விபூதி தரிக்கும் விதம்!
கோயிலில் விபூதியை வாங்கும்போது ஒன்றைக் கையை மட்டும் நீட்டி வாங்கக் கூடாது. வலக்கையின் கீழே இடக்கையைச் சேர்த்து வைத்து விபூதியை வாங்க வேண்டும். விபூதியை இடக்கையில் கொட்டி, அதிலிருந்து மறுபடி எடுத்துத் தரித்தல் கூடாது. வலக்கையில் பெற்றுக்கொண்ட விபூதியை அப்படியே நெற்றியில் தரிப்பது நலம். அவ்விதம் செய்ய இயலாவிட்டால் ஒரு சிறு தாளில் விபூதியை இட்டு அதிலிருந்து எடுத்துத் தரிக்கலாம்.
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் சொற்பொழிவிலிருந்து…
– நெ.இராமன், சென்னை
மனக்கட்டுப்பாடு வேண்டும்!
திறமைகளை வளர்த்துக்கொள்வதால் மட்டும் வாழ்க்கையில் நாம் வெற்றி பெற முடியாது. மனதை அமைதியாக வைத்திருக்க வேண்டும். இல்லாவிடில் நமது திறமைகளைக் கூட நம்மால் முழுமையாகப் பயன்படுத்த முடியாது போய்விடும். ‘வாழ்வில் வெற்றி பெறுவது எப்படி?’ என்ற நூலை எழுதி புகழும் செல்வமும் சம்பாதித்த ஒரு எழுத்தாளர் இறுதியில் தற்கொலை செய்து கொண்டதை நாம் அறிவோம். வாழ்வில் வெற்றி பெறுவது குறித்து எழுதுவதாலோ, படிப்பதாலோ, சொற்பொழிவு ஆற்றுவதாலோ ஒரு பயனும் இல்லை. மனதை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரவில்லை என்றால் மேற்கூறிய திறமைகள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராய் போய்விடும்.
மாதா அமிர்தானந்தமயி கூறியதிலிருந்து…
– ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்
விளம்பரம் வேண்டாமே!
என்னைப் பற்றிய விளம்பரங்கள் எதற்காக? விளம்பரம் செய்வதால் யாரையும் பெரியவனாக்கி விட முடியாது. இறைவன் யாரைப் பெரியவனாக்குகிறானே அவன் காட்டில் இருந்தாலும் அவனைத் தேடி எல்லோரும் வந்து விடுவார்கள். அடர்ந்த காட்டிலும் பூ பூப்பதை தேனி எப்படியோ அறிந்து விடுகிறதல்லவா? அதுபோல்.
– ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர்
குதர்க்கம் கூறாதீர்!
எவன் ஒருவன் பிறர் மீது குறை கூறிக் கொண்டு குதர்க்கம் செய்கிறானோ, அவன் என் உள்ளத்தைத் துவைத்து காயப்படுத்துகிறான். எவன் எல்லா துன்பங்களையும் பொறுமையுடன் தாங்கிக்கொண்டு என்னைச் சரண் அடைகிறானோ அவனே என்னை மிக மிக அதிகமாக மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறான்.
– பகவான் ஷீரடி சாயிபாபா
துன்பத்தின் இருப்பிடம்!
பணம் எப்போதும் துன்பத்தின் இருப்பிடம். சம்பாதிக்கும்போதும் சரி, சேமிக்கும்போதும் சரி, தானம் கொடுத்தாலும் சரி, செலவிட்டாலும் சரி, அது துன்பத்தையே தருகிறது. பணம் இன்பத்தைத் தருவதாக எந்த அறிவாளியும் கண்டதில்லை.
– ஸ்ரீ ஆதிசங்கரர்
– எஸ்.மாரிமுத்து, சென்னை