0,00 INR

No products in the cart.

ஆடி அம்மன் வழிபாடு!

– மகாலட்சுமி சுப்பிரமணியம்

டி மாதம் ஸ்ரீ அம்பாளுக்கும், ஸ்ரீ ஆண்டாளுக்கும் மிகவும் விசேஷமானதாகும். ஆடி செவ்வாய், ஆடி வெள்ளியில் அம்மன் கோயில்களில் புற்றுக்குப் பால் தெளித்து, அம்மனை வழிபடுவது வழக்கம். ஆடித் தபசு, ஆடித் தீமிதி, ஆடிப்பூரம், ஆடி பதினெட்டாம் பெருக்கு போன்றவை அம்பாளுக்கு மிகவும் விசேஷமான நாட்களாகும். இன்று அம்பாளுக்கு மாவிளக்கு போடுவதும், குத்துவிளக்கு பூஜை செய்வது, எலுமிச்சை தீபம் ஏற்றுவது சிறப்பு.

செவ்வரளி பூக்களை மாலையாகத் தொடுத்து ஸ்ரீ விஷ்ணு துர்கைக்கு அணிவித்து அர்ச்சனை செய்து வழிபட, கன்னிப் பெண்களுக்குத் திருமணமும், குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியமும் கிட்டும். கோயில்களில் ஆடிப்பூரத்திற்கு மூன்று நாட்கள் முன்னதாகவே பாசிப் பயிறை நீரில் நனைத்து விடுவர். ஆடிப்பூரத்தன்று பயிறு நன்றாக முளை விட்டு விடும். இந்தப் பயிறை அம்மனுக்கு நைவேத்தியம் செய்து, குழந்தைப் பேறில்லாத பெண்களுக்குப் பிரசாதமாகத் தருவர். ஆடிப்பூரத்தன்று திருவண்ணாமலையில் ஸ்ரீ அபிதகுசலாம்பிகைக்கு கோயில் பிராகாரத்திலேயே நெருப்பு மூட்டி, தீ மிதி விழா நடைபெறும்.

அக்காலத்தில் ஆடி மாதத்தில் மருந்துக் கஞ்சி தயாரிக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. அதிமதுரம், சீரகம், சிவப்பு வெங்காயம், திரிகடுகு, திப்பிலி, குன்னிவேர், உழிஞ்சை வேர், சீற்றாமுட்டி, கடலாடி வேர் ஆகியவற்றை சமமாக எடுத்து, தைத்த துணிப்பையில் கட்டி, அதைப் பழைய அரிசியில் இட்டு, கஞ்சி வைத்து, துணிப்பையைப் பிழிந்து பின் கஞ்சியை அருந்துவர். இதுவே மருந்துக் கஞ்சி. ஆடிக் காற்று காரணமாக ஏற்படும் இருமல், மூச்சுத் திணறுதல் போன்ற பிரச்னைகளிலிருந்து நிவாரணம் பெற இந்தக் கஞ்சி நல்ல மருந்தாக விளங்குகிறது.

ஆடி மாதம் காற்று அதிகமாக வீசும். இது தொற்று நோய்களைப் பரவச் செய்துவிடும். இதைத் தடுக்கும் ஆற்றல் எள் எண்ணெய் தீபத்துக்கு உண்டு. எள் எண்ணெயில் இரும்புச் சத்து உள்ளது. இந்த எண்ணெயை ஊற்றி தீபம் ஏற்றும்போது அது சூடாகி பிராண சக்தியை அதிகப்படுத்தும் இந்தப் பிராண சக்தி தொற்றுநோய் எதிர்ப்புச் சக்தியை நமக்குத் தரும். எனவே, ஆடி மாதம் அடிக்கடி எள் தீபம் ஏற்ற வேண்டும்.

தேபோல், ஆடி மாதத்தில் செய்யப்படும் துளசி வழிபாடு அரிய பலன்களைத் தரும் என்பது நம்பிக்கை. ஆடி மாதம் வளர்பிறையில் தொடங்கி, துவாதசி வரையில்  துளசியை வணங்கி வழிபட்டு வர, வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும்; ஆயுள் வளரும். திருமணத் தடை போக்கும் ஆடிக் கிருத்திகை, நதிக்கு நன்றி கூறும் ஆடிப்பெருக்கு என ஆடி மாதம் முழுவதும் சிறப்புதான்.

கிருஷ்ணகிரி மாவட்டம்,  ஒசூர் ரெயில் நிலையத்துக்கு அருகே காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. இங்கு அம்மனுக்கு பெண் குழந்தைகள் அபிஷேகம் செய்யலாம். அம்பாளுக்கு ஏலக்காய் மாலை சாத்தி பிரார்த்தித்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.

கும்பகோணம் ஸ்ரீ சாரங்கபாணி கோயிலில் ஆண்டாளுக்கு ஆடிப்பூர உத்ஸவம் மூன்று நாட்களுக்கு வெகு விமரிசையாக நடைபெறும். உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் ஆலயத்தில் உதங்க முனிவருக்கு ஐவண்ணங்காட்டி அருளியதன் நினைவாக பஞ்சப்பிராகார விழா நடைபெறுகிறது.

கொடுமுடி மகுடேஸ்வரர், வீரநாராயணப் பெருமாள் கோயிலில் ஆடி பதினெட்டில் மும்மூர்த்திகளும் காவிரிக்கு எழுந்தருள்வதாக ஐதீகம். அன்று இரவு பச்சை மண்ணில் பானை செய்து, மாவிளக்கு, காதோலை, கருகமணி, தேங்காய், பழம் ஆகியவற்றை வைத்து ஆற்றில் விட்டு வணங்குவர்.

