அற்புதம் நிகழ்த்தும் அதிஷ்டானம்!

அற்புதம் நிகழ்த்தும் அதிஷ்டானம்!

ஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் பேருந்து மார்க்கத்தில் கரந்தை பேருந்து நிறுத்தம் அருகில் அமைந்துள்ளது ஆதி பீமராஜ கோஸ்வாமி மடம். தஞ்சாவூரில் ராம பக்தியை தனது ஹரி கதை மூலம் பிரச்சாரம் செய்து, ஆண்டுதோறும் ராம நவமி உத்ஸவத்தை நடத்திட வித்திட்ட மகான். மராட்டிய சத்ரபதி சிவாஜிக்கு ஆன்மிக குருவாக விளங்கிய சமர்த்த ராமதாச சுவாமிகளின் பிரதான சீடராக விளங்கிய இவர், தஞ்சையை ஆண்ட சிவாஜியின் சகோதரர் வெங்காஜி என்கின்ற ஏகோஜி ஆட்சி புரிந்த காலத்தில் ராமதாசர் தஞ்சாவூருக்கு விஜயம் செய்தபோது உடன் வந்தவர். குருவுக்கு பணிவிடைகள் செய்து சமர்த்த ராமதாச சுவாமிகளின் பரிபூரண அனுக்கிரகம் பெற்ற இவர், தஞ்சாவூரில் ராம பக்தியை பிரச்சாரம் செய்ய ஏதுவாக குருவின் கட்டளைக்கேற்ப தஞ்சாவூர் சாமந்தான்குளம் தென்கரையில் மடம் நிறுவி ஹரி கதை செய்து பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கி வந்தார்.

தஞ்சாவூரை ஆண்ட மராட்டிய மன்னர் பிரதாப சிம்மன், ஆதி பீமராஜ கோஸ்வாமியை தனது அரண்மனைக்கு வருமாறு அமைச்சர் மூலம் அழைப்பு விடுத்தார். ஆனால் கோஸ்வாமி, அமைச்சரிடம் தான் கூறியதாக பிரதாப சிம்ம மன்னரிடம் தெரிவிக்க ஒரு வாக்கியத்தைக் கூறினார். அதாவது, ‘ஒரு பசு தனது தாகத்துக்காக குளத்தை நாடிச் செல்ல வேண்டுமே தவிர, குளமானது பசுவை நோக்கி வராது. அதுபோல, ஒருவர் குருவின் உபதேசத்தை முழுமையாகப் பெற வேண்டும் என எண்ணினால், அவர்கள் குருவை நோக்கி தேடிச் செல்ல வேண்டும்’ என்பதே அது.

அமைச்சர் குருவின் வார்த்தைகளை அப்படியே மன்னனிடம் தெரிவிக்க, மன்னனுக்கு புத்தி வந்தது. மறுநாள் ஆதி பீமராஜ கோஸ்வாமி மடத்துக்கு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வந்தார் மன்னர். அந்நேரம், கோஸ்வாமி ராமபிரான் விக்ரகத்துக்கு அபிஷேக, ஆராதனை செய்து வழிபாடு நடத்தி தீபாராதனை செய்து ஹரி கதை சொல்லத் தொடங்கினார். அப்போது மன்னன் அவரிடம், “இப்பொழுது தங்களால் ராமபிரானை எனக்கு தரிசனம் செய்து வைக்க இயலுமா?” எனக் கேட்டார். மகான் ஶ்ரீ ஆதி பீமராஜ கோஸ்வாமி, தான் அன்றாடம் வழிபடும் ராமபிரான் உத்ஸவர் முன்பு, ‘ஹே ராமா, எவ்வித தாமதமும் இன்றி ஓடி வா’ என்ற பாடலை மனம் உருகி பாடி ராமபிரானை அழைத்தார். என்ன ஆச்சரியம்… குருவின் பாடலுக்கு ஏற்ப ராமபிரான் உத்ஸவ மூர்த்தி அமைந்த விமானம் அசைந்தாடி குருவை நோக்கி நகர்ந்தது. இதனைக் கண்ட மன்னன் மெய்சிலிர்த்துப் போனான். உடனே குருவின் பாதத்தில் விழுந்து வணங்கி ஆசி வேண்டினான். குரு கோஸ்வாமி மன்னருக்கு மந்திர உபதேசம் செய்து ஆசி வழங்கினார்.

அதன் பின்னர் மன்னர், ஆதி பீமராஜ கோஸ்வாமி ராம பக்தியை பிரச்சாரம் செய்ய ஏதுவாகவும், மடங்கள் நிறுவவும் இடங்களை தானமாகக் கொடுத்தார். இதன் காரணமாக ராம பக்தி எங்கும் பரவியது. பிரதாப சிம்மன் ஆட்சிக் காலத்தில் ஏராளமான அனுமன் மற்றும் ராமபிரான் ஆலயங்கள் தஞ்சாவூரைச் சுற்றி அமைந்தன. இன்றும் ஆதி பீமராஜ கோஸ்வாமி ஏற்படுத்திய மடம் உள்ளது. கி.பி. 1741ஆம் ஆண்டு தனது 99ம் வயதில் முத்திஅடைந்தார் ஆதி பீமராஜ கோஸ்வாமி. அதன் பின் அவருக்கு அதிஷ்டானம் அமைத்து, அதன் மேல் எங்கும் காண இயலாத அற்புதமான கோலத்தில் வீர ராம பக்த அனுமன் சிலை அமைக்கப்பட்டது. இவரது அதிஷ்டானத்தில் உள்ள அனுமன் கோலத்தை தரிசனம் செய்ய புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

ஆதி பீமராஜ கோஸ்வாமி மடத்தில் பிரதி பௌர்ணமி தோறும் இரவு 7 மணிக்கு அதிஷ்டானத்திற்கு மேல் உள்ள ராம பக்த ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெறுகிறது. இந்த அதிஷ்டானத்தில் பௌர்ணமி அன்று ஒன்பது அகல் தீபமேற்றி, ஒன்பது முறை வலம் வந்து வழிபடுவது சிறப்பாகும். அற்புதங்கள் நிகழ்த்தும் ஆதி பீம ராஜ கோஸ்வாமி அதிஷ்டானத்தை தரிசிக்க பூர்வ ஜன்ம புண்ணியம் செய்திருக்க வேண்டும். இந்த அதிஷ்டான வழிபாடு, தீராத பிரச்னைகளைத் தீர்க்கும். கர்மவினைகளைப் போக்கும். தடைப்பட்ட திருமணம் கைகூடும். குழந்தைப் பேறு கிட்டும். உடல் உபாதைகள் நீங்கும். இந்த அதிஷ்டானத்தை பிரதி வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை மற்றும் பௌர்ணமி தினங்களில் வழிபாடு செய்வது சிறப்பு. வார நாட்களில் தினமும் காலை 8 முதல் 11 மணி வரையும் மற்றும் மாலை 5 முதல் இரவு 8 மணி வரையும் இந்த அதிஷ்டானம் திறந்திருக்கும். பௌர்ணமி தினங்களில் காலை 7 முதல் இரவு 8.30 மணி வரை தரிசனம் செய்யலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com