லக்ஷ்மி கடாக்ஷம் அருளும் வைகல்நாதர்!

லக்ஷ்மி கடாக்ஷம் அருளும் வைகல்நாதர்!

ண்மையான அடியவர்களைச் சார்ந்தே இருக்கும் அருட்பெரும் தெய்வமான சிவபெருமான், அந்த பக்தர்களைச் சோதித்த பின்பே புடம் போட்டத் தங்கமாய்ப் புத்தொளி வீசச் செய்வார். பக்தியின் உத்தம நிலையை ஒருவன் அடைந்த பின்பே அவன் மீது கருணைப் பொழியும் பண்பினைப் பெற்ற எம்பெருமான், இம்மண்ணின் துயரங்கள் களைந்திடவே தலங்கள்தோறும் எழுந்தருளி தயை புரிகின்றார். அப்படிப்பட்ட அதி உன்னதத் தலங்களுள் ஒன்றாகத் திகழ்கின்றது திருவைகல் மாடக்கோயில்.

கோட்செங்கட்சோழன் கட்டிய எழுபது மாடக்கோயில்களுள் ஒன்றாகத் திகழும் இந்த வைகல் மாடக்கோயில் ஈசன் மீது பதிகம் பாடிப் பரவியுள்ளார் ஆளுடையப்பிள்ளை திருஞானசம்பந்தர். அதோடு, அப்பர் பெருமானும் பாடிப் பரவிய தலமிது. இந்தக் கோயிலை, ‘வடமலை அணைய நன்மாடக் கோயிலே’ என கயிலை மலைக்கு இணையாகப் பாடிய சம்பந்தப்பெருமான் மேலும், ‘வையகம் மகிழ்தர வைகல் மேற்றிசை செய்ய கண்வளவன் முன் செய்த கோயிலே’ என உலகத்தில் உள்ள உயிரினங்கள் மகிழ்வுற இத்தலத்தில் ஈசன் எழுந்தருளியதாகவும் எடுத்துரைக்கின்றார்.

திருநாவுக்கரசர் தனது திருவீழிமிழலை திருத்தாண்டகத்தில் கயிலைநாதனை இந்த வைகல் மாடக்கோயிலில் காணலாம் எனப் போற்றிருப்பது சிறப்பு. க்ஷேத்திரக்கோவையிலும் இத்தலத்தினை நினைத்துப் போற்றுகின்றார். சைவ சமய சந்தானக் குரவர்களுள் ஒருவரான உமாபதி சிவாச்சாரியார் அருளிய சிவக்ஷேத்திர கோவையிலும் இத்தலம் பாடப்பெற்றுள்ளது. சோழ வளநாட்டின் காவிரி தென்கரை தேவாரத் திருத்தலங்களில் 33வது தலமாகத் திகழ்கின்றது இந்த வைகல் மாடக் கோயில்.

ஈசனுக்கு திரிநேத்திரங்கள் [மூன்று கண்கள்] இருப்பதுபோல இந்த வைகலில் மூன்று சிவாலயங்கள் இருப்பது சிறப்பு. இத்தலத்தில் வைகல் மாடக்கோயிலோடு, பெரியநாயகி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் ஆலயமும், விசாலாக்ஷி உடனுறை விஸ்வநாதர் ஆலயமும் ஒருங்கே அமையப்பெற்றிருப்பது விசேஷம். திருமால், பிரம்மா, திருமகள் ஆகியவர்களோடு, இந்திராதி தேவர்களும், அகத்திய மாமுனிவரும் போற்றி வழிபட்ட திருக்கோயில் இது. தேவர்கள் ஈசல் வடிவில் வழிபாடு செய்த புகழ்மிகு கோயிலுமாகும்.

