நிறம் மாறும் சிவலிங்கம்! தக்கோலம் ஜலநாதீஸ்வர் ஆலயம்!

தக்கோலம் ஜலநாதீஸ்வர் ஆலயம்
தக்கோலம் ஜலநாதீஸ்வர் ஆலயம்

இருக்குமிடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறார் ஞானத்தங்கமே' என்று நடிகர் திலகம் நடித்த, 'திருவருட் செல்வர்' திரைப்படத்தில், ஒரு பாடல் வரும். அதற்கொப்ப, நாம் நமது தமிழகத்திலேயே இருக்கும் ஆலயங்களை விட்டு, விட்டு வேறு மாநிலங்களில் ஆலயங்கள் தேடி அலைந்துக் கொண்டிருக்கின்றோம்.

இங்கே சென்னையிலிருந்து சுமார் 64 கி.மீ. தொலைவில், இராணிப்பேட்டை மாவட்டத்தில், தக்கோலம் எனும் திருத்தலம் இருக்கிறது. இந்த ஆலயத்தில்தான் நிறம் மாறும் சிவலிங்கம் இருக்கிறது. முதல் ஆறுமாத உத்தராயண காலத்தில் 'இளம் சிவப்பு' நிறத்திலும், அடுத்த ஆறுமாத காலத்தில், 'வெண்மை' நிறமாகவும், சிவலிங்கம் இருக்கும்.

இந்தக் கோவில்,திருஞான சம்பந்தரால், தேவாரத்தில், பாடப்பட்டத் திருத்தலமாகும். தக்கோலத்திற்குப் புராணக்காலத்தில் 'திருவூறல்' என்றழைக்கப்பட்டது. இறையனார் 'ஜலநாதீஸ்வர்'(ஜலநாதேஸ்வரர், உமாபதீஸ்வரர்) என்றும், தாயார் 'கிரிராஜ கன்னிகாம்பாள்'(மோகன வல்லியம்மை) என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

தேவகுரு பிகஸ்பதியின் தம்பி, உத்தி முனிவரினா தம்பி 'தீர்க்கதா'. தீர்க்கதா யாகம் செய்யும் இடத்திற்கு அருகாமையில், 'காமதேனு' வந்த போது, அங்கு தங்கி,யாகத்திற்கு வருவோரை உபசரிக்க வேண்டி காமதேனுவை வேண்ட, இந்திரன் அனுமதியில்லாமல் ஏதும் செய்ய இயலாது என, காமதேனு மறுத்து விட்டது. இதனால் சினம் கொண்ட தீர்க்கதா, காமதேனுப் பசுவை பிடித்துக் கட்டி வைக்க முயன்றார். அதைக் கண்டு வெகுண்ட காமதேனு, தீர்க்கதாவை சபித்து விட்டது.

தக்கோலம் ஜலநாதீஸ்வர் ஆலயம்
தக்கோலம் ஜலநாதீஸ்வர் ஆலயம்

அந்த சாபத்திலிருந்து விடுபட , தீர்க்கதாவின் தந்தை, உத்தி முனிவர், நாரதரின் அறிவுறுத்தல்படி, திருவூறல் வந்து சிவனை வேண்டினார். உடன் சிவபெருமான் தோன்றி, நந்தியை வழிப்பட்டு, அதன் வாயிலிருந்து வெளிப்படும், தேவகங்கையின் தீர்த்தத்தைக் கொண்டு என்னை வழிபட சாப விமோசனம் கிட்டும் என்றார். தீர்க்கதாவும் அவ்வாறே செய்து சாபவிமோசனம் பெற்றார். அதனால், சிவபெருமான், 'ஜலநாதீஸ்வரர்' என்றழைக்கப் படுகிறார்.

மணலால் செய்த ,சுயம்பு லிங்கமான, இறையனாருக்கு மஞ்சள் காப்பு மட்டும்தான். அபிஷேகமெல்லாம் மூலவருக்குத்தான். இறையனார், 'தீண்டாத் திருமேனி'யாவார்.

தக்கன் தலையைக் கொய்த தலம் என்பது ஐதீகம். குதஸ்தலை என்று அழைக்கப்படும் கல்லாற்றின் கரையில் அமைந்துள்ள இத்தலத்தை, 'சம்வர்த்த முனிவர்' வணங்கியுள்ளார்.

