0,00 INR

No products in the cart.

புருஷாமிருக ஓட்டம்!

கே.பாலகிருஷ்ணன்

ரியும், சிவனும் ஒன்று என்பதை எடுத்துக்காட்டும் வகையில், குமரி மாவட்ட
சுற்று வட்டார பன்னிரெண்டு சிவாலயங்களை மகாசிவராத்திரி அன்று ஒரே நாளில் தரிசித்துப் பலனடைவதே சிவாலய ஓட்டம்
. மகாபாரதத்திலேயே இதைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

அரசு மக்கள் பரிபாலனம் சரிவர நடந்தேற ரிஷி, முனிவர்களின் ஆலோசனைப்படி ராஜசூய யாகம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டார் தருமபுத்திரர். அதற்கு ஏராளமாகச் செல்வங்களும், பொருட்களும் தேவைப்பட்டதால் அவற்றைச் சேகரித்து வர தனது நான்கு சகோதரர்களை திசைக்கொருவராக அனுப்பி வைத்தார்.

அதன்படி வடதிசை நோக்கிச் சென்ற பீமசேனன் அதற்கு அதிபதியான குபேரனை சந்தித்து, தமையனின் எதிர்பார்ப்பை முன்வைத்தான். குபேரனும் தனது தனாதிகாரி மூலம், ஒருநிபந்தனையுடன் செல்வங்களை வழங்கினான். தமது ராஜ்ஜியக் காவல் தெய்வமான புருஷாமிருகத்தைச் சந்தித்து அதன் அனுமதி பெற்ற பிறகே ஊர் எல்லையைத் தாண்டிப் போக முடியும். அது விதிக்கும் நிபந்தனையை மீறக் கூடாது என்பதே அந்த நிபந்தனை.

அது என்ன புருஷாமிருகம்? மனிதன் பாதி, விலங்கு மறு பாதி என இரண்டும் சேர்ந்ததாய் உருவானதாகும். அதாவது, உடலின் மேல்பாகம் மனித உருவம், கீழ்பாகம் புலி. கிரீடம், தாடி மீசையுடன் புன்னகைப் பூத்த முனிவர் முகம். சிவாலய கற்தூண்களில் இந்த சிற்பங்களைக் காணலாம். புருஷாமிருகம் ஆழ்ந்த சிவபக்தி கொண்டது. இரு புலிக்கால்களில் நின்று விலங்கு போல் முன்புறம் நீண்ட உடல், தூக்கிய வால், வலது கையில் தீபமும், இடது கையில் மணியும் ஏந்தி பூஜை செய்யும் கோலத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கும்.

பீமனும் அந்தக் காவல் அதிகாரியைச் சந்தித்து விவரங்களைக் கூறி, ராஜசூய யாகத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தான். அதை ஏற்றுக்கொண்டவர், மற்றொரு நிபந்தனையையும் விதித்தார். “எனக்கு முன்பாகச் சென்று நீ வழிகாட்ட வேண்டும். ஓடிக்கொண்டே இரு. சில நாழிகை நேரம் இடைவெளி விட்டு நான் பின்தொடர்ந்து வருவேன். உன்னை நான் மடக்கிப் பிடித்து விட்டால் உன்னைக் கொன்று விடுவேன். அதிலிருந்து தப்புவது உன் சாமர்த்தியம். சம்மதம் என்றால் செல்வங்களை எடுத்துச் செல்லலாம்!” என்றார்.

மது முயற்சி பலனளிக்குமா?’ எனக் குழம்பிய பீமன், ஆபத்பாந்தவன்
ஸ்ரீ கிருஷ்ணனை நினைத்து வேண்டினான்
. அவன் முன் தோன்றிய கிருஷ்ணன், “பீமசேனா, உன் மனக் குழப்பம் புரிகிறது. ஆனாலும், தயங்காமல் இந்தச் சவாலை ஏற்றுக்கொள். புருஷாமிருகம் ஒரு சிறந்த சிவ பக்தன். சிவ நாமமே அவன் உயிர் மூச்சு. அதை வைத்தே நீ உன்னைக் காப்பாற்றிக்கொள்ள ஓர் உபாயம் சொல்கிறேன். ஈஸ்வரனுக்கு உகந்த பன்னிரெண்டு ருத்ராட்சங்களைத் தருகிறேன். அவற்றைப் பாதுகாப்பாக இடையில் கட்டிக்கொண்டு, செல்வப் பெட்டகத்துடன் ஓடுவதற்குத் தயாராகி விடு. புருஷாமிருகம் நெருங்கி வரும்போது ஒரு ருத்ராட்சத்தை கீழே போடு. உடனே அது சிவலிங்கமாக மாறி விடும். ஈசனை முறையாக ஆராதிக்காமல் அங்கிருந்து புருஷாமிருகம் மேலே நகராது. அதனால் இன்னும் சிறிது தொலைவு
நீ கடந்து விடலாம்
. இப்படியாக எல்லா ருத்ராட்சங்களையும் சமயோஜிதமாக உபயோகித்து, புருஷாமிருகத்திடமிருந்து தப்பிக்கவும், எல்லையைக் கடந்து செல்லவும் முயற்சி செய். மனதைத் தளர விடாதே!” என அறிவுரை வழங்கினார்.

