பக்தரை ஆட்கொள்ளும் புலியூரே!

பக்தரை ஆட்கொள்ளும் புலியூரே!

சிறுகதை

ஓவியம்; வேதா

கோடை வெயிலின் புழுக்கம் தாங்கவில்லை! அகலமான திண்ணையில் பெரிய தூணில் சாய்ந்தபடி அமர்ந்திருந்த பிள்ளையவர்கள் தனது மேல்துண்டால் விசிறிக் கொண்டபடி, "அம்மாடி, கொஞ்சம் குடிக்கத் தண்ணீர் கொடம்மா," என உள்நோக்கிக் குரல் கொடுத்தார். செண்பகத்தம்மாள் பானையிலிருந்து குளிர்ந்த நீரை மொண்டு செம்பில் நிறைத்துக்கொண்டுவந்து கணவரிடம் நீட்டினாள்.

       விட்டத்தை வெறித்தபடி அமர்ந்திருந்த கணவரிடம் ஆறுதலாக, "நீங்க இப்பிடியே மனசு ஒடஞ்சு போயி உட்காந்திருந்தா எல்லாம் சரியாப் போயிடுமா? அந்த அம்பலவாணர் மேல பாரத்தப் போட்டுட்டு, ஒங்க வழக்கப்படி பாட்டெழுதி, பாடுங்களேன்," என்றாள்.

       "செண்பகம், நீ சொல்லறதும் சரிதான். ஊட்டுவிப்பானும், உறங்குவிப்பானும், ஆட்டுவிப்பானும், அடங்குவிப்பானும் அவன்தானே. அந்த அம்பலவாணன் தான் நமக்கு எல்லாம். பாரத்தை அவன் காலடியில நான் இறக்கி வெச்சாச்சே, என்றைக்கு கண்திறப்பானோ என்னப்பன்," எனக் கண்களை மேல்துண்டால் துடைத்துக் கொண்டார் மாரிமுத்தாப் பிள்ளைவாள்.

       "என்னமோ போராத வேளை. நல்லாயிருந்த பிள்ளை இப்படியாயிடுமின்னு யாரு நெனைச்சது?" அம்மாளும் தனது கண்களை புடைவைத் தலைப்பினால் துடைத்துக் கொண்டாள். 

       மாரிமுத்தாப் பிள்ளையவர்களும் அவரது மனைவியாரும் நினைத்துத் துயரப்படுவது அவர் களுடைய மூத்த புதல்வனான தெய்வங்கன் பெருமாள் பிள்ளையைப் பற்றித்தான். "தமிழை நல்லாப்படிச்ச புள்ள, திடீர்னு இப்பிடி புத்தி சுவாதீனமில்லாம போவணுமின்னா யார் செஞ்ச குத்தமோ?" செண்பகத்தம்மாள் தழதழத்த குரலில் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அவர்களின் மூன்றாவது மகன், எட்டுவயதான இளம்பிள்ளை, கடைக்குட்டி குமாரசாமி ஓடோடி வந்தான். "அம்மா, பெரியண்ணன் கோவில்ல அம்மை சந்நிதியில உட்கார்ந்துகிட்டு பாட்டுப் பாடறாப்போல கையைத் தலையை எல்லாம் ஆட்டிக்கிட்டு இருக்குது. சனங்க எல்லாம் சிரிச்சுக்கிட்டு வேடிக்கை பாக்கிறாங்க," என்றான்.

       செண்பகத்தம்மாளின் பெற்றவயிறு பற்றியெரிந்தது; தனது சீமந்த புத்திரனைச் சென்று அரவணைத்து அழைத்துவரப் பதறியவாறு எழுந்தாள். அதற்குள் வாசலில் நிழலாடியது. நண்பரான வித்வான் நடேச பிள்ளையின் மகன், பதினெட்டு வயது  வீராசாமிப் பிள்ளைதான் பெருமாள்பிள்ளையைக் கைப்பிடித்து அழைத்து வந்து கொண்டிருந்தான். முரண்டு பண்ணாமல் கோணல் சிரிப்புடன் அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுத்தபடி வந்தான் பெருமாள்பிள்ளை. "நடராசா, நீ என்னிக்குத்தான் கண் திறக்கப் போறியோ? என் தெய்வமே!" என்று அடிவயிற்றிலிருந்து எழுந்த கேவலுடன் மகனை உள்ளே அழைத்துச் சென்று கைகால் கழுவிவிட்டுச் சோறு ஊட்டலானாள் தாய்.

