வித்தையில் சிறக்கச் செய்யும் வித்யாபதீஸ்வரர்!

வித்தையில் சிறக்கச் செய்யும் வித்யாபதீஸ்வரர்!

‘மொழியும் அடியார்கள் கோடி குறை கருதினாலும் வேறு முனிய அறியாத தேவர் பெருமாளே’ என்ற அற்புதமான அருணகிரிநாதரின் வரிகளை தனது ஒவ்வொரு சொற்பொழிவிலும் கூறி இன்புறுவார் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள். அப்படி என்ன விசேஷம் இந்த வரிகளில்?

நாம் ஒருவரிடம் பணம் வேண்டியோ அல்லது பொருள் வேண்டியோ ஒரு முறை செல்லலாம், இரு முறை செல்லலாம். அடிக்கடி சென்றால் அவர் வெறுப்படைந்து விடுவர். இது இயற்கையான ஒன்று. ஆனால், நமது குறைகளை ஒருவரிடம் கோடி முறை சென்று சொன்னாலும் கோபப்படாமல் நமக்கு வேண்டியதைக் கொடுப்பராம் ஒருவர். அவர் வேறு யாருமல்ல; கருணைக் கடவுளான கந்தசாமிதான்.

எந்த இடத்தில் சென்று கந்தனிடம் சொன்னால் நமது குறைகள் தீரும்? சோமநாதன் மடத்தில்தான்!

சோமநாதன் மடம் இன்று வழக்கில், ‘12 புத்தூர்’ என்று வழங்கப்படுகிறது. வடமொழி வல்லுநர்களான திண்டிமக் கவிகள் பலர் வாழ்ந்த முள்ளண்டிரம் என்ற ஊருக்கு அருகில் இந்த 12 புத்தூர் அமைந்துள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த இந்தத் தலத்தில் சோமநாத ஜீயர் என்கிற சிறந்த சிவனடியார், மடம் ஒன்றை அமைத்து வாழ்ந்து வந்தார்.

அருணாசலேஸ்வரரை தனது ஆத்மார்த்த மூர்த்தியாகக் கொண்டு, நியமம் தவறாது பூஜை செய்து வந்தார். அடியார்களுக்கு அருந்தொண்டாற்றி வந்த இவர், அரிய தவராஜனாகவும் விளங்கினார். உலகம் புகழ்ந்த இவரது பெருமைகளை தனது திருப்புகழில் புகழ்ந்துள்ளார் அருணகிரிநாதர். அருணகிரிநாதரின் சம காலத்தில் வாழ்ந்தவர் இத்தலத்தின் சோமநாத ஜீயர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மடத்தில் முருகப்பெருமானை விசேஷமான முறையில் பூஜை புரிந்து வந்ததை தனது திருப்புகழில் பாடிப் பரவியுள்ளார் அருணகிரியார்.

இங்கே கிடைத்த கல்வெட்டுகளின் மூலமே சோமநாத ஜீயரின் விபரங்கள் நமக்குத் தெளிவாயின. கி.பி.1348ம் ஆண்டு வீர பொக்கண்ண உடையார் மகன் குமார கம்பண்ண உடையார் காலத்தில் ஸ்ரீ வித்யாபதீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான மடத்தின் பொறுப்பையும், காணி ஆட்சியையும், மனையையும் சோமநாத ஜீயருக்குக் கொடுத்து கௌரவித்துள்ளார்.

கி.பி. 1355ம் ஆண்டு ஹரிஹர உடையார் காலத்தில் வித்யாபதீஸ்வரர் கோயிலில் திருப்பணிகள், நித்திய பூஜை, திருவிழாக்கள் போன்றவை நடத்திட முழு சுதந்திரமும், நிலங்களும் சோமநாத ஜீயருக்குக் கொடையாக அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் செல்வாக்கையும், மகேசன் செல்வாக்கையும் ஒருங்கே பெற்ற இந்த சோமநாத ஜீயர், இவ்வூர் மக்களால் ‘ஐயன்’ என்றே அழைக்கப்பட்டு வந்துள்ளார். இதன் பொருட்டு பின்னாளில் இவ்வூர், ‘ஐயன்புத்தூர்’ என்றே அழைக்கப்பெற்றது. தற்போது 12 புத்தூர் என வழங்கப்பெறுகிறது.

