ஸ்ரீ சுப்ரமணியர்
ஸ்ரீ சுப்ரமணியர்

சுயம்புலிங்க வடிவில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி!

குன்றுகள் யாவும் குமரனின் குடில்கள்தான்! அன்பர் உள்ளங்களில் உயர்ந்து விளங்குதல் போல, மலைகள் மீது உயர்ந்து குடிகொண்டு உய்விக்கின்றான் குமரன் தனது உத்தமத் தொண்டர்களை! அதன்படி, அடியார்களுக்கு அருள் வழங்கும் உன்னதத் திருத்தலமாகத் திகழ்கிறது, ‘நட்சத்திரக் கோவில்’ எனப்படும் நட்சத்திரக்குன்று. சுயம்பு லிங்கங்களைப் பல்வேறு திருத்தலங்களில் தரிசித்திருக்கலாம். சுயம்பு முருகனை எங்கேனும் கண்டதுண்டா? அதுவும் மலை மீது? அப்படி சுயம்பு வேலவனை வணங்கும் பாக்கியத்தை இந்த நட்சத்திரகிரியில் நாம் பெறலாம்.

‘தென் கயிலாயம்’ எனப் போற்றப்படும் பருவத மலையில் போதன், போதவான், புத்திராண்டன், புருகூதன், பாண்டரங்கன், சோமன், வாமன் ஆகிய ஏழு தவசிகள் தவம் புரிந்துக் கொண்டிருந்தனர். அப்போது வாழைப்பந்தல் அமைத்து, சிவலிங்கம் பிடித்து வைத்த அம்பிகை, நீர் வேண்டி கணபதியையும், கந்தனையும் அனுப்பினாள். கணபதி காகமாய் சென்று ஜமதக்னி முனிவரின் கமண்டலத்தைக் கவிழ்த்து, (காவிரியை உற்பத்தி செய்தது போல்) கமண்டல நதியை உற்பத்தி செய்தார். கந்தனோ, பருவத மலை மீது தனது சக்திவேலை ஏவினான். சீறிப்பாய்ந்த வேல் தவசிகள் எழுவரின் உடலைக் குத்திக் கிழித்தது. செந்நீராகப் பெருக்கெடுத்தது நதி. அதுவே சேய் (செய்யார்) நதியானது.

மலை அடிவாரம்
மலை அடிவாரம்

கந்தனின் புனிதமிகு வேல் குத்தியக் காரணத்தால் எழுவரும் முத்தி பெற்றனர். அவர்கள் எழுவரும் அந்தணர் ஆதலால் அவர்களைக் கொன்ற பாவம் பிரம்மஹத்தியாய் குமரனைச் சூழ்ந்தது. இதனால் அன்னை பார்வதியின் ஆலோசனைப்படி சேயாற்றின் வடகரையில் (காஞ்சி, கடலாடி, மாம்பாக்கம், மகாதேவமங்கலம், எலத்தூர், பூண்டி, குருவிமலை) ஏழு கரைகண்டங்களையும், தென்கரையில் (மண்டகொளத்தூர், கரைப்பூண்டி, தென்பள்ளிப்பட்டு, பழங்கோவில், நார்த்தாம்பூண்டி, தாமரைப்பாக்கம், வாசுதேவன்பட்டு) ஏழு கயிலாயங்களையும் உருவாக்கி சிவலிங்க வழிபாடு செய்து விமோசனம் அடைந்தார் குமரக் கடவுள். அப்போது தேவர்கள் வந்து வழிபடும் தேவனாம்பட்டு தேவகிரியிலும், நட்சத்திரங்கள் வந்து வழிபடும் நட்சத்திரகிரியிலும் முருகன் இளைப்பாறினார். அதோடு, தனது அன்பர்களுக்கு அருள் வழங்கும் தலமாகவும் அவற்றை ஆக்கிக் கொண்டான்.

கோயில் தோற்றம்
கோயில் தோற்றம்

முன்னொரு சமயம் இப்பகுதியில் இரண்டு சிவாச்சாரியார்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் இருவரும் ஆடி கிருத்திகை நாளில் திருத்தணிகை சென்று ஸ்ரீ சுப்பிரமணியரை வழிபடுவது வழக்கம். ஒரு வருடம் அவர்களால் ஆடி கிருத்திகையன்று தணிகைமலை செல்ல இயலவில்லை. இதனால் இருவரும் மிகுந்த மனவருத்தம் அடைந்தனர். இவர்களின் கனவில் தோன்றிய குமரன், ‘நான் நட்சத்திரகிரி என்னும் குன்றின் நடுமலையில் சுயம்பு வடிவாய் எழுந்துள்ளேன். சூரியன் - சந்திரன் உள்ளவரை 27 நட்சத்திரங்களும், நாகமும் நித்தம் என்னை இங்கு பூஜிக்கும். நட்சத்திர குன்றின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் சந்திர புஷ்கரணி சுனையில் இருந்து நாகம் உங்களுக்கு வழிகாட்ட, என்னை வந்தடையுங்கள்’ எனக் கூறி மறைந்தார்.

திடுக்கிட்டு கண் விழித்த சிவாச்சாரியார்கள் விடியற்காலை பிரம்ம முகூர்த்த வேளையில் சுனையை அடைந்து, ஒளி பொருந்திய நாகம் ஒன்று வழிகாட்டிட, குன்றின் நடுவில் ஓரிடத்தில் சென்று மறைந்தது. அங்கே சப்பாத்திக்கள்ளி செடிகளுக்கு இடையே சுயம்புலிங்க வடிவாய் முருகன் காட்சியளித்தார்.