       சாயரட்சை பூசையின் மணி கோவிலிலிருந்து அடிக்க ஆரம்பித்தது. "வீரு, உட்காரப்பா இப்படி; மனசுல நிம்மதியே இல்லாம போச்சே ஐயா. என்ன பண்ணுவோம் நாங்க?" என்றார் மாரிமுத்தாப்பிள்ளை.

       "கவலைப்படாதீங்க ஐயா. தெய்வம் கைகொடுக்காமலா போகும்?" என்றான் வீராசாமி பணிவாக.  தில்லைவிடங்கன் என்ற அந்த ஊரில் பெரிய சங்கீதவித்வான் நடேசபிள்ளை. பெரும் தமிழ்ப்புலமை படைத்த மாரிமுத்தாப்பிள்ளை, இயற்கையாகவே இசையிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். தில்லை நடராசன் மீது தாமியற்றும் பாடல்களைத் தாம் விரும்பும் ராகங்களில் வடிவமைப்பார். அவற்றைச் செப்பனிட்டு மெருகேற்றுவார் நடேச பிள்ளை. அவர் மகன் வீராசாமியும் இசையில் நல்ல தேர்ச்சிபெற்று வந்தான்.

       முன்னிரவு நேரம்; நெடுமூச்செறிந்த மாரிமுத்தாப் பிள்ளை எதையோ எண்ணியவராக, "வீரு, நேத்து உங்க அப்பாரு பாடினாங்களே, அந்த செவ்வழிப்பண் உருப்படியைப் பாடப்பா," என வேண்டினார். வீராசாமி உள்ளேபோய் மாரிமுத்து ஐயாவின் தம்புருவை எடுத்து வந்தான். சுருதி சேர்த்தான். செவ்வழிப்பண்ணைப் (இக்காலத்து யதுகுல காம்போதி) பாட ஆரம்பித்தான். ராகத்தின் அழகான நெளிவு சுளிவுகள் அவனுடைய இதமான, வெண்கலமணி போலும் குரலில் அழகழகாக உருப்பெற்றன. சில நகாசு வேலைகளையும் செய்து அதற்கு ஒரு தெய்வீக வடிவம் கொடுத்து பிள்ளையவாளின் இல்லத்துச் சூழலையே கோவிலாக்கினான் வீரு. தெய்வப் பிரதிஷ்டை தொடங்கியது.

       "காலைத்தூக்கி நின்றாடும் தெய்வமே- எனைக்

       கைதூக்கியாள் தெய்வமே," எனக் குழைவாகப் பாட ஆரம்பித்ததும் பிள்ளையவர்களின் கண்களில் குபுக்கென நீர் பொங்கியது. அவர் இயற்றின பாடல் தான்; மெட்டும் அவர் போட்டதுதான். ஆனால் கேட்பவர் வாயால் கேட்டால் உள்ளம் உருகுகிறதே! தான் இயற்றியபோது இந்த வரிகளை யதார்த்தமாகத்தான் அவர் போட்டிருந்தார். இப்படி உள்ளத்தைக் கரைக்கும் சக்தி கொண்டனவா இவ்வரிகள்? அடடா, வீருவின் குரலில் இப்படி ஒரு காந்தசக்தியா?

       "சிந்தைமகிழ்ந்து வானோர் சென்னிமேல் கரந்தூக்க," என வீராசாமி பாடலை நிறைவு செய்யும் போது தம்மையறியாமலே மாரிமுத்தா பிள்ளையின் கரங்களும் சென்னிமீது சென்று குவிந்தன. ஓசையின்றித் தம்புருவை அதன் இடத்தில் வைத்துவிட்டு வந்த வீரு, "பாட்டைக் கேட்டுக்கொண்டே பெருமாள் அப்படியே உறங்கிட்டான் ஐயா," என்றபடி வீடுசெல்லக் கிளம்பினான். உணர்ச்சிப் பெருக்கிலிருந்து இன்னும் மீளாத பிள்ளைவாள் தலையை மட்டும் அசைத்து விடை கொடுத்தார்.

