
தஞ்சாவூரில் இருந்து சுமார் 10 கி. மீ. தொலைவில் அமைந்துள்ள தென்குடித்திட்டை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில் ஒன்பது அதிசயங்களை ஒருங்கே அமையப்பெற்றது. ஒவ்வொரு யுகம் முடியும்போதும் பிரளயம் ஏற்பட்டு, புதிய யுகம் தோன்றும். அப்படி ஒரு யுகத்தின் முடிவில் பூமியில் அதீத மழை பெய்து, வெள்ளப்பெருக்கு உண்டானது. உயிர்கள் அனைத்தும் அழிந்தன. அனைத்து பகுதிகளும் நீரில் மூழ்கிப் போயின. ஆனால், பூமியின் ஒரு பகுதி மட்டும் நீரில் மூழ்காமல் மேடாக (திட்டு) காணப்பட்டது. அந்தத் தலமே, ‘தென்குடித்திட்டை.’
பரம்பொருளான இறைவன் ஒருவரே. அந்தப் பரம்பொருளே தன்னில் இருந்து ஒரு பகுதியை சக்தியாகப் பிரித்து உமாதேவியை உண்டாக்கினார். பரம்பொருளுக்கு நிகரானவள் சக்தி என்பதால், திட்டை திருத்தலத்தில் இறைவனுக்கு நிகரான உயர்ந்த பீடத்தில் அம்பாளும் வீற்றிருக்கிறார். இந்த அன்னையின் சன்னிதிக்கு மேல் உள்ள விதானத்தில் 12 ராசிக்கான கட்டங்கள் செதுக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் தங்கள் ராசிக்குரிய கட்டத்தின் கீழ் நின்று வழிபட்டால், அவர்களுக்குண்டான கிரக தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.
பிரளயத்தின் முடிவில் பரம்பொருளும், உமையும் இணைந்து மீண்டும் உலகையும், உயிரினங்களையும் படைக்க மும்மூர்த்திகளைத் தோற்றுவித்தனர். அவர்கள் இருண்ட பிரபஞ்சத்தைக் கண்டு அஞ்சினர். அவர்கள் அலைந்து திரிந்து திட்டையை அடைந்து இறைவனைத் தொழுதனர். அப்போது பரம்பொருள், உடுக்கையை முழங்கினார். அதில் இருந்து வெளிப்பட்ட மந்திர ஒலிகள், மும்மூர்த்திகளின் அச்சத்தைப் போக்கி அமைதிப்படுத்தியது. அவர்களின் மாயை நீங்கி, வேத அறிவைப் பெற்றனர். ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய தொழிலைச் செய்தனர்.
தட்சனால் சாபம் பெற்ற சந்திரன், தினம் ஒரு கலையாக தேய்ந்து வந்தார். அதில் இருந்து மீள திங்களூர் கயிலாசநாதரை வணங்கினார். இதையடுத்து சந்திரனின் சாபம் போக்கி, மூன்றாம் பிறையாக தன் சடைமுடியில் இறைவன் சூடிக்கொண்டார். சாப விமோசனம் அளித்த இறைவனுக்கு நன்றி செலுத்தும்விதமாக, திட்டையில் அருளும் இறைவனுக்கு மேலே, சந்திரகாந்த கல்லாக சந்திரன் வீற்றுள்ளான். மேலும் காற்றின் ஈரப்பதத்தை ஈர்த்து ஒரு நாழிகைக்கு (24 நிமிடம்) ஒரு சொட்டு என்ற ரீதியில் இறைவனை நித்திய அபிஷேகம் செய்கிறான்.
‘நமசிவாய’ என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை மனதில் நிறுத்தும் அற்புத வடிவமே, சிவலிங்கம். திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தின் நான்கு மூலைகளிலும் நான்கு சிவலிங்கங்கள் நிறுவப்பட்டுள்ளன. மூலவர் வசிஷ்டேஸ்வரர் பிரதானமான ஐந்தாவது லிங்கமாக இருக்கிறார். எனவே, இந்த ஆலயம் பஞ்சலிங்கத் தலமாக போற்றப்படுகிறது. பஞ்ச பூதங்களும், பஞ்ச லிங்கங்களாக வீற்றிருப்பதாக ஐதீகம்.
பொதுவாக, ஒரு ஆலயத்தில் மூலவர் மட்டுமே பிரதானமாக வழிபடப்பட்டு, வரம் தரும் நாயகனாக விளங்குவார். ஆனால், திட்டை திருக்கோயிலில், சிவன், அம்பாள், விநாயகர், முருகப்பெருமான், குரு, பைரவர் ஆகிய ஆறு பேரும் தனித்தனியே அற்புதங்கள் நிகழ்த்தி, தனித்தனி வழிபாட்டுக்குரிய சன்னிதிகளோடு அருள்கிறார்கள். இவர்கள் பிரதான மூலவரைப் போல, பிரதான தெய்வமாக இக்கோயிலில் விளங்குவது சிறப்புக்குரியது.
பெரும்பாலான ஆலயங்களின் கட்டடங்கள் கருங்கற்களாலும், செங்கற்களாலும் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், அவற்றில் இருக்கும் கொடிமரம், விமானத்தில் உள்ள கலசம் போன்றவை உலோகங்களால் செய்யப்பட்டவையாக இருக்கும். ஆனால், திட்டை திருத்தலத்தில் கொடிமரம், விமானங்கள், கலசங்கள் கூட கருங்கற்களினால் உருவாக்கப்பட்டவை ஆகும்.
பிரம்மஹத்தி தோஷத்தினால் பீடிக்கப்பட்ட பைரவர் பல தலங்களுக்குச் சென்று சிவபெருமானை வழிபட்டார். அதன் ஒரு பகுதியாக திட்டைக்கு வந்து, மூலவரான வசிஷ்டேஸ்வரரை ஒரு மாத காலம் பூஜித்தார். இதையடுத்து அவரது தோஷம் நீங்கியது. எனவே, இது காலபைரவ க்ஷேத்ரமாகவும் திகழ்கிறது. சனியால் ஏற்பட்ட தோஷங்கள் விலக இந்த பைரவரை வணங்கலாம்.
நவக்கிரகங்களில் முதன்மையான சுப கிரகமாகத் திகழ்பவர் குரு பகவான். தான் பார்க்கும் இடங்கள் தோஷம் நிறைந்ததாக இருந்தாலும், தனது பார்வை பலத்தால் சுபமாக மாற்றுபவர். உலகத்தின் தனம், தான்யம், பொன், பொருள், பணம் உள்ளிட்டவற்றுக்கு அதிபதி. இப்படிப்பட்ட குரு, திட்டை தலத்தில் ராஜகுருவாக எழுந்தருளியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் குரு பெயர்ச்சி இங்கு வெகு விமரிசையாக நடைபெறுகிறது.