கிரக தோஷ நிவர்த்தி தரும் திருஊரகப் பெருமாள்!

கிரக தோஷ நிவர்த்தி தரும் திருஊரகப் பெருமாள்!

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் கோயில்களுக்கு புகழ் பெற்ற தலம். இவ்வூரில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட மிகப் பழைமையான மகாவிஷ்ணு கோயில் ஒன்று அமைந்துள்ளது. இத்தல பெருமாள் திருஊரகப் பெருமாள் என்ற திருநாமம் தாங்கி திருப்பதி ஏழுமலையானை போல காட்சி தருவது சிறப்பு. இக்கோயிலுக்குச் சென்று தரிசித்தால் திருப்பதி ஏழுமலையானை தரிசித்த உணர்வும் திருப்தியும் மனதில் ஏற்படுகிறது.

ஒரு காலத்தில் இப்பகுதியை ஆண்டு வந்த குலோத்துங்கச் சோழனுக்கு தோஷம் ஏற்பட்டது. பல திருத்தலங்களுக்குச் சென்று பரிகாரம் செய்தும் பலனளிக்கவில்லை. ஒரு நாள் மன்னனுடைய கனவில் தோன்றிய பெருமாள், தான் காஞ்சிபுரத்தில் திருஊரகப்பெருமாளாக அருளுவதாகவும், தன்னை அத்தலத்துக்குச் சென்று வழிபட்டால் தோஷ நிவர்த்தி பெறலாம் என்றும் திருவாய் மலர்ந்தருளினார். உடனே மன்னனும் காஞ்சி திருஊரகப் பெருமாள் கோயிலுக்குச் சென்றபோது, அங்கு ஆதிசேஷன் வடிவத்தில் எழுந்தருளியிருப்பதைக் கண்டான். அதுவரை மன்னன் பெருமாளை அக்கோலத்தில் கண்டதில்லை. இதனால் தான் சரியான தலத்துக்குத்தான் வந்திருக்கிறோமா என்று குழப்பம் அடைந்தான். அன்றிரவு மன்னன் அங்கேயே தங்கினான். அன்றும் மன்னன் கனவில் தோன்றிய பெருமாள் தானே இத்தலத்தில் ஆதிசேஷன் வடிவில் எழுந்தருளியுள்ளதாக உணர்த்தினார். பின்னர் திருஊரகப்பெருமாளை தரிசித்த மன்னன் தனது தோஷம் நீங்கப் பெற்று தமது இருப்பிடத்துக்குத் திரும்பி வந்து, தனது தோஷ நிவர்த்தி நன்றிக்கடனாக இப்பகுதியில் ஒரு கோயிலை எழுப்பத் தொடங்கினான். மன்னனுக்கு திருப்பதி வேங்கடாஜலபதியாகப் பெருமாள் காட்சி கொடுத்ததால் அதே கோலத்திலேயே இத்தலப் பெருமாளுக்கு சிலை வடித்துப் பிரதிஷ்டை செய்து, தமது தோஷத்தைப் போக்கிய திருஊரகப்பெருமாள் என்ற திருப்பெயரைச் சூட்டி மகிழ்ந்தான்.

பொதுவாக கோயில்கள் கிழக்கு நோக்கியே அமைந்திருக்கும். ஆனால் அபூர்வமாக இக்கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. ஐந்து நிலைகளுடன் ராஜகோபுரம் மேற்கு திசை நோக்கி கம்பீரமாய் காட்சி தருகிறது. கோயிலின் உள்ளே நுழைந்ததும் பழைமையை பறைசாற்றும் விளக்குத் தூண் காட்சி தருகிறது. அதைத் தொடர்ந்து பலிபீடமும் கொடிமரமும் காட்சி தர, தொடர்ந்து சென்றால் ஒரு சிறிய சன்னிதியில் கருடாழ்வார் பெருமாளை நோக்கி நின்று காட்சி தருகிறார். முன்மண்டபம், அர்த்தமண்டபம், கருவறை என்ற அமைப்போடு இத்தலம் திகழ்கிறது. அர்த்தமண்டபத்தின் நுழைவாயிலில் துவாரபாலகர்களாக ஜயன், விஜயன் அமைந்துள்ளனர். முன் மண்டபத்தில் ஒரு சிறிய பீடத்தில் ஆஞ்சனேயர், ராமானுஜர், நம்மாழ்வார் ஆகியோரின் திருமேனிகள் அமைந்துள்ளன.

கருவறையில் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் திருமலை திருப்பதி வேங்கடாஜலபதியைப் போல் காட்சி தருகிறார். இத்தல பெருமாள் காஞ்சியில் அமைந்துள்ள திருஊரகத்தைப் பார்க்கும் விதமாக மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளார். கிரக தோஷம் உள்ளவர்கள் அந்தந்த கிரகத்துக்கு உரிய நாட்களில் திருஊரகப் பெருமாளை தரிசித்தால் தோஷ நிவர்த்தி பெறுவர் என்பது ஐதீகம்.

தாயார் திருவிருந்தவல்லி என்ற திருநாமத்தோடு, சதுர்புஜ நாயகியாக தனி சன்னிதியில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். அருகில் தாயாரின் உத்ஸவ மூர்த்தி காட்சி தருகிறார். தாயார் சன்னிதிக்கு வெளிப்புறத்தில் தும்பிக்கையாழ்வான் சன்னிதி அமைந்துள்ளது. கோயிலில் சீதா தேவி, லட்சுமணருடன் கூடிய ஸ்ரீராமர் சன்னிதி அமைந்துள்ளது. அதன் எதிரில் ஒரு சிறிய சன்னிதியில் ஆஞ்சனேயர் எழுந்தருளியுள்ளார். அருகில் ஸ்ரீஆண்டாள் தனிச்சன்னிதியில் அருளுகின்றார்.

வைகானச ஆகமம் கடைபிடிக்கப்படும் இத்தலத்தில் புரட்டாசி நாலாவது சனிக்கிழமையில் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதிப்பது விசேஷம். பங்குனி மாதம் ரோஹிணி நட்சத்திரத்தில் சுவாமி தாயார் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. ஆடிப்பூரம், நவராத்திரி, அனுமன் ஜயந்தி முதலான வைணவத் தலங்களுக்குரிய விழாக்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

தரிசன நேரம்: காலை 9 முதல் 12 மணி வரை. மாலை 5.30 முதல் இரவு 8.30 மணி வரை.

அமைவிடம்: குன்றத்தூர் முருகன் கோயில் மலை அடிவாரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com