோறும் வெளியிட்டு பெருவாரியான ரசிக நெஞ்சங்களை கவர்ந்த ஜியே பப்ளிகேஷன் சகோதரர் அசோகன் , முதல் கதை வெளியிட்ட மாலைமுரசு ,என்னை பட்டை தீட்டிய குமுதம் நிறுவனர் ஆசிரியர் என் படைப்புகளை வெளியிடும் பத்திரிக்கைகள் என என் வெற்றி பல நெஞ்சங்களின் கூட்டு முயற்சி என்பதில் மகிழ்கிறேன் .

மேலும் சில எழுத்தாளர்கள் 'எல்லாமே எழுதிவிட்டோம் அடுத்து என்ன எழுதுவது' என்று ஒரு கட்டத்தில் தேங்கி நின்று இனி எழுதப் போவதில்லை என்று முடிவு செய்துவிடுவார்கள் .ஆனால் இருபது வயதில் என் கையில் பிடித்த பேனா. எழுபது வயதாகியும் இன்றும் வேகத்துடன் கற்பனை வளத்துடன் இயங்க காரணம் அந்தக் கடவுள் அருளே என்பதில் எனக்கு பெரும் நம்பிக்கை .இதுவே வெற்றிதானே .

நீங்கள் காதலை ஆதரிக்க மாட்டீர்கள் என்ற கருத்து நிலவுகிறதே ?

அப்படி அல்ல ..சரியான பருவத்தில் வரும் காதலை நான் ஆதரிப்பேன். கல்வியை முடித்து பொருளாதாரத் தேவையை நிறைவேற்றி ஒருவரையொருவர் புரிந்துகொண்டு பெற்றோர் சம்மதத்துடன் நடைபெறும் காதல் திருமணங்கள் நல்லதே .ஆனால் பள்ளிக்காதல், கல்லூரிகாதல் இப்படி நம்பி அனுப்பும் பெற்றோரின் மனதை வேதனைப்படுத்தி செய்யும் காதல்களைத்தான் கண்டிக்கிறேன் .வாழ்வில் நிலையற்ற தன்மையுடன் பெற்றோரின் கண்ணீரின் மேல் துவங்கும் வாழ்வு எப்படி சரியாக வரும் ? அறியாப்பருவ காதலினால் வாழ்க்கை பாதிக்கப்பட்டு வேதனைப்படும் நிறைய பெண்களை பார்த்துள்ளேன் .தேவையா இப்படிப்பட்ட காதல்கள் ? இதை சொல்லப்போக ராஜேஷ்குமார் காதலுக்கு எதிரி என்பதுபோல் கருதுகிறார்கள். நானே என் கதைகளில் காதலையும் கலந்துதானே எழுதுகிறேன் .காதல் வாழ்வின் பிரிக்க முடியாத அங்கம் .என் மனைவியை நான் காதலிக்கிறேன் .என் குடும்பத்தையும் எழுத்தையும் நேசிக்கிறேன் .

விஞ்ஞான வளர்ச்சியில் காணாமல் போகும் மாற்றங்கள், பண்புகள் குறித்து ?

வளர்ந்து விட்ட விஞ்ஞான முன்னேற்றத்தில் அனைவருமே காலத்திற்கேற்ப மாற வேண்டிய கட்டாயம் உள்ளது .அன்று வீட்டில் ஒரு லேண்ட் லைன் இருந்தாலே அவர்தான் செல்வந்தர் ..ஆனால் இன்று ? அன்று மண்பானைகள், விறகடுப்பு! இன்று குக்கர், காஸ் அடுப்பு ..அப்படித்தான் மாற்றங்களும் ..புற மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் நாம் அக மாற்றங்களையும் சகித்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதே உண்மை .

