எண்ணமும் வண்ணமும்!

எண்ணமும் வண்ணமும்!

புகழ் பெற்ற இதிகாசமான ராமாயணத்தை தனது சீடர்களுக்கு உபதேசித்துக் கொண்டிருந்தார் ஸ்ரீ ராமதாசர். அன்றைய தினம் சுந்தர காண்டப் பகுதியைச் சுவைபட, பக்தி ரசம் சொட்டச் சொட்ட சொல்லிக் கொண்டிருந்தார்.

“சீதா தேவி எங்கிருக்கிறார் என்று தேடிய அனுமன், அசோக வனம் சென்றடைந்தான். அசோக வனம் முழுவதும் வெள்ளை நிற மலர்கள் பூத்திருந்தன.” குருநாதரின் உரையை மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்தனர் சீடர்கள்.

அப்போது அங்கு ஒரு குரல் ஓங்கி ஒலித்தது… “அசோக வனத்தில் பார்த்த இடத்தில் எல்லாம் சிவப்பு வண்ணத்தில்தான் பூக்கள் இதழ் விரிந்திருந்தன. தவறாகச் சொல்லிவிட்டீர்களே” என்றது அந்தக் குரல். தப்பைச் சுட்டிக்காட்டியவர் அருவ நிலையில் அமர்ந்து கதை கேட்டுக் கொண்டிருந்த ஆஞ்சனேயர்தான்.

குருநாதர் ராமதாசர் குறுக்கிட்டு, குரல் கொடுத்த அனுமனை வணங்கி, “எங்கு ராமாயணம் நடந்தாலும் அதை நீ கேட்டுக்கொண்டிருப்பாய் என நான் அறிவேன். தற்போது அதை எனது சீடர்கள் மகிழ நிரூபித்து விட்டாய். உனக்கு எனது பணிவான வந்தனங்கள். ஆனால், நான் சொன்னது சரிதான். அசோக வனப் பூக்கள் வெண்ணிறம் கொண்டவையே” என்றார் ராமதாசர்.

அதிர்ச்சி அடைந்த அனுமன், “அசோக வனம் சென்று நேரில் பார்த்தவன் நான். அங்கு பூத்திருந்தவை அனைத்தும் சிவப்புப் பூக்கள்தான். அப்படியிருக்க, வெண்மையே என்று நீங்கள் எப்படி கூறலாம்?” என்றான்.

‘வெண்மையே… செம்மையே…’  என இருவரும் மாறி மாறிச் சொல்ல, இறுதியில் இந்த விவாதம் நடுவர் ஸ்ரீராமனிடம் சென்றது.

டுவர் தீர்ப்பளித்தார். “குருநாதர் ஸ்ரீராமதாசர் கூற்றே சரி. பூத்திருந்தவை அனைத்தும் வெள்ளை நிறம் கொண்டவையே.”

சோக நிலையில், சிறையிலிருந்த கோலத்தில் சீதோ தேவியை, அனுமன் பார்த்தார். ராவணனின் கொடுஞ்செயல் கண்டு கோபம் மிகக் கொண்டதால் அனுமனின் கண்கள் சிவந்திருந்தன. அந்த நிலையில் அவனது பார்வையில் தென்பட்டவை அனைத்தும் செம்மையாகவே தெரிந்தன. ஒருவரின் எண்ணம் எப்படியோ, அப்படியே அவர்களது பார்வையின் நோக்கும் என்பதற்கு இதுவே உதாரணம்.

அதன்படி, அனுமனின் எண்ணப்படியே, அங்கு பூத்திருந்த பூக்களின் வண்ணமும் அவனது கண்களுக்கு சிவப்பாகவே தெரிந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com