       "சாப்பிட வறீங்களா? குழந்தைங்க காத்துக் கிட்டிருக்காங்க," என்ற செண்பகத்தம்மாளின் குரலைக் கேட்டதும் மெல்ல எழுந்தார். கடைக்குட்டி குமரு நாலடியாரை வாய்விட்டு ஓதிக் கொண்டிருந்தான். தந்தையைக் கண்டதும் குரல் அடங்கி ஒலித்தது. இரண்டாமவன் சுப்பையா தாயிடம் என்னவோ கேட்டுக் கொண்டிருந்தான். இவரைக் கண்டதும், இலைகளை எடுத்துப் போடலானான். குவளைகளில் நீரை எடுத்து வைத்தான்.

       பேசாமல் இலையில் அமர்ந்தார். எண்ணங்களை ஒதுக்கிவிட்டு நான்குவாய் சோற்றை அள்ளிப் போட்டுக் கொண்டார். எழுந்துவிட்டார். செண்பகத்தம்மாளுக்கு அவர்நிலை புரிந்ததனால் பரிதாபமாக ஒரு பார்வை மட்டும் பார்த்துப் பெருமூச்சு விட்டாள்.

       திண்ணையில் வந்து அமர்ந்து கொண்டார்... எண்ணங்கள் தறிகெட்டு ஓடின...

       அவர்களுடையது விருந்தோம்பலுக்குப் பெயர்பெற்ற சைவ வேளாளர் குடும்பம். வாழ்க்கை வசதிகளுக்குக் குறைவில்லை. தமிழ்மீது உள்ள ஆர்வத்தினால் தாமும் கற்றுத் தம் மக்களுக்கும் தமிழைக் கற்பிக்கிறார் மாரிமுத்தா பிள்ளை. தில்லை ஆடல்வல்லான்மீது பாடல்களை அவ்வப்போது புனைந்து பாடுவார். அவருடன் இருக்கும் இசையில் தேர்ந்த நண்பர் குழாம், கோவிலில் அவற்றை மெருகேற்றிப் பாடுவார்கள். ஊரில் மாரிமுத்தாப்பிள்ளையவர்களுக்குப் பெரும் மரியாதை உண்டு. நண்பர் நடேசபிள்ளையின் மகன் வீராசாமிப் பிள்ளை முன்னுக்கு வந்துகொண்டிருக்கும் இளம்பாடகன். சங்கதிகளும் பிருகாக்களும் தாராளமாகப் புழங்கும் கச்சிதமான குரல் அவனுக்கு.

       விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதுபோல தந்தை மாரிமுத்தாப் பிள்ளையிடமே தமிழைக் கற்றுவந்த மூத்தமகன் தெய்வங்கன் பெருமாள் பிள்ளை, உமையம்மை மாலை எனும் நூலை எழுதிப் போனமாதம் தான் அரங்கேற்றமும் ஆயிற்று. இருந்திருந்து வயது பதின்மூன்றே நிரம்பிய பருவம் அவனுக்கு. தெளிந்த நீரோடையாக ஓடிக்கொண்டிருந்த மாரிமுத்தா பிள்ளையின் வாழ்க்கையில் எதிர்பாராத அலைகள். பத்துப் பதினைந்து நாட்களாக அவன் சித்த சுவாதீனம் இல்லாதவன்போல் நடந்து கொள்கிறான். பாடங்களைப் படிப்பதில்லை. நேரத்திற்கு பூசை, அன்ன ஆகாரம் கிடையாது. முதலில் குடும்பத்தாருக்கு ஒன்றுமே புரியவில்லை. பிறகே சித்த சுவாதீனம் இல்லாத அவனது நிலைமை விளங்கியது. பிள்ளையவர்கள் நிலைகுலைந்து போனார்.

