யமுனைத்துறைவனும், தூதுவளைக் கீரையும்!

யமுனைத்துறைவனும், தூதுவளைக் கீரையும்!

நாலாயிர திவ்ய பிரபந்தம் என்னும் போற்றுதலுக்குரிய ஆன்மிகப் பொக்கிஷத்தை உலகுக்குத் தொகுத்து அளித்தவர் ஸ்ரீமந் நாத முனிகள். உய்யக்கொண்டார் என்பவர் நாதமுனிகளின் மாணாக்கர். இவர் தமது இளமைக் காலத்தில் ஆசிரியருக்குத் தொண்டு செய்வதிலேயே ஆர்வம் கொண்டிருந்தார். நாதமுனிகள், தன் மகன் ஈஸ்வரமுனிக்கு பிறக்கும் குழந்தைக்கு, 'யமுனைத்துறைவன்' எனப் பெயர் சூட்டி அருளுரை புகட்டுமாறு உய்யக்கொண்டாரை வேண்டிக்கொண்டார். உய்யக்கொண்டார், தன் இறுதிக்காலத்தில் தனது மாணாக்கர் மணக்கால் நம்பியிடம் அப்பணியை ஒப்படைத்தார். மணக்கால் நம்பி தமது ஆசிரியரின் விருப்பப்படி ஈஸ்வரமுனி மகனுக்கு யமுனைத்துறைவன் எனப் பெயர் சூட்டி, அருளுரையும் புகட்டினார். மகாபாஷ்ய பட்டர் என்பவரிடம் யமுனைத்துறைவன் மாணாக்கனாக சேர்ந்து, சாஸ்திர பாடங்களை ஐயம் அற கற்று வந்தார்.

சோழ மன்னனின் ஆஸ்தான விஸ்வானாக இருந்த 'ஆக்கியாழ்வான்' என்பவர் ஒவ்வொரு தேசமாகச் சென்று, அங்குள்ள வித்வான்களை வாதத்துக்குக் கூப்பிட்டு, அவர்களைத் தோற்கடித்து, மன்னனுக்கு கப்பம் கட்டும்படி செய்து வந்தார்.

ரு முறை, மகாபாஷ்ய பட்டரிடம், ஆக்கியாழ்வான் கப்பம் கட்டும்படி எழுதி ஒரு ஓலையை அனுப்பி வைத்திருந்தார். அந்த ஓலையை வாங்கிய யமுனைத்துறைவன் பிரித்துப் படித்துக் காண்பித்தார். மகாபாஷ்ய பட்டரை கப்பம் கட்டும்படி எழுதி அனுப்பிய ஓலையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

ஓலையைக் கொண்டு வந்த பணியாட்களின் முன்பாக அதை சுக்குநூறாகக் கிழித்துப் போட்டார் யமுனைத்துறைவன். இந்த விஷயம் மன்னனின் காதுகளுக்கு எட்டியது.

ஒரு சிறுவனுக்கு இருக்கும் துணிவைக் கண்டு அரசன் ஆச்சரியமடைந்தான். அந்த சிறுவனை அழைத்து வரும்படி பணியாட்களுடன் பல்லக்கையும் மன்னன் அனுப்பி வைத்தான். அரசு மரியாதையுடன் யமுனைத்துறைவன் அரசரைக் காண அரண்மனைக்குச் சென்றார்.

சிறுவனைக் கண்ட அனைவரும் ஆக்கியாழ்வான் போன்ற பெரிய வித்வானிடம் இந்த சிறுவன் என்ன செய்ய முடியும்? தோற்றுத்தான் போவான் போலிருக்கிறது என்று தீர்மானம் செய்து கொண்டார்கள்.

அச்சிறுவனின் தேஜோமயமான ஒளி பொருந்திய முகத்தைக் கண்ட அரசன், “இந்தச் சிறுவன் வென்றால் என் ராஜ்யத்தில் பாதி ராஜ்யத்தை அவனுக்கு நான் கொடுத்து விடுகிறேன்” என்றான். அரசியோ, “நிச்சயம் இந்தச் சிறுவன் வாதத்தில் வெல்வான். அப்படி அந்தச் சிறுவன் தோற்றால் நான் அரசி என்பதைத் துறந்து, இந்த அரண்மணையில் பணிப்பெண்ணாக இருப்பேன் என்பது உறுதி” என்றாள்.

