
‘கங்கையிற் புனித காவிரி’ பாயும் சோழவள நாட்டின் தலைநகரான தஞ்சை தரணியில் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக அருள்பாலித்து வரும் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் அருகே, கத்தரிநத்தம் என்ற ஊரில் அமைந்துள்ளது, அருள்மிகு ஞானாம்பிகை உடனாய ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில்.
ஒரு காலத்தில் இந்த கிராமம், ‘ஸப்த ரிஷி நத்தம்’ என்று பெயர் பெற்று இருந்தது. திருக்காளத்தி எனும் காளஹஸ்திக்கு நிகரானதும், தென் காளஹஸ்தியாகவும் புகழ் பெற்று விளங்கும் இந்தக் கோயிலில், ஸ்ரீ ஞானாம்பிகை என்ற பெயருடைய தேவியுடன், சிவபெருமான் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்தக் கோயில் ராகு, கேது பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது.
இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ள இந்தக் கோயிலின் எதிரில், பெரிய குளம் ஒன்று உள்ளது. ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்று சுவடுகளை தன்னுள் பொதித்துக் கொண்டு, இந்த சிவாலயமும், அம்மன் ஆலயமும், திருக்குளமும் திகழ்கின்றன. மிகவும் பழைமை வாய்ந்த இந்தக் கோயில் செங்கற்களால் ஆன ஒற்றை திருச்சுற்று மதிலுடன் கம்பீரமாக அமைந்துள்ளது.
ஒரு சமயம் இறைவனின் சாபத்தால் பீடிக்கப்பட்ட ஸப்த ரிஷிகளாகிய மரீசி, அத்ரி, புலத்தியர், பிருகு, ஆங்கீரசர், வசிஷ்டர், பரத்வாஜர் ஆகியோர் பல்வேறு திருத்தலங்களுக்கு அலைந்து திரிந்தும் சாப விமோசனம் பெற முடியாமல் தவித்தார்கள். அதன் பிறகு அந்த ஏழு பேரும் சப்த ரிஷிநத்தம் என்ற இந்தத் திருத்தலத்துக்கு வந்து இங்குள்ள ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரை வழிபட்டு வந்தனர். தொடர்ந்து ஒரு மண்டலம், அதாவது 48 நாட்கள் இந்தக் கோயில் குளத்தில் நீராடி, ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரை வழிபட்டு வந்தனர். இதனால் அவர்களின் சாபம் நீங்கப் பெற்றதோடு, அவர்களின் கடுமையான நோயும் நீங்கியது என தல புராணம் தெரிவிக்கிறது.
இந்தக் கோயில் திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது. மேலும், குடும்ப ஒற்றுமைக்கு இக்கோயிலில் அர்த்தநாரீஸ்வரர் வழிபாடும், நோயற்ற வாழ்வு மற்றும் குறைவற்ற செல்வத்துக்கு ஸ்ரீ காலபைரவர் வழிபாடும், சிறப்பான பிரதோஷ வழிபாடும் விசேஷமாக நடைபெற்று வருகிறது.
அமைவிடம்: தஞ்சை – நாகப்பட்டினம் சாலையில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் இருந்து 2 கி.மீ., தஞ்சையில் இருந்து 8 கி.மீ. தொலையில் அமைந்துள்ளது இந்தக் கோயில். கோயிலுக்குச் செல்ல ஆட்டோ வசதி உண்டு.