       அவருடைய நித்ய நியமங்கள் வீட்டிலேயே நடைபெற்றன. கோவிலுக்குப் போனால் யாராவது வருத்தப்பட்டுக் கேட்கும் கேள்விகளுக்கு மனது பொறுப்பதில்லை; வீட்டிலேயே இருந்துகொண்டு தமது இறைவனை, நடராசனை வேண்டலானார் பிள்ளை. இன்றும் அப்படித்தான்: 'என்னைக் கைதூக்கியாள் தெய்வமே!' எனும் வரிகள் காதில் தொடர்ந்து ரீங்காரமிட்டன. எண்ணி எண்ணிக் களைத்து ஏங்கி அப்படியே திண்ணையில் உறங்கியும் போனார் அவர்.

       அதிகாலையில் விழிப்புக் கொடுத்தது. உள்ளம் என்னவோ ஒரு புத்துணர்ச்சியுடனிருந்தது. உற்சாகமாக விறுவிறுவென எழுந்தார். தில்லைக்கோவிலிருந்த திசை நோக்கிக் கரங்களை சிரமேற் குவித்தார். "தென்னாடுடைய சிவனே போற்றி!' என்று வாய்விட்டு வேண்டினார். கிணற்றடிக்குச் சென்று தமது ஸ்நானபானாதிகளை முடித்துக் கொண்டவர், கோவிலுக்குக் கிளம்பிவிட்டார். வாசல் தெளித்துக் கோலம் போட்டுக்கொண்டிருந்த மனையாளிடம், "செண்பகம், குமாரு கிட்ட ஓலைச்சுவடிகளையும் எழுத்தாணியையும் துணியில சுற்றிக் கொடுத்தனுப்பு, நான் சிதம்பரம் போயிட்டு வாரேன்," என்றபடி எட்டி நடை பயின்றார்.

       வழி நெடுக சிந்தனை; எண்ணச் சுழல்கள். ஓடாத குறைதான். ஒரு நாழிகைக்குக் குறைவான நேரத்திலேயே ஆடல்வல்லானின் திருச்சந்நிதியை அடைந்து விட்டவர், காலைப்பொழுதின் தீபாராதனையைக் கண்டு உள்ளம் நெகிழ்ந்தார்; அமைதியடைந்தார். பின் சிவகாம சுந்தரியின் சந்நிதியிலும் தொழுதவர் அமைதியான ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து அமர்ந்து கொண்டார். கண்மூடி தியானத்திலாழ்ந்தார்.

       சிறிது நேரத்தில் கண்ணைத் திறந்தவர் மகன் குமரு புது ஓலைச் சுவடிகளையும் எழுத்தாணியையும் பயபக்தியோடு ஏந்தி நிற்பதனைக் கண்ணுற்றார். தம்மருகில் சிறுவனை அமர்த்திக்கொண்டவர், கண்ணை மூடியவாறு கருத்தொருமித்துப் பாடலானார். முதலில் குஞ்சர விநாயகனை வேண்டிப் பாடியபின், அடுத்த பாடல் அற்புதமான வெண்பாவாக உருவெடுத்தது.

       சொற்செறிவே தாந்தச் சுடர்த்தகர வித்தையதாம்

       பொற்சபைநின் றோங்கும் புலியூரே - முற்சமனை

       வீசுபதத் தானடித்தார் விற்கொண் டமர்விளைத்த

       பாசுபதத் தானடித்தார் பற்று.

       உறுதியான வேதத்தின் இறுதியில் காணும் தகரவித்தை, பொன்னம்பலத்தில் நிலைபெறுவதால் சிறப்படைந்த புலியூரானது, முன்பு மார்க்கண்டேயன் பொருட்டு எமனை உதைத்த திருவடியால் நடனமாடிய வரும், தம்மிடமிருந்து பாசுபதம் பெற்ற அர்ச்சுனனால் அடிக்கப்பட்டவருமான சிவபிரானாகிய இறைவன் பொருந்தி வாழும் இடமாகும்.

       பின்னாளில் 'புலியூர் வெண்பா' எனத் தமிழ் கூறும் நல்லுலகம் போற்றிக் கொண்டாடப் போகும் ஒரு அருமையான பிரபந்தம் உருவாகத் தொடங்கியது. தமிழ் வெண்பாவிற்கான பல இலக்கண நுணுக்கங்களையும் பாடல்களுக்குள் பொருத்தி, ஈசனின் திருவிளையாடல் களையும் அவன் அடியார்களுக்கு அருளிய திறத்தையும் ஒவ்வொரு பாடலிலும் நயமாக அமைத்து வெண்பாக்களைப் பாடலானார் மாரிமுத்தாப்பிள்ளை. ஒவ்வொரு பாடலிலும் இவ்வாறு அடியார்க்கு அருள்செய்த இறைவனின் வீடு ஆகிய புலியூர், அவன் வாழுமிடம் புலியூர், விரும்பி உறையும் ஊர் புலியூர் எனவே இருக்கும். 