அவர் சொற்படியே பீமனும், “ஈஸ்வரா, கோவிந்தா, கோபாலா” என்று உச்சரித்தவாறே ஓடத் துவங்கினான். சில நாழிகை இடைவெளி விட்டு புருஷாமிருகமும் அவனைத் துரத்த ஆரம்பித்தது. மனிதனின் ஓட்டம், புலியின் பாய்ச்சல் வேகத்துக்கு ஈடாகுமா? விரைவில் அது பீமனை நெருங்கிவிட, முதல் ருத்ராட்சத்தை அவன் கீழே நழுவ விட்டான். கிருஷ்ணன் சொன்னவாறே எல்லாம் நடந்தது. தனக்கு முன் சிவலிங்கம் இருப்பதைக் கண்ட புருஷாமிருகம் அருகிலிருந்த நீரோடையில் நீராடி முறையாக பூஜை செய்யலாயிற்று. அந்த இடைவெளி நேரத்தைச் சாதகமாக்கிக் கொண்டு அதிக தூரம் முன்னேறினான் பீமன்.

ப்படியாக, பன்னிரெண்டு ருத்ராட்சங்களையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ஓடினாலும், பீமனின் கால்கள் வலுவிழந்து தளர்ச்சி அடைய, வேகம் குறையலாயிற்று. தன்னைக் கட்டுப்படுத்த ஏதோ சதி நடக்கிறது என்பதைப் புரிந்துகொண்டாலும், ஈசனை வழிபடாமல் தாண்டிச் செல்ல புருஷாமிருகத்தால் முடியவில்லை. எப்படியும் பீமனை எல்லைக்குள் மடக்கிப் பிடிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் பாய்ந்துத் துரத்தியது. ஊர் எல்லை நெருங்கி வர, பீமன் தனது சக்தி அனைத்தையும் உபயோகித்து எல்லையைத் தாண்டித் தனது இடது காலை வைத்த தருணத்தில், பின்னால் சீறிப் பாய்ந்து வந்த புருஷாமிருகம் அவன் வலது காலைக் கெட்டியாகக் கவ்விக் கொண்டு, “பீமா, நீ தோற்றுவிட்டாய். பந்தய விதிமுறைப்படி உன்னைக் கொன்று உண்ணப் போகிறேன்!” என்றது.

பீமனோ, தான் எல்லையைத் தாண்டிவிட்டேன் என்பதில் பிடிவாதமாக இருந்தான். இறுதியில் மூன்றாவது நபர் ஒருவரின் தீர்ப்புக்கு இருவரும் இணங்கிப்போக சம்மதிக்க,
ஸ்ரீ கிருஷ்ணனை நினைவு கூர்ந்தனர். ஆனால் ஸ்ரீ கிருஷ்ணனோ, “தீர்ப்பு கூற ஏற்றவர் தர்மநெறி தவறாத யதிஷ்டிரர்தான்” எனக் கூறினார். தருமரும் விரைவில் அங்கு வந்து சேர்ந்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த தருமர், “குபேர எல்லைப் பாதுகாவலர் புருஷாமிருக தேவரே, பாண்டு புத்திரன் யுதிஷ்டிரனின் வணக்கத்தை ஏற்றுக்கொள்வீராக. இதோ உங்களுக்கான தீர்ப்பைக் கூறுகிறேன். பீமன் உடலின் ஒரு பாதி எல்லைக்கு உள்ளேயும், மறுபாதி வெளியேயும் இருப்பதால் புருஷாமிருக தேவர் அவர் பக்கமிருக்கும் உடல் பகுதியை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால், அப்படிச் செய்யும்போது மற்றொரு பகுதிக்கு எவ்விதச் சேதமும் நேரக்கூடாது!” என்றார்.

அது முடியாத காரியம் என்பதை நன்கு உணர்ந்த புருஷாமிருகம், தனது சகோதரன் என்றும் பாராமல் சிறந்த தீர்ப்பை வழங்கிய தருமனை பாராட்டி, அனைத்துச் செல்வங்களையும் பீமன் எடுத்துச் செல்லலாம் என அனுமதி வழங்கி, தான் ராஜசூய யாகத்தில் பங்கு பெறவும் சம்மதம் தெரிவித்தார்.

