ஆராதிப்போம் ஆவணியை!

திருவாதிரை மற்றும் திருவோணம் இவ்விரண்டு நட்சத்திரங்களும் ‘திரு’ என்கிற அடைமொழியுடன் 27 நட்சத்திரங்களிடையே முன்னிலை வகிக்கிறது.
சிவபெருமானுக்குரியது திருவாதிரை எனவும், பெருமாளுக்குரியது திருவோணம் என்றும் கூறப்படுகிறது.
திருவோண நட்சத்திரம் வடமொழியில் ‘சிரவண’ என அழைக்கப்படுகிறது. சிரவண மாதம் ‘ஆவணி’ ஆகியது. கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், ஆவணியை சிங்க மாதமென அழைக்கிறார்கள். ஆண்டின் முதல் மாதமாக கருதுகின்றனர். ‘ஆவணி’ பல்வேறு பண்டிகைகளை தன்னுள் கொண்டது.

*ஆவணி மாதத்தில் வரும் மூலம் பெருமைக்குரிய நட்சத்திரமாகும். ஆவணி மூலத் திருவிழா மதுரையில் பிட்டுத் திருவிழாவாக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிவபெருமான், ஏழைக் கிழவியான வந்தி என்பவளுக்காக மனிதரோடு மனிதராய் கலந்து பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பெற்ற பெரு நாள் ஆவணி மூலநாள். சுந்தரேஸ்வரர் பொற்கூடையுடனும், பொன் மண்வெட்டியுடனும் இவ்விழா நாளில் வைகை யாற்றிலிருந்து கோயிலுக்கு எழுந்தருளும் காட்சி காணத் தகுந்ததாகும்.
இதே ஆவணி மூலநாளில் திருப்பெருந்துறையில், மாணிக்கவாசகப் பெருமானுக்கு உபதேசம் செய்த குருமூர்த்தி, “நீ போய் பாண்டியனைப் பார்த்து, இம் மூல நாளில் குதிரைகள் வந்துசேரும் என்று சொல்” எனக் கூறியுள்ளார்.
*ஆவணி மாத பெளர்ணமி நாளில் ஆண்களுக்காக கொண்டாடப்படும் ஆவணி அவிட்டம் விசேஷமானது. புதுப் பூணூல் அணிந்துகொள்வதால் இப்பிறவியிலேயே மற்றொரு பிறவி எடுத்ததாக பொருள். ஆதலால் பூணூல் அணிபவர்களை துவிஜர் (இரு பிறப்பாளர்) எனக் குறிப்பிடுகின்றனர்.
*அவிட்டம் கழிந்த எட்டாம் நாள் அதாவது ஆவணி மாத தேய்பிறையான அந்நாளில், ரோகிணி நட்சத்திரத்துடன் கூடிய தினத்தின் நடுஇரவே கிருஷ்ணணன் அவதரித்த நாள். இது ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி எனக் கொண்டாடப்படுகிறது.
*ஆவணி மாதம் வரும் பெளர்ணமி நாளன்று வட மாநிலங்களில் ரக்ஷாபந்தன் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. பெண்கள் தமது சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் சரடு கட்டுவது முக்கிய நிகழ்வாகும். சரடு கட்டியபின் சகோதரிக்கு, சகோகதரன் ஏதாவது பரிசோ அல்லது பணமோ அளிப்பது வழக்கம். இது ஒரு சமுதாயப் பண்டிகை ஆகும். வட மாநிலமட்டுமல்லாது, தென்னிந்தியாவிலும் இது பிரபலமாகும்.
ரக்ஷாபந்தன் கொண்டாடப்படுவதற்கு பல கதைகள் கூறப்படுகின்றன. அவைகள் மாவீரர் அலெக்ஸாண்டர் இந்தியாவில் படையெடுத்து ஏறக்குறைய வடக்குப் பகுதியைக் கைப்பற்றிய பின்பு போரஸ் மன்னருடன் போரிட்டார். போரஸ் மன்னரின் வலிமையை கேள்விப்பட்ட அலெக்ஸாண்டரின் மனைவி ரோஷனா, தன் கணவரின் உயிருக்கு எந்தவித தீங்கும் இப்போரில் ஏற்படக் கூடாது என எண்ணி, ஒரு புனித நூல் சரடை அவருக்கு அனுப்பினார். போரஸ் மன்னருக்கு அலெக்ஸாண்டரை வீழ்த்த வாய்ப்பு கிடைத்தும், புனித நூல் சரடை கையில் பார்த்ததும், விட்டு விட்டார்.

*மகாபாரதத்தில், கிருஷ்ணருக்கு ஒரு சமயம் ஏற்பட்ட காயத்தினால் வடிந்த ரத்தத்தை தடுக்க, பாண்டவர்களின் மனைவி திரெளபதி, தனது புடவையை சிறிது கிழித்து அவரின் மணிக்கட்டில் கட்டிய காரணம், கிருஷ்ண பகவான் திரெளபதியை சகோதரியாக ஏற்றார். துன்பம் ஏதாவது நேர்கையில், பாதுகாப்பதாக கூறினார்.
சூதாட்ட சமயம், திரிதாஷ்டிரார் சபையில் திரெளபதியை துகிலுரியும் நேரம், கிருஷ்ணர் காப்பாற்றினார்.
திரெளபதி கிருஷ்ணரில் கையில் புடவையை கிழித்து கட்டிய நிகழ்வே ரக்ஷாபந்தன் விழாவாக கொண்டாடப்படுகிறதெனக் கூறப்படுகிறது.
ஆண்டவனை வழிபட்டு ஆவணி மாத பண்டிகைகளை கொண்டாடுவோம். ஆராதிப்போம்.