ஐம்பெரும் சிறப்பு கொண்ட முருகன் கோயில்!

தோரணமலை முருகன்
தோரணமலை முருகன்

தென்காசி மாவட்டம், கடையம் என்னும் ஊரில் அமைந்துள்ளது அருள்மிகு தோரணமலை முருகன் திருக்கோயில். இத்தலம் மூர்த்தி, தலம், தீர்த்தம், தவம், தியானம் ஆகிய ஐம்பெரும் சிறப்புகளைக் கொண்டது. இயற்கையாக அமைந்த ஒரு குகையில் கிழக்கு நோக்கி முருகப்பெருமான் இங்கே காட்சி தருகிறார். இத்தல முருகன் திருச்செந்தூரை நோக்கிய வண்ணம் இருப்பதால் இவரை வழிபட்டால் திருச்செந்தூர் முருகனை வணங்கிய புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். வேறு எந்தத் தலத்திலும் இல்லாத வகையில் 65 வற்றாத சுனை ஊற்றுகள் இக்கோயில் அருகே உள்ளது சிறப்பு.

கோயில் வெளிப்புறம்
கோயில் வெளிப்புறம்

மலையடிவாரத்தில் வல்லப விநாயகர், சப்த கன்னியர், குரு பகவான் மற்றும் நவக்கிரகங்களுக்கு சன்னிதிகள் அமைந்துள்ளன. மேலும், சுதையாலான சிவபெருமான், சரஸ்வதி மற்றும் மகாலட்சுமி ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன. மலைக்குச் செல்ல படிக்கட்டுகள் தொடங்கும் இடத்தில் தனிச்சன்னிதியில் சுதையாலான பாலமுருகன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். பக்தர்களின் நோய்களைத் தீர்க்கும் கடவுளாக விளங்குகிறார் தோரணமலை முருகன். இவருக்கு இடதுபுறம் இருக்கும் சற்று உயரமான சுனை, புனித நீராகக் கருதப்படுகிறது. இந்த சுனையில் இருந்துதான் முருகப்பெருமானின் தினசரி அபிஷேகத்திற்கு தண்ணீர் எடுத்துவரப்படுகிறது. மலை உச்சியில் பெரும் பாறைக்கு இடையில் இப்படி ஊற்று பொங்கி வருவது சிறப்பம்சமாகும். அதேபோல், முருகப்பெருமானின் வலதுபுறம் உள்ள ஒரு பாறையில் ஒரு கை மட்டுமே போகும் அளவுக்கு பொந்து ஒன்று உள்ளது. அதுவும் ஒரு சுனைதான். அதனுள்ளும் தண்ணீர் எப்போதும் சுரக்கிறது. இதன் எதிரே ஸ்ரீராமர் பாதமும், அதன் அருகே பத்ரகாளி அம்மனுக்கு தனிச்சன்னிதிகள் உள்ளன.

கோயில் முகப்பு
கோயில் முகப்பு

தொழில் வளம் சிறக்க, குடும்பப் பிரச்னை தீர, எதிரிகளின் தொல்லை அகல, நோய்கள் குணமாக, சொத்துத் தகராறு, குடும்பத் தகராறு நீங்க, கல்வி, வேலை வாய்ப்பு, திருமணப் பேறு, மகப்பேறு, உயர் பதவி ஆகியவற்றுக்காக இக்கோயிலில் பிரார்த்தனை செய்யப்படுகிறது. வேண்டுதல் நிறைவேறியதும் சுவாமிக்கு பொங்கல் வைத்தும், மொட்டை அடித்தும், காவடி எடுத்தும், பால்குடம் சுமந்தும், முடி காணிக்கை செலுத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தப்படுகிறது. கிருத்திகை, பௌர்ணமி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. இவை தவிர, தைப்பூசம், வைகாசி விசாகம், சித்திரை திருநாள் ஆகியவை இக்கோயிலின் முக்கியத் திருவிழாக்களாகும்.

அமைவிடம்: திருநெல்வேலியில் இருந்து சுமார் 56 கி.மீ., கடையத்திலிருந்து கோயிலுக்குச் செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com