ஸ்ரீ கிருஷ்ணனின் பங்கு அத்துடன் நின்றுவிடவில்லை. அவர்களை அந்தப் பன்னிரெண்டாம் ருத்ராட்சம் விழுந்த இடத்துக்கு அழைத்துச் செல்கிறார். அதேசமயம் அவரும் அங்கிருந்து மறைய, அவ்விடத்திலிருந்த லிங்கத் திருமேனிக்குப் பின்புறம் சங்கரநாராயணர் திவ்ய காட்சியளித்தார். அரியும் அரனும் ஒருவரே என்பதை புருஷாமிருகருக்கு மட்டுமில்லாமல்; உலகுக்கே உணர்த்தி விட்டார்.

இதன் பின்னணியில்தான் மகாசிவராத்திரி அன்று குமரி மாவட்டத்தில் பக்தர்கள், கண்ணன் அளித்து, பீமன் கீழே நழுவ விட்ட பன்னிரெண்டு ருத்ராட்சங்களிலிருந்து உருவெடுத்த பன்னிரெண்டு லிங்கத் திருமேனிகளைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்ட பன்னிரெண்டு சிவாலயங்களை, ‘கோவிந்தா, கோபாலா’ என முழங்கியவாறு பன்னிரெண்டு மணி நேரத்தில் ஓடி தரிசித்து முடிப்பது, ‘சிவாலய ஓட்டம்’ என அறியப்படுகிறது.

வரிசைக்கிரமமாக அந்தச் சிவாலயங்கள் : திருமலை, திக்குறிச்சி, திப்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்னிப்பாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதங்கோடு, திருபன்றிக்கோடு, திருநட்டாலம் என்பன ஆகும். மகாசிவராத்திரி அன்று ஸ்ரீ சங்கரநாராயணரை தியானித்து அவர் தாள் பணிவோம்.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

வாழவைக்கும் வைத்திய நரசிம்மர்!

0
- ராமசுப்பு ‘ஸ்ரீ நரசிம்மர்’ என்ற சிங்கமுக அவதாரம் தனிச் சிறப்பு வாய்ந்தது. பிறப்பின்றி ஒரு நொடிப்பொழுதினிலே தனது பக்தன் பிரஹலாதனைக் காப்பாற்றவும், அதேசமயம் ‘பகவான் விஷ்ணு அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்து இருக்கிறார்’ என்று...

கடன் தீர்க்கும் கயிலைநாதர்!

0
- பழங்காமூர் மோ.கணேஷ் ‘கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்பது ஆன்றோர் வாக்கு. கடன் தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு மிகச்சிறந்த பரிகாரத் தலமாகத் திகழ்கிறது திருவண்ணாமலை மாவட்டம், பெரணம்பாக்கம் ஸ்ரீ ருணஹரேஸ்வரர் திருக்கோயில். வாழைப்பந்தலில் அன்னை பராசக்தியின்...

சிவா-விஷ்ணு கோபம் தணித்த சாந்ததுர்கா!

0
- லதானந்த் துர்கையம்மன் கோபத்துடன் அரக்கர்களை அழிப்பவர் என்பது பொதுவான கருத்து. ஆனால், கோவாவில் எழுந்தருளியிருக்கும் துர்கையம்மன் சாந்தமே வடிவானவர். அதனால் இவர், ‘சாந்ததுர்கா’ என அழைக்கப்படுகிறார். உள்ளூர் மக்கள் இந்த அம்மனை, ‘சாந்தேரி’...

கஜாரூடராகக் கந்தவேலன்!

0
- பழங்காமூர் மோ.கணேஷ் குன்றுகள் என்றாலே குகனுக்கு குதூகலம்தான். அந்தக் குன்றுகளில் குமரன் புரிந்த விளையாடல்களோ ஏராளம். அதிலும் கந்தன் வள்ளியை மணம் முடித்த தணிகாசலமும், அதையொட்டி வள்ளி கல்யாணத்திற்கு தொடர்புடைய திருத்தலங்களும் எண்ணற்றவை....

பிரம்மா வணங்கிய ஸ்ரீ மங்கேஷி!

0
- லதானந்த் எழில்மிகு கடற்கரைகள், நீர் விளையாட்டுக்கள், பன்னாட்டு உணவுகளைத் தரும் உணவகங்கள் என சுற்றுலா பயணிகளை வெகுவாகக் கவரும் கோவா மாநில வட பகுதியில், பாண்டா தாலுகாவின் மங்கேஷி கிராமத்தில் ஆன்மிக அருள் பரப்பி...