0,00 INR

No products in the cart.

ஸ்ரீராம நவமி துளிகள்!

– எஸ்.ராஜம்

* கும்பகோணம், ஸ்ரீ ராமஸ்வாமி கோயிலில் ஸ்ரீராம நவமி உத்ஸவம் பத்து நாட்கள் தேர்த்திருவிழாவுடன் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இக்கோயிலில் ஸ்ரீராமபிரான் சீதா தேவியுடன் ஒரே ஆசனத்தில் அமர்ந்த நிலையில் பட்டாபிஷேகத் திருக்கோலத்தில் சாளக்ராம மூர்த்தியாக தரிசனம் தருகிறார். கோதண்டத்தை ஏந்தி லட்சுமணனும், வெண்சாமரம் வீசும் நிலையில் சத்ருக்னனும், வெண்கொற்றக்குடை பிடித்தபடி பரதனும் உடன் காட்சி தருகின்றனர்.

* ராமேஸ்வரம் – தனுஷ்கோடி சாலையில், மன்னார்வளைகுடா நடுவிலுள்ள தீவில்
ஸ்ரீ கோதண்டராமர் எழுந்தருளியுள்ளார். ராமரின் காலடியில் விபீஷணன் காணப்படுகிறார். இங்கு அனுமனுக்கு, ‘பரிந்துரைத்த அனுமன்’ என்று பெயர். வீபீஷனனை ஏற்றுக்கொள்ள ராமரிடம் பரிந்துரைத்ததால் இப்பெயர் அனுமனுக்கு வந்தது.

* தஞ்சை அருகிலுள்ள திருவெள்ளியங்குடியில் ராமர் கோலவில்லிராமர் என்று மூலவராகவும், சிருங்கார சுந்தரர் என்ற உத்ஸவராகவும் தரிசனம் தருகிறார்.
கண் நோய்களை இந்த ஸ்ரீராமர் தீர்ப்பதாக நம்பிக்கை.

* மகாராஷ்டிர மாநிலம், நாசிக் அருகேயுள்ள பஞ்சவடியில் காலாராம் மந்திரில் ஸ்ரீராமர் மீசையுடன் காட்சி அளிக்கிறார். இக்கோயில் கருவறையில் கருங்கல் மேடையில் ராமர், சீதை, லட்சுமணன், அனுமன் சிலைகள் கண்ணாடி போன்று கருங்கல்லால் வடிக்கப்பட்டுள்ளன. ராமர் பொன்வண்ண மீசை, கையுறை அணிந்து காட்சி அளிக்கிறார்.

* சென்னையை அடுத்த திருவள்ளூரில் ஸ்ரீராமபிரான் வைத்திய வீரராகவனாகக் காட்சி தருகிறார். ஒவ்வொரு அமாவாசையன்றும் இவரை தரிசித்தால் நோய்கள் நீங்கும். கோயில் திருக்குளத்தில் வெல்லம் கரைப்பதாக வேண்டிக்கொண்டால்
தோல் நோய்கள் தீர்ந்து விடுமாம்.

* காசி விஸ்வநாதர் கோயிலில் மாலை வழிபாட்டின்போது சப்தரிஷி பூஜை சமயத்தில் வில்வ தளங்களில் சந்தனத்தால் ராம நாமம் எழுதி விஸ்வநாதருக்கு சமப்பிக்கின்றனர்.

* ஆந்திர மாநிலம், பத்ராசலத்தில் சீதா தேவியை மடியில் அமர்த்தியபடி ஸ்ரீராமபிரான் சங்கு, சக்கரம் ஏந்தி காட்சி தருகிறார்.

* கர்நாடக மாநிலம், ஹிரேமகளூரில் ஸ்ரீராமன் சீதையின் கையைப் பிடித்தபடி காட்சி தருகிறார்.

* தஞ்சை மாவட்டம், திருப்புள்ளம்பூதங்குடியில் ஸ்ரீ ராமர் நான்கு திருக்கரங்களோடு காட்சி தருகிறார். சங்கு, சக்கரம் ஏந்தி, சயனக் கோலத்தில் இவர் காட்சி தருவது சிறப்பு.

* ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையத்தில் ஸ்ரீ கோதண்டராமர் வில் ஏந்தி காட்சி தருகிறார். இங்கு சீதா தேவிக்கு வெள்ளிக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி பன்னிரெண்டு முறை வலம் வந்தால் மாங்கல்யப் பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

* சென்னை, மடிப்பாக்கம் ராம் நகரில் அமைந்த ஒப்பிலியப்பன் கோயிலில் ஸ்ரீராமர், சீதை, பரதன், லட்சுமணன், சத்ருக்னனுடன் பட்டாபிஷேகக் கோலத்தில் அமர்ந்தபடி அருள்பாலிக்கிறார்.

* காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழியில் ஸ்ரீராமர் விஜயராகவப் பெருமாளாகக் காட்சி தருகிறார். தாயார் மரகதவல்லி குழந்தைப் பேறு அருள்வதில் மிகவும் வரப்ரசாதி.

* அயோத்தி, சரயூ நதிக்கரையில் சிறிய ராமர் கோயில் உள்ளது. அந்தக் கோயிலில் உள்ள ராமர் சிலை, தமிழகத்திலுள்ள ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி என்ற இடத்தில் மண்ணுக்குள்ளிருந்து கண்டெடுக்கப்பட்டதாகும்.

* மதுராந்தகத்தில் ஸ்ரீராமபிரான் சீதையின் கையைப் பிடித்தவாறு காட்சி தருகிறார். இடது புறம் லட்சுமணன் நின்ற கோலத்தில் உள்ளார். விபாண்டக மகரிஷிக்கு தனது திருக்கல்யாண கோலத்தை ராமபிரான் காட்டியருளிய தலமிது.

* சென்னை அருகேயுள்ள திருநின்றவூரில் ஒரு ஏரி காத்த ராமர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆறு அடிக்கு மேல் உயரமுள்ள ராமர், சீதை, லட்சுமணன் சிலைகள் உள்ளன. அவர்களுக்கு எதிரே இரண்டு பெரிய நிலைக்கண்ணாடிகள் வைக்கப்பட்டுள்ளன. ஒரு கண்ணாடியில் பார்த்தால் ராமரும் சீதையும் மட்டுமே தெரிகின்றனர். மற்றொரு கண்ணாடியில் பார்த்தால் ராமரும் லட்சுமணனும் மட்டுமே தெரிகின்றனர்.

* கேரள மாநிலம், திருச்சூர் வடக்குநாதர் சுவாமி கோயிலில் ஸ்ரீராமர் சங்கு, சக்கரத்துடனும் கதையை ஏந்தியபடியும் காட்சி தருகிறார்.

* ஸ்ரீராமபிரான் ராவணனை வதம் செய்த தோஷம் தீர ராமேஸ்வரத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்கிறது புராணம். அதற்கு முன் இலங்கையிலும் ஸ்ரீராமன் சிவலிங்கம் நிறுவி வழிபட்டார். அந்த இடங்கள் முன்னீஸ்வரம், மணவாரி, கோகலிங்கம், திருச்சேதீஸ்வரம் என்பனவாகும். இங்கெல்லாம் ஸ்ரீராம நவமி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

* சென்னை அருகேயுள்ள திருநீர்மலையில் அரங்கன், நீர்வண்ணன், சாந்த நரசிம்மன், உலகளந்த பெருமாள் எனப் பல பெருமாள் திருமூர்த்தங்கள் எழுந்தருளியிருந்தபோதும், வால்மீகி முனிவருக்கு தன் பிரிய தெய்வம் ஸ்ரீராமனுக்கு ஒரு சன்னிதி இல்லையே என்று ஏக்கம் தோன்றியதாம். அவரே தமது கைகளால் ஸ்ரீராமபிரானுக்கு ஒரு சன்னிதி அமைத்துப் பிரதிஷ்டை செய்து, ‘கல்யாணராமன்’ என்று பெயர் சூட்டினாராம். அதனால்தான் இங்கு அடிக்கடி கல்யாணங்கள் நடைபெறுகின்றன.

ஒரே ஸ்லோகத்தில் சுந்தர காண்டம்!

‘யஸ்ய ஸ்ரீ ஹனுமான் அனுக்ரஹ பலாத் தீர்ணாம்புதிர் லீலயா
லங்காம் ப்ராப்ய நிசாம்ய ராம தயிதாம் பங்க்த்வா வனம் ராக்ஷஸான்|
அக்ஷாதீன் விநிஹத்ய வீக்ஷ்ய தசகம் தக்த்வா புரீம் தாம் புந:
தீர்ணாப்தி: கபிபிர்யுதோ யம் அனமத் தம் ராமச்சந்த்ரம் பஜே||’

