மகா பெரியவரும்; மகனின் திருமணமும்!

மகா பெரியவரும்;
மகனின் திருமணமும்!
Vel Murugan

ரு நாள் நன்கு உறங்கிக் கொண்டிருந்தபோது, காஞ்சி பெரியவர் கையில் தண்டத்துடன் மேலே எழும்பிச் செல்வது போல் கனவில் வர, அந்த சமயம் ஒரு கோயிலில் இருக்கும் குருக்கள் ஓடி வந்து என்னிடம், கையில் இருக்கும் செல்போனில் பெரியவரை போட்டோ எடுங்கள் என்கிறார். நான் செல்லை எடுத்து போட்டோ எடுப்பதற்குள் பெரியவர் மறைந்து விடுகிறார். பிறகு அந்த குருக்கள், ‘காளிகாம்பாள், காளிகாம்பாள்’ என்று கூறிவிட்டு மறைந்து விடுகிறார். இதுபோல் இரண்டு முறை கனவு வந்து திடுக்கிட்டு விழித்தெழுந்தேன்.

அன்றைய நாட்களில் என் மகனுக்கு தீவிரமாக திருமணம் செய்வதற்காக பெண் தேடிக் கொண்டிருந்தோம். ஒன்றும் சரியாக அமையாமல் நாட்கள் தள்ளிக் கொண்டே போனதால். கொஞ்சம் வருத்தம் ஏற்பட்டது. அதன் பிறகு எனக்கு உடல்நிலை மோசமாகிக்கொண்டே போனதால் கூடுதலாக பெண் பார்க்கும் நேரத்தை அதிகரித்தோம்.

ஒரு நாள் பெண்ணின் அம்மா தொடர்பு கொண்டு, “உங்கள் பையனின் ஜாதகத்தோடு என் பெண்ணின் ஜாதகம் நன்றாக பொருந்துவதால் பேசலாமா சார்?” என்று கேட்க, என் கணவரும் எங்கள் குடும்ப ஜோதிடரிடம் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு சரி என்று ஒப்புக்கொள்ள திருமணத்துக்கு நாள் குறித்தோம். பின்னர் கல்யாண மண்டபம் புக் செய்துவிட்டு, சமையல்காரரை தேடிக் கண்டுபிடித்தோம்.

அவர் எங்கள் வீட்டிற்கு பேச வரும்போது மெனு கார்டை கொண்டுவந்து டேபிளில் போட்டார். அந்த அட்டையில் நான் கனவில் கண்ட மஹா பெரியவரின் திருவுருவம் அப்படியே இருந்தது கண்டு மெய்சிலிர்த்து. “இதுதான் என் கனவில் வந்த திரு உருவம்” என்று கூற, சமையல்காரர் சிரித்த வண்ணம் அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

இதற்கு முன்பு இரண்டு, மூன்று சமையல்காரர்கள் வீட்டுக்கு வந்து கேட்டுவிட்டுப் போனார்கள். நாங்கள், “பார்த்துவிட்டுச் சொல்கிறோம்” என்று கூறிக் கொண்டிருந்தோம். இவரை பார்த்தவுடன் அவர்களை எல்லாம் விட்டுவிட்டு இவர் கொடுத்த உணவை சாப்பிட்டு ருசி பார்த்து சரி என்று சொன்னதுடன், முதல் நாள் நிச்சயதார்த்தம் மற்றும் வரவேற்பு அடுத்த நாள் அதிகாலையில் திருமணம் என்று மொத்தமாக ஐந்து வேளை சாப்பாட்டிற்கு பேசி முடித்திருந்தோம். அதோடு, ஆரத்தி அலங்காரம், நிச்சயதார்த்த தட்டு தாம்பூலம், மேளம், புரோகிதர் வரை அனைத்து ஏற்பாடுகளையும் அவரே செய்து தருகிறேன் என்று கூற, அவரிடமே முழு பொறுப்பையும் ஒப்படைத்து விட்டோம்.

என்றாலும், நவம்பர் மாதத்தில் நல்ல கனமழை பெய்து கொண்டிருந்தது. நாங்கள் 6, 7 தேதிகளில் திருமண ஏற்பாட்டை செய்திருந்தோம். ஆதலால் மழை பெய்து வருவோர் போவோருக்கு சிரமமாக இருந்து விடுமோ என்ற ஒரு அச்சம் இருந்தது. அதோடு மண்டபத்தை ஏரிக்கரை ஓரமாக பார்த்திருந்தோம். ஏரியில் நீர் நிறைந்து விட்டால் மண்டபத்திற்குள் தண்ணீர் வந்து விடும் அபாயம் வேறு. மேலும், அந்த ஏரி நிறைந்து ரோட்டில் தண்ணீர் ஓடும் என்று வேறு சொல்லி இருந்தார்கள் அதனாலும் ஒரு அச்சம் இருந்தது.

ஆனால், எந்த அசௌகரியமும் இல்லாமல் திருமணம் இனிதே நிறைவுற்றது. எல்லோரையும் ஒன்று போல் கவனித்து, அனுப்பினோம் என்ற நல்ல பெயரும் கிடைத்தது. உணவு படைத்தவர்கள் நல்ல ருசியுடனும், சிறு குறையும் சொல்ல முடியாத அளவு அற்புதமாக சமைத்து பரிமாறிய விதம் அருமையாக இருந்தது என்றும், யாரும் இலையில் உணவை வைத்து மூடி வீணாக்கவில்லை என்றும் புகழாரம் சூட்டி விட்டுச் சென்றார்கள். மேலும் அந்த சமையல்காரரிடம், அவரது விசிட்டிங் கார்டுகளை பலரும் அவர்கள் வீட்டு விருந்துக்கு அழைப்பதற்காக வாங்கிச் சென்றார்கள்.

திருமணம் முடிந்த பிறகு மணமக்களை காளிகாம்பாள் கோயிலுக்கு அழைத்துச் சென்று பிரார்த்தனை முடித்து வந்தோம். இதற்கெல்லாம் காரணம் யார்? இதை நடத்தி வைத்தது யார்? கனவில் தோன்றி, ‘நான் இருக்கிறேன். எல்லா பாரத்தையும் என் மேல் சுமத்தி விடு. அனைத்தையும் இனிதாக்கித் தருகிறேன்’ என்று கூறி, கூடவே இருந்து கருணை புரிந்த மகான் அந்த மகா பெரியவர்தான். அவருக்குத்தானே தெரியும் பக்தர்களுக்கு எப்படி காட்சி தந்து அருள் செய்ய வேண்டும் என்பது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com