ஆடிப்பூர விசேஷ நாளன்று ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று ஆண்டாள் சூடிக் களைந்த மாலையையும், உடுத்திக் களைந்த புடைவையையும் எடுத்து வந்து திருத்தங்கல் பெருமாளுக்கு சாத்தி மகிழ்கின்றனர். இத்தலம் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது.

டி மாத செவ்வாய் கிழமைகளில் சுமங்கலிப் பெண்கள் மஞ்சளைப் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும். இதனால்தான், ‘ஆடிச் செவ்வாய் தேடிக் குளி; அரைச்ச மஞ்சளைப் பூசிக் குளி’ என்னும் சொல்வழக்கு ஏற்பட்டது. குமரி மாவட்டம், சுசீந்திரத்தில் உள்ள முன்னுதித்த கங்கை அம்மன் கோயிலில் ஆடிச் செவ்வாய் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

ஆடி வெள்ளிக்கிழமை, தீபத்தில் அம்மனை ஆவாஹனம் செய்து லலிதா சஹஸ்ரநாமம் சொல்லி அர்ச்சனை செய்ய, திருமணமாகாத பெண்களுக்கு நல்ல கணவன் அமையும். அரச மரத்தடி நாகர் சிலைகளுக்கு பால் தெளித்து, பூஜை செய்தால் நாக தோஷம் நீங்கும். திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரிக்கு இன்றைய தினத்தில் வைதீக முறைப்படி ஸ்ரீ வித்யா பூஜை செய்வர். அன்று ஈசன் குருவாக இருந்து அம்மனுக்கு உபதேசம் செய்வதாக ஐதீகம். அன்று மாணவர்கள் பூஜையில் கலந்துகொண்டு கல்வியில் சிறக்க வேண்டிக்கொள்வர்.

‘பெரிய திருவடி’ என்று அழைக்கப்படும் கருட பகவான் உதித்தது ஆடி மாதம், சுவாதி நட்சத்திரத்தில். இந்நாளில் கருட தரிசனம் செய்வதாலும் கருடனை வழிபடுவதாலும் சகல தோஷங்களும் நீங்கும். மாங்கல்யம் பலம் பெறும். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைகொட்டு விழா விசேஷமாக நடைபெறும். இன்று நான்கு ஆடி வீதிகளிலும் அம்பாள் வீதியுலா வருவார். ஆடி சுவாதி தினத்தில் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு ஆராதனையும், புறப்பாடும் நடைபெறும்.

ஆடி பெளர்ணமியன்று சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். அரனும் ஹரியும் ஒன்றே என்பதைக் காட்டும்விதமாக, தபசு இருந்த கோமதி அம்பாளுக்கு ஆடி பெளர்ணமியன்று சங்கரநாராயணராகக் காட்சி தந்த திருத்தலம் சங்கரன்கோவில். இதை விளக்க, அம்பாளுக்கு ஹரிஹரனாகக் காட்சி தரும் திருவிழா நடைபெறுகிறது. மகப்பேறு வேண்டும் பெண்கள், அம்மன் தபசுக்கு முதல் நாள் குளித்து, இரவு ஈரப்புடைவையுடன் பிராகாரத்தில் உறங்குவர். இரவு அம்பாள் கனவில் தோன்றி அவர்களுக்கு வரம் தருவதாக ஐதீகம்.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

பூரத்தில் உதித்த புகழ்க்கொடி!

0
- ரேவதி பாலு தென்பாண்டி நாட்டில் வில்லிபுத்தூரில் விஷ்ணு சித்தர் என்பவர் இருந்தார்.  திருமாலிடத்தில் மிகுந்த பக்தி கொண்ட பக்திமான் ஆதலால், பெரியாழ்வார் என்று இவர் அழைக்கப்பட்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி என்று அழைக்கப்படும் பெருமாளுக்கு...

மூன்று வகை மனிதர்கள்!

0
- ஆர்.சுந்தரராஜன் ஒருசமயம் பகவான் மகாவிஷ்ணு கருடனுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் கருடனிடம், “இந்த உலகில் எத்தனை விதமான மனிதர்கள் உள்ளனர் என்று உனக்குத் தெரியுமா?” என்று ஏதும் அறியாதவர் போல் கேட்டார். அதனைக் கேட்ட...

கண் திருஷ்டியை விலக்கும் தாந்த்ரீக பரிகாரம்!

- எம்.ராஜதிலகா ‘கல் அடி பட்டாலும் படலாம்; கண் திருஷ்டி படவே கூடாது’ என்று பெரியோர்கள் சொல்வார்கள். கணவன், மனைவி சந்தோஷமாக வெளியே சென்று வருவோம். சொற்ப வருமானத்தை வைத்துக்கொண்டு நிறைவான வாழ்க்கையை வாழ்வோம்....

கதம்பமாலை

0
குரல் வளம் அருளும் ஈசன்! கடலூர் மாவட்டம், விருத்தாசலத்துக்கு அருகே, கொள்ளிடம் ஆற்றின் வடக்கிலும், சுவேத நதி எனப்படும் வெள்ளாற்றின் தெற்கிலும் அமைந்துள்ளது ராஜேந்திரபட்டினம் சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில். இத்தலத்தின் புராண காலப் பெயர் சுவேதார்க்கவனம்...

போனாலு பண்டிகை!

0
- ஆர்.சாந்தா ‘போனம்’ என்னும் சொல் சாப்பாட்டைக் குறிக்கும். ‘போனாலு’ எனப்படும் இந்தத் திருவிழா தெலங்கானா பகுதியில், குறிப்பாக ஹைதராபாத், செகந்திராபாத் பகுதிகளிலும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் கொண்டாடப்படும் ஒரு பிரசித்திப் பெற்ற திருவிழாவாகும். கி.பி.1813ல்...