அன்று உறவுகள் அதிகம் உள்ள குடும்பங்களைத் தேடி பெண்ணைத் திருமணம் செய்து தந்தனர் .காரணம் பெண்ணுக்கு பாதுகாப்புடன் உறவுகளின் புரிதலும் கிடைக்கும் என்று! .ஆனால் இன்றோ பெற்றோர் உடன் இருந்தாலே முகத்தை சுளிக்கிறார்கள் .காரணம் கல்வியும் யாரையும் சார்ந்திராத பொருளாதார முன்னேற்றமும் .முக்கியமாக சகிப்புத்தன்மை குறைந்து விட்டது எனலாம் .அன்று பல கஷ்டங்களுக்கு இடையில் வளர்ந்த பத்துப் பிள்ளைகளும் பண்புடனும் எதையும் ஏற்கும் மனவலிமையுடனும் இருந்தனர் . ஆனால் இன்றோ.ஒரு பிள்ளைக்கு சகல வசதிகளும் இருந்தாலும் தோல்வியை ஏற்கும் மனவலிமையைக் கற்றுத்தர மறக்கின்றனர் பெற்றோர்.

நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள் .பண்புகள் தானாக மலரும் .பெருகி வரும் முதியோர் இல்லங்கள் குறித்து ..?

வருத்தப்படுகிறேன் ..இப்போது எங்கு பார்த்தாலும் முதியோர் இல்லங்கள் பெருகி வருவதற்கு முதல் காரணம் பெண்கள்தான். ஒரு ஆண் தன் பெற்றோரையும் மனைவியின் பெற்றோரையும் ஒரே மாதிரிதான் பார்ப்பான் .ஆனால் பெரும்பாலான பெண்கள் தன் மாமனார், மாமியாரை பெற்றோரை விட ஒரு படி கீழாகத்தான் பார்க்கிறாள் .வெறுக்கிறாள் .சில விதிவிலக்கான பெண்களும் உண்டு .அவர்களை நான் பாராட்டுகிறேன் .ஆனால் பெரும்பாலான பெண்களின் உதாசீனத்தினாலேயே முதியோர் இல்லங்களைத் தேடி தன் பெற்றோரை அனுப்பும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் ஆண்கள் .பெண்கள் மனது வைத்தால் முதியோர் இல்லங்கள் குறையும் .

இணையதளங்கள் சீரழிவுப்பாதைக்கு கொண்டு செல்கிறதா ?

கண்டிப்பாக இல்லை .எங்கோ ஒரு சில இடங்களில் நடக்கும் மோசடிகளை வைத்து ஒட்டுமொத்தமாக கூறுவது சரியல்ல .அனைத்திலும் நன்மையும் இருக்கு தீமையும் இருக்கு. .நன்மையை மட்டும் நாம் எடுத்துக்கொண்டால் இணையதளங்களினால் பெரும் முன்னேற்றமே கிடைக்கும் .என்னுடைய கதைகளுக்கு இணையதள ஆப் களின் மூலம் உலகமெங்கும் உள்ள லட்சக்கணக்கான வாசகர்களின்.வரவேற்பைப் பார்த்துதான் என் உயரத்தை நானே அறிய முடிந்தது. ஓ என் கதைகளை இவ்வளவு பேர் விரும்பி படிக்கிறார்களா?என்று என் மீது எனக்கே ஒரு பிரமிப்பு வந்தது . இதற்கு காரணம் இணையதளம். .ஆகவே நம்முடன் ஒன்றி விட்ட இணையதளங்களை ஒதுக்கி விடாமல் அதில் உள்ள நன்மைகளை மட்டும் நம் எதிர்காலத்திற்கும் புரியவைத்து முன்னேறுவோம் ..

சினிமாவில் உங்கள் கவனம் அதிகம் செல்லவில்லையே ?