கிழக்கு நோக்கிய திருக்கோயில், தெற்குமுக ராஜகோபுரம் ஒரு காலத்தில் இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. சுற்று மதில் காணப்படவில்லை. முதலில் பலிபீடம் மற்றும் நந்தி மண்டபம். பின், சில படிகள் கொண்ட முகமண்டபம். இங்கே பிறைநிலவுடன் கூடிய காளையின் புடைப்புச் சிற்பத்தைக் காணலாம். விஜயநகர அரசர்களின் சின்னம் இது. நடுவே உள்ள வாயிலினுள் நுழைந்து, உள்ளே செல்ல மகாமண்டபம். அதன் வலப்புறம் சோமநாத ஜீயர் மற்றும் அருணகிரிநாதர் சிற்பங்கள் காணப்படுகின்றன. அருகே சோமநாத ஜீயரது வரலாற்றுக் கல்வெட்டு ஒன்றும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

மகாமண்டபத்தை அடுத்து, அந்தராளம் மற்றும் மூலஸ்தானம். கருவறையினுள் அருளே வடிவாய், அழகே உருவாய் அற்புதப் பொலிவுடன் திருக்காட்சி அளிக்கின்றார் ஸ்ரீ வித்யாபதீஸ்வர். வித்தைகள் பல கற்றிட இவரை சரணடைவதை விட வேறு என்ன வழி இருக்கிறது? அரனாரை அடிபணிந்து ஆலய வலம் வருகையில், நிருதி மூலையில் தல கணபதியையும், அடுத்ததாக வள்ளி, தெய்வானையுடனான கந்தக் கடவுளையும் தனிச் சன்னிதிகளில் தரிசிக்கலாம். சுவாமி கோமுகத்தருகே சண்டேஸ்வரர் சன்னிதி கொண்டுள்ளார்.

அருணகிரிநாதர் இக்கோயிலில் முருகனை அகப்பகை மற்றும் புறப்பகை நீங்கிட வழிபட்டு, திருப்புகழ் பாடியுள்ளார். தென்முகம் பார்த்த அம்மையின் சன்னிதி புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அம்பிகை ஸ்ரீ அக்ஷரவல்லி, சிறிய வடிவில் நின்ற கோலத்தில அபயமளிக்கின்றாள். அரசர் காலத்தில் சிறப்புற்றிருந்த இந்தக் கோயில் அன்னியர் படையெடுப்பாலும், இயற்கையின் சீற்றத்தாலும் முற்றிலும் சிதிலமடைந்துப்போனது.

டைசியாக இந்த ஆலயம் 1810ல் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு, குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. இவ்வாலய கல்வெட்டுகள் அனைத்தும் மண் மூடி மறைந்து இருந்தது. அதை வெளியே எடுத்து படியெடுத்தபோது பல அரிய தகவல்கள் நமக்குக் கிடைக்கப் பெற்றன. இது தவிரவும், மண்டப வெளிச்சுவர்களிலும் பல கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அரசுக்குச் சொந்தமான இவ்வாலயத்தில் தினமும் ஒரு கால பூஜை மட்டுமே நடைபெறுகின்றது. இவ்வாலயத்தை ஊர் நிர்வாகத்தினர் உதவியுடன் எப்போது வேண்டுமானாலும் தரிசிக்கலாம்.

அனைத்து வித்தைகளுக்கும், கலைகளுக்கும் அதிபதியாகத் திகழும் இத்தலத்து வித்யாபதீஸ்வரரை தேன் அபிஷேகம் செய்து வழிபட, கலைத்துறையிலும், கல்வி கேள்விகளிலும் சிறந்து விளங்கலாம். எழுத்து வடிவாய்த் திகழும் இத்தலத்து அம்பிகை ஸ்ரீ அக்ஷரவல்லியை பசும்பாலால் அபிஷேகித்து வழிபட, எழுத்துத் துறையில் உள்ளோர் மேன்மையடையலாம். எழுத்துகளில் புதிய பரிமாணங்களை உருவாக்கலாம்.

அருணகிரிநாதர் புகழ்ந்த இத்தல கந்தனுக்கு தேனும், தினை மாவும் நிவேதனம் செய்து வழிபட்டு, வழக்குகளில் வெற்றியையும், சிக்கல்களில் தீர்வும் பெறலாம். பகையால் உண்டாகும் துன்பங்களில் இருந்தும் விடைபெறலாம். அறிவாற்றல் குறைந்த, திக்குவாய் உள்ள குழந்தைகளை இங்கு அழைத்து வந்து வழிபாடுகள் செய்ய, சிறந்த அறிவாற்றலும் இனிய குரலும் கிடைக்கப் பெறுகின்றனர்.

அமைவிடம்: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி-ஆற்காடு சாலையில் உள்ள தாமரைப்பாக்கத்தில் இருந்து ஐந்து கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது 12 புத்தூர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com