‘ஓம் நமோ நாராயணா’ எனும் எட்டெழுத்து மந்திரத்தை சம நீதியாக உலகறியச் செய்ய, கோயில் கோபுரத்தின் மீது ஏறி அனைவருக்கும் போதித்தவர் வைணவ ஆச்சாரியார் ஸ்ரீ ராமானுஜர். தீண்டாமையை ஒழிக்க அன்றே வித்திட்டவர். அழகு தமிழில் வேதத்தைப் பாசுரங்களாய் எழுதி, நம்மாழ்வாரின் பெயரை நிலைநாட்டியவர்.
இவர் வாழ்ந்து முடிந்து ஆயிரம் ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தை அடுத்துள்ள முச்சிந்தல் பகுதியில் உள்ள சின்ன ஜீயர் ஆசிரமத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் மிக பிரம்மாண்டமான சிலை அமைக்கப்பட்டுள்ளது.
பத்ம பீடத்தின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் ஸ்ரீ ராமாஜரின் சமத்துவச் சிலை, 216 அடி உயரத்தில் 1,500 டன் எடை கொண்ட ஐம்பொன்னால் நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த பிரம்மாண்ட சமத்துவச் சிலை குறித்த சில சிறப்புத் தகவல்கள்…
* ஸ்ரீ ராமானுஜரின் சிலையைச் சுற்றி 108 திவ்ய தேச பெருமாள் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
* இந்தச் சிலையில் 120 கிலோ தங்கம் சேர்க்கப்பட்டுள்ளது.
* கோயிலுக்குள் 200 கிலோ எடையில் தங்க சிலை ஒன்றும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
* 108 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு, நடுவே யானைகள் தாங்கி பிடிக்கும் வகையில் 54 இதழ்களுடன் 27 அடி உயரத்தில் பத்ம பீடம் (தாமரை) இரண்டு அடுக்குகளில் அமைக்கப்பட்டுள்ளது.
* இந்த இரண்டு அடுக்குகளிலும் 18 சங்கு, 18சக்கரங்கள் இடம் பெற்றுள்ளன.
* சிலை 108 அடி, பீடம் 108 அடி என 216 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தச் சிலை, உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஐம்பொன் சிலையாகும்.
* சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு அடுத்தபடியாக ஸ்ரீ ராமானுஜரின் சிலையே உயர்ந்த சிலையாகக் கருதப்படுகிறது.
* செயற்கை நீர் வீழ்ச்சி தூண், ஆன்மிக நூலகம், உணவகம், தியான வளாகமும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பு : இந்தக் கட்டுரையின் இறுதியில், வண்ணமிகு மின் ஒளியில் அக்னி ஜுவாலையாய் மிளிரும் ஸ்ரீ ராமானுஜர் திருச்சிலையை கண்டு தரிசியுங்கள்.
– தகவல் : எம்.கோதண்டபாணி