பாடல்கள் உருவாக உருவாக, ஓலைச் சுவடிகளில் எழுதிக் குமருவிடம் கொடுக்க அவன் அதை எண்வாரியாக அடுக்கி வைத்துக் கொண்டான். தந்தை அன்ன ஆகாரம் இல்லாமல் பாடலியற்றுகிறார் என அவனுடைய குழந்தையுள்ளம் பரிதவித்தது. உச்சிகாலப் பூஜை மணி அடித்தபோது சிறுபிள்ளைக்குப் பசித்தது. காலையில் அன்னை தந்த கஞ்சியைக் குடித்துவிட்டு தந்தை சொற்படி ஓடோடிவந்திருந்தான்.

       சதாசிவ தீட்சிதர், பிள்ளையவர்களை நன்கறிந்தவர். காலையிலிருந்து ஒரு தனியிடத்திலமர்ந்து மும்முரமாகத் தவமியற்றுவது போல அவர் எழுதிக் கொண்டிருப்பதைக் கண்டார். ஓசைப்படாமல் ஒரு சொம்பில் பானகம், மற்றொன்றில் நீர்மோர், ஒரு சீப்பு வாழைப்பழங்கள் இவற்றை அவர்கள் முன்பு வைத்துவிட்டுப் போனார். அவை களைப்புக்கும் வெயிலுக்கும் இதமாக இருந்தன. குமருவிடம் வாழைப்பழங்களைச் சாப்பிடுமாறு சைகை காட்டிவிட்டுத் தம் எழுத்தைத் தொடர்ந்தார் பிள்ளை.

       பொழுதுசாயும் சமயம் நூறு வெண்பாக்களையும் இயற்றி முடித்த பிள்ளையவர்கள், குமருவை இறுக அணைத்துக்கொண்டு, உச்சிமோந்து கண்கலங்கினார். துணியில் சுவடிகளை முடிந்து ஆடலரசன் பாதத்தில் வைத்து, தீபாராதனை காட்டவைத்து வாங்கிக் கொண்டார். "ஆடலரசே, உன் கட்டளையை நிறைவேற்றி விட்டேன்," என்று உருகி நின்றார்.

       உள்ளத்தில் உவகைபொங்க, "குமரு, உனக்குப் பசிக்கலையா? வா, அம்மா தேடுவாங்க, வீட்டுக்குப் போகலாம்," என்றபடி நடையை எட்டிப் போட்டார். 

       "ஐயாவும் மகனும் எங்க போயிட்டீங்க? கோவிலுன்னு சொன்னதால கவலைப்படல, பசிக்காதா சின்னப் புள்ளைக்கு? வாங்க, சாப்பிடலாம்," என்றபடி செண்பகம் இலைகளை விரித்துப் போட்டாள். குமரு கைகால் கழுவிக்கொண்டே அன்றைய நடப்புகளை ஆவலாகத் தாயிடம் விவரித்தான்.

       "அப்பிடியா? அப்பாரு எழுதிக்கிட்டே இருந்தாரா? என்னங்க? நிசமாவா?" கண்கள் விரியக் கேட்டாள். "மூத்தவனும் இரண்டாமவனும் உறங்கிட்டாங்களா?" என்றார் பிள்ளை. "ஆமாம்," என்பதாகத் தலையசைத்தவளிடம், "சோறு போடு; சாப்பிட்டுக்கிட்டே சொல்லறேன்," என அமர்ந்தார் பிள்ளை.