தியில் செண்பக வனமாகத் திகழ்ந்த இத்தலத்தில் நம்மையெல்லாம் தாங்கும், ஆதார சக்தியான அன்னை பூமா தேவி ஒரு சமயம் திருமாலை மணம் புரிந்திட வேண்டி, ஈசனை நோக்கித் தவமிருந்து திருமாலை மணந்து கொண்டாள். இதனால் கோவிந்தன் மீது கோபமுற்றாள் திருமகள். உடனே இந்த செண்பகாரண்யம் அடைந்து, சிவனாரை நினைத்து கடுந்தவம் இயற்றினாள். திருமகளைத் தேடி வந்த திருமால், இத்தல ஈசனை வணங்கினார். உடன் வந்த பிரம்மனும் இங்கே இறைவனை வழிபட்டு நின்றார். அப்போது மகாதேவர் அவர்கள் முன் தோன்றி, திருமகளை சாந்தப்படுத்தி, திருமாலோடு இணைத்து வைத்தார். திருமகளையும், நிலமகளையும் இரு மனைவியராய் திருமால் கொண்ட தலமிது.

ஊரின் மேற்கே அமைந்துள்ள வைகல் மாடக்கோயில் தோரண வாயிலுடன் அழகுறத் திகழ்கிறது. கோயிலின் உள்ளே மையத்தில் அமைந்துள்ளது உயரிய மேடை. வலப்பக்கம் உள்ள படிகளில் ஏறிச் சென்றால் நந்தி மண்டபம். அதற்கு நேராக அமைந்துள்ளது ஐயன் வைகல்நாதர் சன்னிதி. உள்ளே செல்ல மூடுதளத்துடன்கூடிய அழகிய முன் மண்டபம். கருவறையில் இறைவன் வைகல்நாதர் கிழக்கே திருமுகம் காட்டி, வழுவழு லிங்கத் திருமேனியராக் காட்சி தருகின்றார். மூலவர் செண்பகாரண்யேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகின்றார். கோயிலை வலம் வருகையில் வலப்புறம் அம்பிகைக்கு கிழக்கு நோக்கிய தனிச்சன்னிதி அமைந்துள்ளது. அதில் அழகிய வடிவில் எழிலோடு தரிசனமளிக்கின்றாள் அன்னை ஸ்ரீ கொம்பியல் கோதை. அப்பன் ஈசனை அன்னை மணக்கும் திருக்கோலம் இது.

இந்தக் கோயிலில் திருமால் தன் துணைவியர் இருவருடன் வரதராஜராகக் காட்சித் தருவது சிறப்பு. கன்னிமூல கணபதி மற்றும் வள்ளி-தெய்வானையுடனான சுப்ரமணியரும் இங்கு தரிசனம் அளிக்கின்றனர். ஆலய வளாகத்தின் சுற்றிலும் நந்தவனம் அமைக்கப்பட்டு, இயற்கை எழில் கொஞ்சுகின்றது. இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் இந்தக் கோயிலில் நித்திய - நைமித்திய பூஜைகள் யாவும் சிறப்புற நடைபெறுகின்றன. தல விருட்சம் செண்பக மரம் முன்பு இந்தக் கோயிலில் இருந்தது. தற்போது இல்லை. தல தீர்த்தமான பிரம்ம தீர்த்தம் கோயிலின் வடபால் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் குடமுழுக்கு கடைசியாக 2006ஆம் ஆண்டு நடைபெற்றுள்ளது.

இக்கோயிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீதேவி பூதேவி உடனான வரதராஜப் பெருமாள் மற்றும் கஜலட்சுமிக்கு திருமஞ்சனத்தோடு, பால் பாயசம் நைவேத்தியம் செய்து வழிபட, நீண்ட நாள் திருமணத்தடை நீங்கி, திருமாங்கல்ய பாக்கியம் கைகூடும். அதேபோல், சிவபெருமானுக்கு ருத்ராபிஷேகம் நடத்தி சுக்ர ஹோமம் செய்ய, பலமான களத்திர தோஷம் நீங்கி, திருமணம் விரைவில் நடைபெறும். இத்தல அம்பிகைக்கு பொன் மாங்கல்யம் சாத்தி பிரார்த்திக்க ஜாதக ரீதியாக ஏற்படும் மாங்கல்ய தோஷங்கள் நீங்கும்.

அமைவிடம்: கும்பகோணம்-காரைக்கால் பேருந்து சாலையில் எஸ்.புதூருக்கு அருகே உள்ள பழியஞ்சியநல்லூரில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது வைகல் மாடக்கோயில்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com