சந்திர கிரகணம்
சந்திர கிரகணம்

சாதாரணமாகப் பார்க்கலாம் சந்திர கிரகணத்தை!

ந்த 2022ம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் கடந்த 25.10.2022 அன்று தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் நிகழ்ந்தை அனைவரும் அறிவோம். அதேபோல், இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் வரும் நவம்பர் 8ம் தேதியன்று நிகழவிருக்கிறது. சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும்போது சந்திர கிரகணம் நிகழ்வதாக அறிவியல் கூறுகிறது. மேஷ ராசியில் நிகழும் இந்த முழு சந்திர கிரகணம் இந்திய நேரப்படி அன்றைய தினம் பகல் 2.38 முதல் மாலை 6.19 மணி வரை நிகழ உள்ளது. பொதுவாக, சந்திர கிரகணம் பௌர்ணமி தினத்திலும், சூரிய கிரகணம் அமாவாசை தினத்திலும் நிகழ்வதாகும். முழு சந்திர கிரகணம் என்றாலும், இது பகலில் இந்தியாவில் தெரியாது. ஆனால், மாலையில் பகுதி சந்திர கிரகணமாக நம்மால் காண இயலும். சென்னையில் மாலை 5.40 மணி முதல் பகுதி சந்திர கிரகணத்தைக் காணலாம். இதில் விசேஷம் என்னவென்றால், இந்த சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் என்பதே.

மேஷ ராசியில் நிகழும் இந்த சந்திர கிரகணத்தினால் அசுவினி, பரணி, கிருத்திகை, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரங்கள் தோஷமாகின்றன. இந்த நட்சத்திரத்துக்குரியவர்கள் அனைவரும் பரிகார தோஷம் செய்துகொள்ள வேண்டியது அவசியம். கிரகணம் முடிந்ததும் வீட்டை சுத்தம் செய்து, குளித்து முடித்து அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று தீபம் ஏற்றி வழிபடுவது நலம் தரும். அதேபோல், கிரகண நேரத்தில் யாரும் உணவருந்தக் கூடாது. கிரகணம் முடிந்ததும் கோயிலுக்குச் சென்று சுவாமியை வழிபட்ட பிறகு உணவு உட்கொள்ளலாம். கிரகண நேரத்தில் எந்த ஒரு செயலையும் செய்யக் கூடாது. கிரகணத்தின் பாதிப்பு தாக்காமல் இருக்க வீட்டில் உள்ள உணவுப் பொருட்களில் தர்பைப் புல்லை போட்டு வைப்பது நலமாகும். முக்கியமாக, கிரகண சமயத்தில் வயதானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டோர் ஆகியோர் வெளியே வராமல் வீட்டிலேயே இருப்பது நல்லதாகும்.

பொதுவாக, கிரகண சமயத்தில் சில விஷயங்களை மேற்கொள்ளலாம் என்று முன்னோர்கள் கூறிச் சென்றுள்ளனர். அதன்படி, தியானம், ஜபம், மந்திர பாராயணம் போன்றவற்றைச் செய்யலாம். இந்த சமயத்தில் ஹோமம் செய்வது பல மடங்கு புண்ணியத்தைப் பெற்றுத் தருவதாகும். அதேபோல், கிரகணம் முடிந்ததும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதும் பெரும் புண்ணியச் செயலாகும். இது நமது தலைமுறைகளை நலமுடன் வாழவைக்கும் வழிபாடாகும்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com