மங்கல தேவி கண்ணகி கோயிலின் சித்ரா பெளர்ணமி விழா!

குமுளி அருகே தமிழக-கேரள எல்லையில் உள்ள பிரசித்தி பெற்ற மங்கல தேவி கண்ணகி கோயிலில் நேற்று சித்ரா பெளர்ணமி திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
ஆண்டுதோறும் சித்ரா பெளர்ணமி அன்று மட்டுமே நடைபெறும் இந்த விழாவையொட்டி, வெகு தொலைவில் இருந்தும், சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்தும் வெள்ளியன்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
தமிழக மற்றும் கேரள எல்லையில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இரு மாநில வனத்துறையினரும், போலீசாரும் பலத்த பாதுகாப்பு வழங்க, வனப்பகுதி வழியாக சுமார் 6.6 கி.மீ துாரத்திற்கு பக்தர்கள் பாதயாத்திரையாக சென்றனர். நடக்க முடியாதவர்கள், வாகனங்களில் பயணம் செய்தனர்.
கண்ணகிக்கு பச்சைப் பட்டு வஸ்திரம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.
விண்ணேற்றிப்பாறையில் அமைந்துள்ள கோயிலுக்கு நேரடியாகச் செல்ல வசதியாக சாலை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தற்போது, தமிழக அதிகாரிகள், கேரள அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் வனப்பகுதியை பயன்படுத்த, கேரள அரசு அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டியிருந்தது.
தமிழ்நாட்டின் தேனி மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்ட எல்லையில் தேனி மாவட்டம் பழியங்குடியிலிருந்து 7 கிமீ தொலைவிலும், இடுக்கியில் உள்ள தேக்கடியில் இருந்து 15 கிமீ தொலைவிலும் மங்கலதேவி கண்ணகி கோயில் அமைந்துள்ளது.
பண்டைய சேரநாட்டின் தமிழ் மன்னனான சேரன் செங்குட்டுவன், கண்ணகிக்கு சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் வண்ணாத்திப்பாறையில் கோயில் எழுப்பி அதற்கு 'கண்ணகி கோட்டம்' அல்லது 'மங்கலதேவி கண்ணகி கோவில்' என்று பெயரிட்டு வழக்கமான பூஜைகள் செய்து வந்தார். சித்ரா பௌர்ணமி நாளில் வருடத்தில் ஒரு முறை மட்டுமே கோயிலுக்குள் நுழைய அனுமதி உண்டு.
சர்ச்சைக்குரிய பகுதி என்பதால், தேனி மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் முன்னிலையில் மட்டுமே இந்தக் கோயிலுக்குள் நுழைய முடியும்.