பல்லவர்கள் காலத்தில் இந்தக் கோவில் உருவாக்கப்பட்டது. பின்னர் சோழ மன்னர்களாலும், விஜயநகர மன்னர்களாலும் பராமரிக்கப்பட்டது. மூன்று நிலைகளையுடைய,

இதன் ராஜகோபுரம்,1543ல், வீரப்பிரதாப சதாசிவராயர் என்பவரால் எழுப்பப்பட்டது.

இது இரண்டு பெரிய பிரகாரங்களைக் கொண்ட ஆலயமாகும். உள்ளே இடது புறம் விநாயகர் ஆலயமும், வலது புறம் அரசமரமும் அதன் கீழே நாகதேவதைகளும் இடம் பெற்றிருக்கிறார்கள். இங்கே 'கோசாலையும்' பராமரிக்கப் படுகிறது. உள்ளே' பார்வதி சத்ய கங்கை தீர்த்தம்' எனும் குளம் உள்ளது. கோவிலுக்கு அருகாமையில் குசஸ்தலை நதியிருக்கிறது.

உள் பிரகாரத்தில் கொடிமரமும், பலிபீடமும், நந்தி தேவர் சிலையுமிருக்கிறது. இந்தக் கோயிலின் நந்தி தேவர், சாது என்பதால், மூக்கணாங்கயிறு இல்லை. கொடி மரத்திற்கு நேர, அழகான மண்டபத்தின் உள்ள கருவறையில், நடராஜர் பிரம்மாண்டமாக வீற்றிருக்கிறார். அவருக்குப் பக்கத்தில், நிறம் மாறும் சுயம்புலிங்கம் இருக்கிறது.

இடது புறம் அம்மன் சன்னதி உள்ளது. உத்தி முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பஞ்சலிங்கங்களும் மண்டபத்தின் உள்ளே அமைந்துள்ளன. உள்புறம் சற்றே தலையை சாய்த்து, பக்தர்களின் குறைகளைக் கேட்பது போல், தட்ஷிணாமூர்த்தி ,'உத்கடி' ஆசன நிலையிலிருக்கிறார். இது மூன்றாவது குரு பரிகாரத்தலம் ஆகும். வியாழன் மற்றும், ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பான, குரு பரிகாரப் பூஜைகள் நடைபெறுகின்றன.

கருவறையை சுத்தி வரும்போது, விஷணு, முருகர், பிரம்மா, லஷ்மி தாயார் போன்ற தெய்வங்களும் இடம் பெற்றிருக்கின்றன. கருவறைக்கு வெளியே அம்பாளுக்கும், முருகருக்கும் தனித்தனியே சந்நிதிகள் இருக்கின்றன. அம்பாள் சிலை தத்ரூபமாய் செய்தது போல இருக்கும். கோபுரம் மேற்குப் பார்த்த நிலையிலிருக்கும். மூலவர் கிழக்கு நோக்கியிருப்பார். அம்பாள் வடதிசை நோக்கியிருப்பார். மூலவரைக் காண உள்ளே நுழையும் வாயில் தெற்கு நோக்கியிருக்கும்.

இந்த ஆலயத்தில், வைகாசி விசாகம் ,ஆனித்திருமஞ்சனம், ஆடிப்பூரம், மார்கழி திருவாதிரை, மாசிமகம், தைப்பூசம், திருக்கார்த்திகை ஆகியவை திருவிழா நாட்களாகும். காமதேனு வணங்கியத் தலம் என்பதால், இங்கு வந்து தரிசிப்பவர்கள் எல்லா வளமும் பெறுவார்கள்.

இந்த ஆலயம், அரக்கோணத்திலிருந்து, 15 கி.மீ. தூரத்திலும், திருவள்ளூரிலிருந்து 30 கி.மீ. தூரத்திலும், திருவாலாங்காட்டிலிருந்து 15 கி.மீ.தூரத்திலும், காஞ்சிபுரத்திலிருந்து 30 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து சாலை மார்க்கமாக சுமார் 64 கி.மீ. தொலைவு உள்ளது.

இறைவன் ஈசனின் அருள்பெற்று இன்புற வருக! வளம் பெறுக!!.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com