பொருள் : எவருடைய அனுக்ரஹ பலத்தினால் ஸ்ரீ ஹனுமார் கடலை விளையாட்டாகக் கடந்து, இலங்கையை அடைந்து, ராமருடைய பிரிய மனைவியான சீதா தேவியைப் பார்த்து, அறுதல் சொல்லி, ராவணனுடைய அசோக வனத்தை அழித்து, அக்ஷன் முதலான ராக்ஷதர்களை வதம் செய்து, தசக்ரீவனான ராவணனைப் பார்த்து, அவனுக்கு நல்ல புத்தி சொல்லி, அவன் கேட்காமல் ஹனுமாருடைய வாலில் தீயை வைத்தபோது, அந்த தீயினாலேயே இலங்கையை எரித்து விட்டு, மீண்டும் கடலைக் கடந்து, வானரர்களோடு வந்து, எந்த ராமரை வணங்கினாரோ, எவருடைய அனுக்ரஹ பலத்தினால் இங்கே இருந்து கிளம்பி, இவ்வளவு கார்யங்களையும் பராக்ரமத்தோட செய்து முடித்து,  மீண்டும் வந்து வானரர்களோடு கூட ராமரை வணங்கி சீதா தேவியின் சூடாமணியைக் கொடுத்து அவர் மனதை  சந்தோஷப்படுத்தினாரோ, அந்த ராமரை பூஜிக்கிறேன்.

இந்த ஸ்லோகத்தை தினமும் கூறி வந்தால் சுந்தர காண்டம் முழுவதும் பாராயணம் செய்ததற்கு ஈடாகும்.

நவ பக்தியில் ராமாயணக் கதாபாத்திரங்கள்!

சிரவணம் – அனுமன், கீர்த்தனம் – வால்மீகி, ஸ்மரணம் – சீதை,
பாதசேவனம் – பரதன், அர்ச்சனம் – சபரி, வந்தனம் – விபீஷணன்,
தாஸ்யம் – லஷ்மணன், ஸக்யம் – சுக்ரீவன், ஆத்மநிவேதனம் – ஜடாயு.

– சங்கரி வெங்கட், சென்னை

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

கதம்பமாலை

0
தொகுப்பு : நெ.இராமன் சனி பகவானுக்கு பாகற்காய் மாலை! வேலூர் மாவட்டம், வன்னிவேடு அகத்தீஸ்வரர் ஆலயத்தில் சனி பகவானுக்கு 17 பாகற்காய்களை மாலையாகக் கோர்த்து சாத்தி வழிபடுகின்றனர். அதனால் வீடு கட்ட ஏற்படும் தடைகள் விலகுவதாக...

பௌர்ணமியில் அம்பிகை பூஜை!

2
- பொ.பாலாஜிகணேஷ் முழு நிலவு காணும் பௌர்ணமி தினங்களில் அம்பிகையை வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது என்று சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். ஸ்ரீ சக்ர நாயகியான ஆதிபராசக்தி பதினாறு நித்யைகளாக மகா...

வெற்றிக்கு வித்திட்ட பணிவு!

1
- ஜி.குமார் விடிந்தால் இன்றும் யுத்தம். ராவணனின் புதல்வன் மேக்நாத்தை லக்குவணன் நேருக்குநேர் இன்று சந்திக்க வேண்டும். இதுவரை மேக்நாத் யாராலும் தோற்கடிக்கப்படவில்லை. கும்பகர்ணன் வீழ்ந்தாலும் இந்திரனையும் வென்ற தன் மைந்தன் மேக்நாத்தின் பராக்கிரமத்தை...

சுபகிருது தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

0
கணிப்பு : கி.சுப்பிரமணியன் (8610023308) பொதுப்பலன்கள் தமிழ் புத்தாண்டு சுபகிருது வருஷம் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி 2022 அன்று சுக்ரனுடைய பூர நட்சத்திரத்தில் தொடங்குகிறது. சுபகிருது என்று சொன்னால் எல்லோருக்கும் நல்ல சுபத்துவத்தைக் கொடுக்கக்கூடிய ஆண்டு...

பரிகாரங்கள் பத்து!

0
- அபர்ணா சுப்ரமணியம் புற்றுநோயை குணமாக்கும் தல விருட்சம்! திருப்பராய்த்துறை மூலவர் பராய்த்துறைநாதர் அமர்ந்துள்ள கருவறைக்குப் பின்புறம் பராய் மரம் உள்ளது. புற்று நோய் மற்றும் எளிதில் குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் செவ்வாய்க்கிழமைதோறும் இந்த...