வாதம் ஆரம்பமாகத் தொடங்கியது. ஆக்கியாழ்வான், “நான் எது சொன்னாலும் அதை மறுத்து நீ பதில் சொல்ல வேண்டும். அதுபோல் நீ எது சொன்னாலும் நான் அதற்கு மறுத்து பதில் அளிக்க வேண்டும். நம் இருவரில் யார் வெற்றி பெற்றவர் என்பதை இந்த சபை உறுதி செய்யட்டும். சிறுவனாக இருப்பதால் வாதத்தை நீ முதலில் ஆரம்பித்து வை. நான் மறுத்து பதில் அளிக்கிறேன்” என்றார் ஆக்கியாழ்வான்.

யமுனைத்துறைவன் மூன்று வாக்கியங்களை முன் வைத்தார்.

1. உங்கள் தாய் மலடி அல்ல.

2. இந்த சோழ அரசன் சார்வபௌமன்.

3. இந்த சோழ அரசி கற்புக்கரசி.

ஆளவந்தார்
ஆளவந்தார்

க்கியாழ்வானுக்கு ஒன்றுமே புரியவில்லை. அந்த மூன்று வாக்கியங்களையும் எப்படி மறுத்துச் சொல்ல முடியும்? முதல் வாக்கியத்தில் தன் தாய் மலடி என்பதை ஒப்புக்கொள்வது போல் இருக்கும். அடுத்த இரண்டு வாக்கியங்களுக்கு சோழ மன்னனையும், சோழ அரசியையும் அவமானப்படுத்துவது போல் இருக்கும். பதில் சொல்ல முடியாமல் திக்கு முக்காடினார்.

“இந்த மூன்று வாக்கியங்களுக்கும் நீ மறுப்பு தெரிவித்து பதில் சொல்வாயேயானால் நான் என் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்” என்று ஆக்கியாழ்வான் கூறினார்.

1. “தனி மரம் தோப்பாகாது. வாழை மரமோ ஒரு தடவைதான் குலை தள்ளும். ஒரு பிள்ளையைப் பெற்ற தாயும் பல பிள்ளைகளைப் பெற்ற தாய்க்கு ஈடாக முடியாது. அதனால் ஒரு பிள்ளை பெற்ற தாயை மலடி என்று சாஸ்திரம் கூறுகிறது. உங்கள் தாய்க்கு நீங்கள் ஒரே மகன் என்பதால் உங்கள் தாயும் ஒரு மலடியே.

2. சார்வபௌமன் என்றால் சக்கரவர்த்தி என்று பொருள் அல்லவா? சக்கரவர்த்தி என்றால் ஆழி சூழ் தேசம் முழுவதையும் ஆள்பவராக இருக்க வேண்டும். இந்த சோழ மன்னன் பரந்த ராஜ்ஜியம் முழுவதையும் ஆளாமல் ஒரு பகுதியை மட்டுமே ஆண்டு கொண்டிருக்கிறார். அதனால் அவர் சார்வபௌமன் அல்லர்.

3. திருமண சமயத்தின்பொழுது மணமகன், 'சோமப்ரதம்' என ஆரம்பிக்கும் இரண்டு மந்திரங்களைச் சொன்ன பிறகுதான் மணமகளை தன் மனைவியாக ஏற்க முடியும். அதன் பொருள் என்னவென்றால், சோமன், அக்னி, கந்தர்வன் ஆகிய மூவரும் இந்தக் கன்னியை அபிமானித்த பிறகே நான் இக்கன்னிகையை நான்காவதாக ஏற்கிறேன். அதன்படி ஏற்கெனவே மூன்று பேர்கள் அபிமானித்த அரசியை பதிவிரதை என்று கூற முடியாதல்லவா?” என்று தன் வாதத்தை முடித்தார் யமுனைத்துறைவன்.