அப்படி இல்லை .நிறையத் தொடர்புகள் இருந்தாலும் வாய்ப்புகள் நிறைய வந்தாலும் நானே அதை தவிர்த்து விடுவேன் ..இப்போது கூட இணையதளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற கதை, சினிமாவாக வந்தால் நன்றாக இருக்குமே என பலர் என்னிடம் கேட்கிறார்கள் .நான் இருப்பது கோவை .சினிமாவின் அடித்தளம் சென்னை .எனக்கு இப்போது இருக்கும் பெரும் புகழுமே போதும் என நினைக்கிறேன் .என் மனைவியும் குடும்பமுமே எனக்கு முக்கியம் .அவர்களை விட்டு சென்னைக்குப் போய் மாதக்கணக்கில் தங்குவது என்பதை விரும்பவில்லை .மேலும் என் கதைகளை மாற்றாமல் அப்படியே சினிமாவாக எடுக்க இயக்குனர்கள் முன் வந்தால் வரவேற்பேன் .சமீபத்தில் வந்த குற்றம் 23,சண்டமாருதம் ,சென்னையில் ஒருநாள் ,அக்கினிதேவி இப்படி என் கதைகளை மாற்றாமல் வந்த படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளன .இப்போது இயக்குனர் எழில் என் கதையை 'யுத்த சப்தம்' எனும் பெயரில் படமாக எடுத்து முடித்து விட்டார் .நன்றாக வந்துள்ளது . .நடிகர்கள் பார்த்தீபனும் கவுதம் கார்த்திக்கும் நடித்துள்ளனர் .

மேலும் சின்னத்திரையில் நிறைய வந்துள்ளதை அறிவீர்கள். ..கலைஞர் தொலைக்காட்சியில் ஐந்து வருடகாலம் சின்னத்திரை சினிமா எனும் தலைப்பில் என்னுடைய நாவல்கள் இரண்டு மணிநேரக் கதைகளாக ஒளிபரப்பாகி வரவேற்பை பெற்றது

ஒருவரின் சமூக அந்தஸ்தை தீர்மானிப்பது கல்வியும் பணமுமா அல்லது அவரின் நல்ல செயல்களா?

பணம் மட்டும் இருந்தால் மனம் நிறையுமா ? பணமும் புகழும் எல்லைக்குட்பட்டதே ..எல்லை மீறும் எதுவும் உங்களை அடிமையாக்கி விடும் .பணம் இருப்பவர்களுக்கு மேடைகளில் முன்னுரிமை இருக்கலாம் .ஆனால் அது நிலையானதல்ல .எனக்குத் தெரிந்து மிகப்பெரிய செல்வந்தரான ஒரு ஆளுமையின் இறப்பிற்கு கூடியவர்கள் வெறும் பத்தே பேர் ..காரணம் அவரின் செருக்கு கர்வம் ..ஆனால் இந்த சமூகம் நன்மை பெற காரணமாக இருந்தவர்கள் இறந்தபோது இந்த ஊரே அழுதது .உதாரணம் எங்கள் ஊர் ஐந்து ரூபாய் மருத்துவர் .இதுதான் உணமையான மரியாதை..பணம் என்பது வெயிலுக்கு சர்பத் போல ..அந்த நேரத்திற்கு மட்டும் ..ஆனால் என்றும் இனிக்கும் செயல்களை செய்தால் அதுதான் உண்மையான அந்தஸ்து .

இன்றும் விவேகானந்தரை நினைவு கூர்கிறோம். காரணம் அவர் செல்வந்தரா ? துறவி .ஆனால் அவர் நாட்டுக்கு நன்மையை விதைத்தார் .அதே போல் கலைஞர்களில் சமீபத்தில் மறைந்த கன்னட நடிகர் புனித்ராஜ்குமார் .நம் ஊர்க்கலைஞர் விவேக் ..இப்படி பணத்தையும் தாண்டி செய்யும் மனித நேயம்தான் மக்களின் மனதில் நிரந்திர மரியாதையைத் தரும் ..

எவ்வளவு பணம் இருந்தாலும் பசித்த வயிறு நான்கு இட்லிகளுக்கு மேல் கேட்பதில்லை .நான்கு பேருக்கு நன்மை செய்பவர்களைத்தான் இந்த உலகம் உச்சத்தில் வைக்கும் என்றும் மறவாமல் .