இதை கேள்வியுற்ற ஊர் மக்கள் ஒன்றுகூடி, சுயம்பு சுப்பிரமணியரை வணங்கினர். பின்னர், வள்ளி - தெய்வானை உடனான முருகன் உருவச் சிலையும் ஸ்தாபித்து, ஆலயம் அங்கு எழுப்பப்பட்டு, அற்புத பூஜைகளும் நடத்தப்பட்டன.

மேலிருந்து கோயில் தோற்றம்
மேலிருந்து கோயில் தோற்றம்

சேயாற்றின் கரையோரமாக சிறு குன்றின் மீது குறைகளையெல்லாம் களையும் குமரப் பெருமான் இனிதே வீற்றருள்கின்றார். சுமார் 60 படிகள் ஏறி, முதலில் ஸ்ரீ சித்தி விநாயகரை வணங்குகின்றோம். மூன்று நிலை இராஜகோபுரம் ஆலயத்தை அலங்கரிக்கிறது. இடப்புறத்தின் மேற்கே வள்ளி - தெய்வானையுடனான சுப்பிரமணியர் உத்ஸவர் சிலையும், வலப்புறம் ஸ்ரீ காசி விசாலாட்சி உடனுறை
ஸ்ரீ காசி விஸ்வநாதர் சன்னிதியும் உள்ளன. கிழக்கே பலிபீடம், மயில் வாகனம், கொடிமரம் காணப்படுகின்றன. மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை ஆகிய அமைப்பில் சன்னிதிகள் அமைந்துள்ளன.

கருவறையுள் ஜோதிமயமாய் வள்ளி, தெய்வானையுடன் கந்தபெருமான் உருவாய் எழுந்தருள, கீழே சுயம்புவாய் லிங்க வடிவில் பூமியிலிருந்து தானாக எழுந்து பேரொளி வீசுகின்றார். நாகம் ஒன்று தலைக்கு பின்னே படமெடுத்து நிற்பதைக் காண மெய் சிலிர்க்கின்றது. இந்த முருகனை நாகம் அடையாளம் காட்டியதன் நினைவாக, நித்தமும் நாகபாசம் பொருத்தப்படுகின்றது.

மூலவர் முருகன்
மூலவர் முருகன்

திருவாசியும், கிரீட குண்டலங்களும் கந்தனை அலங்கரிக்க, கண்கொள்ளாக் காட்சியாய் உள்ளது இந்த சுயம்பு சுப்பிரமணியர் தரிசனம். வேண்டியதையெல்லாம் தருவான் இந்த வேலவன். 27 நட்சத்திரங்களும், மலைக்கோயிலின் வெளியே மலேசிய பத்துமலை முருகனை நினைவுகூறும் விதத்தில் கம்பீரமாய் திகழ்கின்றான் கந்தன் தங்க நிறத்தில்!

மலையிலிருந்து காணும் அற்புதமான இயற்கை எழில் காட்சி மனதைத் தூய்மைப்படுத்தி, சுத்திகரிக்கின்றது. வீசும் தென்றலோ, விவேகம் அளிக்கின்றது. வாகனங்கள் மூலம் செல்ல மலைப்பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. அடிவாரத்தில் தீர்த்த சுனையும், அனுமன், கணபதி, நவக்கிரகங்கள் மற்றும் இடும்பன் சன்னிதிகளும் அமைந்துள்ளன. இந்த நட்சத்திரக்குன்று மீது வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் நான்கு பாடல்களைப் பாடிச் சிறப்பித்துள்ளார்.

சித்திரை வருடப்பிறப்பு பால்குட அபிஷேகம், ஆடி கிருத்திகை, கந்தர் சஷ்டி விழா, கார்த்திகை தீபம், தை கிருத்திகை, பங்குனி உத்திர பிரம்மோத்ஸவம், வைகாசி விசாகம், மாத கிருத்திகைகள் இக்கோயிலின் சிறப்பு வழிபாட்டு தினங்கள் ஆகும். சஷ்டியில் முருகப்பெருமான் எலத்தூர் சென்று அன்னை சக்தியிடம் வேல் வாங்கி வந்து, நட்சத்திரக்கோயிலில் சூரசம்ஹாரம் செய்வார். அதன்பின் சேயாற்றங்கரையில் அமைந்துள்ள குருவிமலை கிராமம் சென்று, அங்கே ஆற்றில் தீர்த்தவாரி நடைபெறும். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர். கிருத்திகை நாளில் தேன் அபிஷேகம் செய்து, சம்பா சாதம் படைத்து, செவ்வரளி மாலை சாத்தி, அன்னதானம் செய்து வழிபடுபவர்களின் நாகதோஷம், புத்திர தோஷம் மற்றும் திருமண தோஷங்கள் அகன்று, புது வாழ்வு பிறக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. முருகனுக்கு பாலபிஷேகம் செய்து, சிவந்த வெட்சி புஷ்பங்களால் அர்ச்சித்து, மாதுளைக் கனி படைத்து வழிபடுவோர் நட்சத்திர தோஷங்கள் யாவும் நீங்கப்பெற்று நல்லருள் பெறலாம் என்பது நம்பிக்கை.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரிலிருந்து செங்கம் செல்லும் பேருந்து சாலையில் சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது நட்சத்திரக்குன்று எனப்படும் நட்சத்திரக்கோயில்!

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com