இறைவனை திருப்திப்படுத்தும் நான்கு!

இறைவனை திருப்திப்படுத்தும் நான்கு!

றைவனை பூஜிக்க ஆடம்பரமோ, அமர்க்களமோ தேவையில்லை. உண்மையான பக்தியும் உளப்பூர்வ அன்பும் இருந்தாலே போதும். குறைந்தபட்ச வழிபாட்டுப் பொருட்களை வைத்தே இறைவனின் பேரருளைப் பெறலாம். இறைவனை பூஜிக்க வெறும் நான்கு பொருட்கள் இருந்தாலே போதும். அவை இலை, பூ, பழம், நீர் ஆகியவையாகும். இதைத்தான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தமது கீதையில்,

‘பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோமே பக்த்யா ப்ரயச்சதி

ததஹம் பக்த்யுபஹ்ருதம் ஆச்னாமி ப்ரயதாத்மன’

என்று குறிப்பிடுகிறார்.

‘யார் ஒருவர் இலை, பூ, பழம், நீர் ஆகியவற்றை உளப்பூர்வ பக்தியுடன் எனக்கு சமர்ப்பிக்கின்றாரோ, அவற்றை நான் அன்புடன் ஏற்றுக்கொண்டு அவருக்கு அருள் செய்கிறேன்’ என்பது இதன் பொருள். அதனை அடிப்படையாகக் கொண்டே பூஜையில் வெற்றிலை, பாக்கு, பழம், நீர் ஆகியவற்றை இறைவனுக்கு நிவேதனம் செய்து பூஜிக்கிறோம்.

எந்த இலைக்கும் இல்லாத ஒரு தனிச்சிறப்பு வெற்றிலைக்கு உண்டு. அதாவது, வெற்றிலை மற்ற இலைகளைப் போல காய் காய்த்து, பழம் பழுத்து வளரும் தாவரம் கிடையாது. இந்தத் தாவரத்தில் வெறும் வெற்றிலைகள் மட்டுமே விளையும். ஆகவேதான் அதற்கு, வெற்று+இலை=வெற்றிலை எனப் பெயர்.

பாக்கு என்பதும், ஒருவித பழ வகையைச் சேர்ந்ததுதான். வடமொழியில் இதை, ‘பூகீபலம்’ என்கிறார்கள். மற்ற பழங்கள் அனைத்தும் சில காலமே இருந்து பின்னர் அழுகிப் போய்விடும். ஆனால், ‘பூகீபலம்’ எனப்படும் பாக்குப் பழம் மட்டும் பல காலம் அழுகாமலேயே உயிர்ப்புடன் இருக்கும்.

அதேபோல், பெரும்பாலான பழங்கள் அனைத்துக் காலத்திலும், அதாவது சீசனிலும் கிடைக்காது. ஆனால், அனைத்து காலத்திலும் மிகச் சுலபமாகக் கிடைக்கக்கூடிய பழம் என்றால் அது வாழைப்பழம்தான். அதனால்தான், வாழைப்பழத்தை இறைவனுக்குப் படைக்கும் நிவேதனத்தில் சேர்த்தார்கள் நமது முன்னோர்கள். தெய்வத்துக்கு நிவேதனம் செய்ய வாழைப்பழம்தான் என்றில்லை. எந்தெந்தக் காலத்தில் எந்தெந்தப் பழங்கள் சுலபமாகக் கிடைக்கிறதோ, அந்தந்தப் பழங்களை இறைவனுக்கு நிவேதனம் செய்து பூஜிக்கலாம். மேலே குறிப்பிட்ட, சுலபமாகக் கிடைக்கக்கூடிய நான்கு பொருட்களை கொண்டு பூஜித்தாலே இறைவன் மனம் மகிழ்ந்து அருள்பாலிப்பார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com