செல்போன் இப்போது வயது வித்தியாசமின்றி உபயோகத்தில் உள்ளதே ? இது சரியா ?

கண்டிப்பாக தவறுசிறு வயதுப் பிள்ளைகளுக்கு செல்போன் அவசியமற்றது .ஆண்ட்ராய்டு எனும் பெயரில் கண்ட கண்ட குப்பைகளை பிள்ளைகளின் மனதில் சேர்த்து அவர்கள் வாழ்வை அலங்கோலமாக்க வேண்டாம் .பெற்றோர்கள்தான் இதில் கவனம் வைக்க வேண்டும் .ஒரு வயது வரும்வரை செல்போன்களை தவிர்ப்பது அவர்களின் எதிர்காலத்திற்கு நல்லது .

ஒரு ஆசிரியர் மாணவனைக் கண்டிப்பது இப்போது அவசியமற்றதாக சொல்லப்படுகிறதே ? ஒரு ஆசிரியராக உங்கள் பதில்..

கண்டிப்பது என்பதும் ஒரு எல்லைக்குட்பட்டதே .மாணவர்களை அடிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை .சொல்லித் திருத்தலாமே தவிர அடிப்பது என்பது எந்த நல்ல விளைவையும் தராது .ஏதோ ஒரு பிரச்சினை இருப்பதாலேயே அந்த மாணவன் தவறை செய்கிறான் .பிரச்சினைக்கான காரணம் என்ன என்பதை அறிந்து அதை நீக்க முயற்சி செய்ய வேண்டுமே தவிர கடுமையைக் காட்டுவது தவறு .

பெண்கள் பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்படும்போது துணிவற்று தற்கொலையை நாடுவது குறித்து ..

தற்கொலை எந்த விசயத்திற்கும் தீர்வல்ல என்பதை ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு கற்றுத் தந்து வளர்க்க வேண்டும் .எதற்கு இருக்கிறது காவல் துறை ? துணிவாக சென்று புகார் தெரிவிக்க வேண்டும் .அந்தத் துணிவை பெண் குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும் நாங்கள் இருக்கிறோம் எனும் நம்பிக்கையை ஒவ்வொரு பெற்றோரும் பிள்ளைகளுக்குத் தர வேண்டும் .அதே சமயம் .ஆண் பிள்ளைகளுக்கு பெண்கள் மீதான மரியாதையை அவர்கள் பெற்றோர் சொல்லித் தரவேண்டும்.

நமது கேள்விகளுக்கு தன் பிசியான நேரத்திலும் பொறுமையாக பதில் தந்த கிரைம் மன்னருக்கு கல்கி ஆன்லைன் வாசகர்கள் சார்பில் நன்றிகள் கூறி விடைபெற்றோம் .

ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகரான ஈரோடு அருண் கூறியது:

பள்ளிப்பருவத்திலேயே ராஜேஷ்குமாரின் நாவல்களை விரும்பிப் படித்தவன் .இன்னும் தொடர்கிறேன் .எந்த நாவலும் இதுவரை சிறு சலிப்பைக் கூட தந்ததில்லை .விறுவிறுப்பான அவரின் எழுத்து நடை அவரின் ப்ளஸ் பாயின்ட்டுகளில் ஒன்று .வயது வித்தியாசமின்றி பல தரப்பினரும் படிக்கும்படி எழுதுவதில் வல்லவர் .கதைக்கேற்ற பொருத்தமான யாரும் எதிர்பாராத வண்ணம் தருவதில் திறமைசாலி .வித்தியாசமான கதைத் தலைப்புகள் தருவதில் மன்னர் .வாசகர்கள் பலரும் தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே நினைக்கிறோம் , சிறந்த ஆன்மீகவாதியும் கூட..இன்னும் பல சொல்லலாம் .என் ஆயுள் வரை அவரின் புதிய நாவல்களை படிக்க விரும்புகிறேன் .

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com