                           *      *      *

       முந்தின நாள் இரவு. துயரத்துடன் தூங்கி விட்டவரின் கனவில் ஓரு தீட்சிதர்! "அப்பனே! நீ ஏன் கவலைப் படுகிறாய்? சிவபிரான் வீடான இந்தத் திருத்தலமாம் புலியூர் மீது ஒரு அழகான பிரபந்தம் பாடு; உன் துயரமெல்லாம் பறந்தோடும் பார்," என்றார். விதிர்விதிர்த்து விழித்தெழுந்த பிள்ளைக்குப் பின் தூக்கமே வரவில்லை. சிந்தனை வயப்பட்டார்.

       இதுவரை தாம் எழுதியதெல்லாம் அழகான பொருள்செறிந்த பாடல்களே! பாமரனும் பாடி மகிழலாம். பண்டிதனும் உட்பொருளுணர்ந்து புளகிக்கலாம். தாம் கற்றுச் சுவைத்த தீந்தமிழின் யாப்பிலக்கண நயங்களெல்லாம் நிறைந்த ஒரு செய்யுள் தொடரான பிரபந்தத்தைத் (சிற்றிலக்கியத்தை) தன்னிடமிருந்து கேட்டு மகிழவே இறைவன் இப்படியொரு திருவிளையாடல் புரிந்தார் என உணர்ந்துகொண்டார் பிள்ளை. சுந்தரரின் தமிழுக்கு ஆசைப்பட்டு அவருக்காகப் பலவற்றையும் செய்தவரல்லவோ நம் சிவபிரான்?

       "செண்பகம், பிரபந்தத்தை எழுதி முடித்து விட்டுத்தான் இதை உன்னிடம் கூடச் சொல்லுவது என்று முடிவெடுத்தேன். மனசு இப்போ தெளிவாக இருக்கு," தழுதழுத்தார் பிள்ளை.

       "சரி, நிம்மதியா உறங்குங்க," எனத் திண்ணையில் அவருக்குப் பாயை விரித்தாள் செண்பகம். படுத்த தந்தையின் கால்களைப் பிடித்து விடலானான் சிறுவன் குமரபிள்ளை. அவனுடைய பிரமிப்பு நீங்கிய பாடில்லை.

       பொழுது விடிந்தது. பிள்ளையவர்கள் எழுந்து, நீராடி வந்ததும் கண்ட காட்சியென்ன? மூத்த திருமகன் தெய்வங்கன் பெருமாள் பிள்ளை இறைவன் முன்னமர்ந்து கண்களில் நீர்வழிய தேவாரம் பாடிக் கொண்டிருந்தான். பிள்ளையின் உள்ளமும் பலவிதமான உணர்வுகளில் தத்தளித்தது.

       குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண்சிரிப்பும்

       பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால்வெண்ணீறும்

       இனித்த முடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்

       மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மானிலத்தே. (அப்பர்)                                                  

       தந்தையைக் கண்டதும் எழுந்து முழு உடலும் தரையில் பதிய விழுந்து வணங்கினான். மகன் பழையபடி நல்ல நிலைக்குத் திரும்பிவிட்டதை உணர்ந்தார் பிள்ளை.

       அந்த மகிழ்ச்சியில் எழுந்த பாடல்தானோ இது!!?? 

       ராகம்: கமனாச்சிரமம்

                     பல்லவி

       பரந்தனை அடைந்திட வேண்டுமென் றால்-சிதம்

       பரந்தனை அடையுங்கள் மாந்தர்களே (பரந்தனை)

              அனுபல்லவி

       வரந்தனைத் தருமிந்தத் தலந்தன்னிலே இருந்த

       மாந்தரெல் லாருந்தவ வேந்தரே      (பரந்தனை)

                   3ம் சரணம்

       வெள்ளியினால் எங்கள் ஐயனிருக் கச்செய்த

       வீட்டை வடகயிலை என்பாரே

       தெள்ளிய செம்பொன்னி னாற்செய்த வீடிதைத்

       தென்கயி லாயம் என்பாரே            (பரந்தனை) 

 பி. கு.: பிள்ளையவர்கள் காலத்தில் ஓலைச்சுவடிகளில் எழுதும் வழக்கிருந்ததா எனத் தெரியவில்லை. இது என் கற்பனை.

புலியூர் வெண்பா சிலவாண்டுகள் சென்னைப் பல்கலைக்கழக இளநிலைப் பாடமாக இருந்ததினால் இதன் சிறப்பை உணரலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com