ராமாயணக் காவியக் கதாநாயகி!

ராமாயணக் காவியக் கதாநாயகி!

ராமாயணக் காவியத்தில் உண்மையில் கதாநாயகி யார் என்றால், லட்சுமணன் மனைவி ஊர்மிளாதான். கணவன் லட்சுமணன், ஸ்ரீராமனுடன் காட்டுக்குச் சென்றவுடன் 14 வருடங்கள் தனது வாழ்க்கையைத் தியாகம் செய்தவள். ஜனக மகாராஜாவின் தத்து மகள்தான் சீதை. ஆனால் ஜனகரின் உண்மையான மகள் ஊர்மிளா! ஜனகரின் தம்பி குஜஸ்த்வஜாவின் மகள் மாண்டவி. இவள் பரதனை மணந்தவள். இன்னொரு மகள் ஸ்ருதகீர்த்தி. இவள் சத்ருக்கனை மணந்தவள்.

இந்த நான்கு சகோதரிகளும் புகுந்த வீட்டில் மகிழ்ச்சியாக இல்லை! தவிர, லட்சுமணனின் மனைவி ஊர்மிளா ராமாயணக் காவியத்தின் மறைக்கப்பட்ட கதாநாயகி மட்டுமல்லாது, கணவனின் 14 ஆண்டு காலத் தூக்கத்தையும் தானே வாங்கிக் கொண்டு கணவனுக்காக வாழ்ந்தவள்.

காட்டில் ராமனும் சீதையும் குடிலில் உறங்கிக் கொண்டிருந்தபோது வெளியே லட்சுமணன் உறங்காமல் காவல் காத்துக் கொண்டிருந்தான். அப்போது நித்ரா தேவி, லட்சுமணனை உறங்க வைக்க முடியாமல் மிகவும் திணறுவாள். அவள் லட்சுமணனிடம் சொல்கிறாள், "இதோ பார்… நீ இப்படி உறங்காமல் இருக்கவே முடியாது. நான் உன்னை விட்டு விலக வேண்டுமானால் நீ உன் தூக்கத்தை வேறு ஒரு நபரிடம் பகிர்ந்துகொள். உன்னை விட்டு விடுகிறேன்" என்கிறாள். உடனே லட்சுமணன், "நீ என் மனைவி ஊர்மிளாவிடம் சென்று நான் கூறியதாய் என் தூக்கத்தையும் அவளையே எடுத்துக் கொள்ளச் சொல். நிச்சயம் அவள் அதற்கு ஒப்புக் கொள்வாள்" என்கிறான். நித்ரா தேவியும் அப்படியே ஊர்மிளாவிடம் சென்று விஷயத்தைக் கூற, அவளும் கணவனின் நிலைமையைப் புரிந்து கொண்டு, அவன் தூக்கத்தையும் தானே வாங்கிக் கொண்டு, அந்த 14 வருடங்களில் பெரும் பகுதியைத் தூங்கியே கழித்தாள்.

அவள் அப்படிச் செய்ததன் காரணமாகத்தான், லட்சுமணனால் ராவணன் மகன் இந்திரஜித்தை கொல்ல முடிந்தது! அது எப்படியென்றால் இந்திரஜித்தை கொல்ல வேண்டுமானால் ஒருவன் 14 ஆண்டுகள் தூங்காமல் கண் விழித்திருக்க வேண்டும் என்று ஒரு தெய்வ நிபந்தனை இருந்தது. ஊர்மிளா கணவனின் தூக்கத்தை வாங்கிக் கொண்டதால்தான் அது சாத்தியமாயிற்று. அதுமட்டுமல்ல, ஸ்ரீராமனுடன் காட்டுக்குப் போவதற்கு முன், ஊர்மிளாவைப் பார்க்க வருகிறான் லட்சுமணன். அந்த சமயத்தில், அதாவது அயோத்தி நகரமே சோகத்தில் மூழ்கி இருக்கும்போது, ஊர்மிளா தன்னை நன்கு சீவி முடித்து சிங்காரித்து, எல்லா அணிகலன்களையும் அணிந்து, பஞ்சணையில் ஒய்யாரமாக உட்கார்ந்திருப்பதைக் கண்டு கடும் கோபம் கொள்கிறான் லட்சுமணன். மேலும், அரச போகங்களை ஆண்டு அனுபவிக்கத்தான் லட்சுமணனை அவள் மணந்து கொண்டதாகவும், எனவே லட்சுமணன் ராமனுடன் காட்டுக்குப் போகக் கூடாது என்றும் பிடிவாதம் பிடிக்கிறாள் ஊர்மிளா. வெறுப்பின் உச்சத்துக்குச் சென்று விட்ட லட்சுமணன், அவளைக் கடுமையாக ஏசி விட்டு, அவ்விடத்திலிருந்து விலகுகிறான்.

லட்சுமணன் சென்ற அடுத்த கணமே ஊர்மிளா கேவிக்கேவி அழுகிறாள். அதாவது, லட்சுமணன் தன்னை முழுமையாக வெறுக்க வேண்டும் என்பதற்காகவே இப்படி ஒரு நாடகத்தை நடத்துகிறாள். தன்னுடைய கணவன் ராமனுக்கு செய்ய வேண்டிய சேவைகளில் எந்த பங்கமும் வந்துவிடக்கூடாது, தன்னைப் பற்றிய ஆசாபாசங்கள் கிஞ்சித்தும் அவனது மனதில் இருக்கக் கூடாது என்ற உயர்ந்த எண்ணமே அவளது மனதில் மேலோங்கி இருந்தது.

பதினான்கு ஆண்டுகள் கழிந்து, ஸ்ரீராமன் அயோத்தி வந்தபின், லட்சுமணனின் உதாசீனப் போக்கைக் கண்டு, சீதை அது பற்றி ஊர்மிளாவிடம் விசாரிக்கிறாள். முதலில் அவள் எதையும் கூற மறுக்கிறாள். ஒருகட்டத்தில் கர்ப்பிணியான சீதையின் கண்ணீருக்கு இரங்கி, உண்மையை விளக்குகிறாள் ஊர்மிளா. பிரமித்துப்போன சீதை, தன்னைப் போன்ற ஆயிரம் சீதைகள் வந்தாலும் ஒரு ஊர்மிளாவுக்கு ஈடாகாது என்று உருகுகிறாள்.

இந்த விஷயத்தை, தன்னை தேரில் கொண்டு போய் காட்டில் விட வந்த லட்சுமணனிடம் கூறுகிறாள் சீதை. அதைக்கேட்டு நொறுங்கிப் போகிறான் லட்சுமணன். ‘தன்னை ஸ்ரீராமன் கைவிட்டது போல், நீயும் ஊர்மிளாவைக் கைவிட்டு விடாதே’ என்று கேட்டுக்கொள்கிறாள் சீதை. ஊர்மிளாவைக் காண விரைகிறான் லட்சுமணன். அவளைக் கண்ட அடுத்த கணம் அவள் தன் மனைவி என்பதையும் மறந்து, கண்ணீர் வடிக்கிறான் லட்சுமணன்!

இப்போது சொல்லுங்கள், ராமாயணக் காவியத்தின் உண்மையான கதாநாயகி சீதையா? அல்லது ஊர்மிளாவா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com