க்கியாழ்வான் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். அரசனும் தான் கொடுத்த வாக்குப்படி தனது ராஜ்யத்தில் இருந்து பாதியை யமுனைத்துறைவனுக்கு கொடுத்தார். சிறுவனின் அபார ஞானத்தைக் கண்ட அரசி, “சுவாமி என்னை ஆள வந்தீரோ?” என்று கூறி சிலாகித்துக் கொண்டார். அன்றிலிருந்து யமுனைத்துறைவன் என்கிற பெயர் மறைந்து, ‘ஆளவந்தார்’ என அவர் அழைக்கப்படலானார். ஆளவந்தாரும் அரசன் கொடுத்த ராஜ்ஜியப் பகுதியை ஏற்று ஆண்டு வந்தார்.

ஆளவந்தாரின் அபார ஞானத்தை மெச்சி போற்றிய மணக்கால் நம்பி, அவரை எப்படியாவது பகவத் சேவையில் ஈடுபடுத்த வேண்டும் என்று எண்ணம் கொண்டார். ஆனால், அரசனான பிறகு அவரை சந்திப்பதே மிகுந்த கஷ்டமாக இருந்தது.  அவரைச் சந்திக்க ஒரு திட்டம் வகுத்தார்.

ஆளவந்தாரின் அந்தரங்க சமையல்காரர் மூலம், அவருக்கு மிகவும் பிடித்த தூதுவளைக் கீரையை சில நாட்கள் தொடர்ந்து கொடுத்து வந்தார். ஆளவந்தாரும் பிரியமுடன் தினமும் கீரையை உட்கொண்டு வந்தார். மணக்கால் நம்பி திடீரென்று சில நாட்கள் கீரை கொடுப்பதை நிறுத்திவிட்டார். அரசன் கீரை வரவில்லையே என்று கேட்டபொழுது, “கீரை கொண்டு வருபவர் சில நாட்களாக வரவில்லை” என்று சமையல்காரர் தகவல் சொன்னார். உடனே ஆளவந்தார், எப்பொழுது கீரை கொண்டு வருபவர் வந்தாலும் தன்னை வந்து பார்க்கும்படி கூறியிருந்தார்.

மணக்கால் நம்பி ஒரு நாள் சமையல்காரரை அணுகி தூதுவளைக் கீரையை கொடுத்தபொழுது, அரசன் பார்க்க விரும்புவதாகக் கூறி அவரை அரசனிடம் அனுப்பி வைத்தார். மணக்கால் நம்பி எதிர்பார்த்த தருணம் கைகூடி வர, அரசன் தனக்கு மிகவும் பிடித்த கீரையை தினமும் கொடுத்ததற்காக என்ன நிதி தேவைப்படும் என்று கேட்டார். ஆனால், அதற்கு மனக்கால் நம்பி என்ன பதில் சொன்னார் தெரியுமா? “உங்களுக்குச் சேர வேண்டிய நிதியே என்னிடம் உள்ளது. நான் உங்களுக்கு அதைத் தருவதற்காகத்தான் காத்திருக்கிறேன்” என்றார்.

ஆளவந்தாருக்கு ஒன்றும் புரியவில்லை. நம்பி தினமும் பகவத் கீதையை ஆளவந்தாருக்கு உபதேசம் செய்து அதன் உட்பொருளையும் விளக்கிக் கூற, ஆளவந்தாரும் பகவானை அடைவதற்கான உபாயத்தை அறிந்து கொள்ள மிகவும் ஆர்வத்துடன் இருந்தார். நம்பி அவர்கள், ஆளவந்தாருக்கு சரம ஸ்லோகத்தை உபதேசம் செய்து, ஸ்ரீரங்கத்தில் உள்ள, தாமரைக்கண்ணன் ஸ்ரீ ரங்கமன்னாரை காட்டி, “இதுவே உங்களின் பாட்டனார் உங்களுக்குக் கொடுக்க வேண்டிய நிதி என்று என்னிடம் ஒப்படைத்திருக்கிறார். இந்த ஸ்ரீரங்க பெருமான் என்ற நிதியை காத்தருள்வீராக” என்றதும், ஆளவந்தாரை ஆட்கொண்ட ஸ்ரீரங்கநாதர் கோயிலின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

சில காலம் ஸ்ரீ ரங்க மன்னாருக்கு தொண்டுகள் செய்து இறைவன் திருவடியை ஏகினார். இன்றும் ஸ்ரீரங்கத்தில் ஆளவந்தாரின் திருநட்சத்திரத்தன்று, அவருக்கு தூதுவளைக் கீரை நைவேத்தியம் சமர்ப்பிக்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com