ஸ்ரீ கிருஷ்ணன் பேரன் பிரதிஷ்டை செய்த கண்ணன் விக்ரஹம்!

ஸ்ரீ கிருஷ்ணன் பேரன் பிரதிஷ்டை செய்த கண்ணன் விக்ரஹம்!

பிருந்தாவனில் நூற்றுக்கணக்கான ஆலயங்கள் இருந்தபோதிலும், அவற்றில் ஐந்தாறு கோயிகள் மிகவும் முக்கியமானவை. நாம் பார்க்க விரும்பும் கோயில்களை வண்டி ஓட்டுபவரிடம் சொல்லிவிட்டால், அவரே ஒவ்வொன்றாக நமக்குக் காண்பித்து விடுவார். அதற்கு ஆகும் செலவு 300 முதல் 400 ரூபாய் வரை மட்டுமே. மேற்கூறியபடி பிருந்தாவனில் உள்ள முக்கியமான கோயில்களில் ஒன்று ராதா கோபி மந்திர்.

பிருந்தாவனில் இருக்கும் சந்துகளுக்குள் புகுந்து நாமாகச் சுற்றிக் கோயில்களைக் கண்டுபிடிப்பது என்பது மிகவும் கஷ்டமான காரியம். குரங்குகள் தொல்லை மிகவும் அதிகமாக இருக்கும். சமயத்தில் கையில் இருக்கும் பைகளைக்கூட வலுக்கட்டாயமாகப் பறித்துக்கொண்டு ஓடிவிடும். அதனால், எந்தெந்தக் கோயில்களுக்குப் போகிறோம் என்பதை முன்கூட்டியே முடிவு செய்து, ஒரு ரிக்‌ஷாவை அமர்த்திக்கொள்வது நல்லது. ஏறக்குறைய ஒரு நாள் முழுவதும் ஆகிவிடும். சின்னஞ்சிறிய சந்துகளுக்குள் லாவகமாக ரிக்‌ஷாவை ஓட்டிச் சென்ற அவர், ஒரு நாலடிச் சந்தில் உள்ள ராதா கோபி மந்திர் முன்பு வண்டியை நிறுத்தினார்.

கோயிலுக்குள் நுழைகிறோம். சிறிய வாசல் தென்படுகிறது. ‘கோயில் பரிக்ரமா’ என்று அதைச் சொல்கிறார்கள். வலது புறம் ராதையும் கண்ணனும் கருப்பு நிறப் பளிங்கினால் செய்யப்பட்ட சிற்பங்களாய் காட்சி தருகிறார்கள். கோயில் சரியான பராமரிப்பு இன்றிக் காணப்படுகிறது. கூரைகள் பழுதடைந்து, தரைகள் பெயர்ந்து காணப்படுகின்றன.

மேலும் நடந்தால் ஒரு விசாலமான திறந்தவெளி முற்றத்துக்கு வருகிறோம். அங்கே குழலூதும் கண்ணன் சிலை காட்சி தருகிறது. ராதை ஒரு பக்கமும் அவரின் தங்கையான அனங்கமஞ்சரி இன்னொரு பக்கமும் இருக்க, நடுவில் கண்ணன். லலிதா மற்றும் விசாகா சிற்பங்கள் கொஞ்சம் சின்ன வடிவில் காட்சி அளிக்கின்றன. நடைபாதையில் இருக்கும் பிரம்மாண்டமான முரசு கவனத்தை ஈர்க்கிறது.

இந்த மந்திரில் உள்ள கண்ணனின் சிலையை பிரதிஷ்டை செய்தது வஜ்ரநாபர் என்பவர் ஆவார். இவர் கண்ணனின் பேரனாம். இந்தச் சிலை இடையில் காணாமல் போய்விட்டதாம். அதை ஓர் ஆலமரத்துக்குக் கீழே பரமானந்த கோஸ்வாமி என்ற சாது கண்டெடுத்ததாகக் கூறப்படுகிறது.

ரஜபுதன அரசர் ராய்செல் மண்டாவா என்பவர் இப்போதிருக்கும் ஆலயத்தைக் கட்டி முடித்தார். இது 1559ல் கட்டப்பட்டதாம். ஒளரங்கசீப் 1670ல் இக்கோயிலை இடிக்க வந்தபோது, மூலவர் சிலையைப் பாதுகாத்து ஜெய்ப்பூருக்குக் கொண்டுபோய்விட்டதாகச் சொல்லப்படுகிறது.

ஒளரங்கசீப்பால் இடிக்கப்பட்ட கோயிலை அப்படியே விட்டுவிட்டு, புதிதாக ஆலயம் ஒன்றை எழுப்பி இருக்கிறார்கள். தற்போது பழைய மற்றும் புதிய கோயில்களைப் புதுப்பிக்க நிதி திரட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com