ஆரண்ய ஸ்வரூபியாக ஸ்ரீ மகாவிஷ்ணு திகழும் நைமிசாரண்யம்!

ஆரண்ய ஸ்வரூபியாக
ஸ்ரீ மகாவிஷ்ணு திகழும் நைமிசாரண்யம்!

த்ராஞ்சல் மாநிலம், சீத்தாபூர் மாவட்டத்தில் உள்ளது நைமிசாரண்யம். இத்தலம் லக்னோவில் இருந்து 89 கி.மீ. தொலைவில் கோமதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. லக்னோ ரயில் நிலையத்தில் இருந்து 50 ரூபாய் கொடுத்து பேருந்து நிலையம் செல்லலாம். அங்கிருந்து நைமிசாரண்யத்துக்கே பேருந்து வசதி இருக்கிறது. ஹரிடோய் மற்றும் சீதாபூர் எனும் இரண்டு ஊர்களுக்கு இடையில் அமைந்திருக்கிறது நைமிசாரண்யம் திருத்தலம். சீதாபூரில் இருந்து 32 கி.மீ. தொலைவு. இதை, ‘நைமிசார்’ என்றும், ‘நிம்கார்’ என்றும் அழைக்கிறார்கள். காஞ்சி மகாபெரியவர் இத்தலத்துக்கு விஜயம் செய்திருக்கிறார். புகழ் பெற்ற கவிஞர் சூர்தாசர் இங்கே வசித்திருக்கிறார்.

kalyangeetha

ஒரு சமயம் முனிவர்கள் பிரம்மாவை அணுகி, ‘அமைதியாக 12 ஆண்டுகள் தவமிருந்து சத்திர வேள்வி செய்ய ஏற்ற இடத்தை எங்களுக்குக் காண்பித்து அருள வேண்டும்’ என்று வேண்டினார்களாம். அதையடுத்து, பிரம்மா ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்து சக்கர வடிவில் வளைத்து அதனை உருட்டிவிட்டு, ‘இந்தச் சக்கரம் எங்கு போய் நிற்கிறதோ அதுவே நீங்கள் விரும்பிய இடம்’ என்றாராம். அந்தச் சக்கரம் நின்ற இடம்தான் கோமதி ஆற்றங்கரையில் இருக்கும் நைமிசாரண்யம் என்று சொல்லப்படுகிறது. ‘நேமி’ என்றால் சக்கரம் என்றும், ‘ஆரண்யம்’ என்றால் காடு என்றும் பொருள். நைமிசாரண்யத்தில் வேள்வியை நிறைவு செய்த முனிவர்கள் வேள்வியின் பலனை மகாவிஷ்ணுவுக்கு சமர்ப்பிக்க எண்ணினார்கள். அதன்படியே, வேள்விக் குண்டத்தில் எழுந்தருளி மகாவிஷ்ணுவும் அவிர்பாகத்தைப் பெற்றார் என்று இத்தல புராணம் கூறுகிறது. இந்தப் புண்ணிய பூமியில் 60,000 முனிவர்கள் வசித்திருக்கிறார்களாம்.

திரேதா யுகத்தில் அஹி ராவணன் மற்றும் மஹி ராவணன் என்ற அசுரர்கள், ஸ்ரீராம, லட்சுமணர்களை பாதாள லோகத்துக்கொண்டு சென்று விட்டனராம். அனுமன் அசுரர்களை வதைத்து, ராம, லட்சுமணர்களை தனது தோளில் ஏற்றி வந்தாராம். அப்போது அவர் வந்த இடம்தான் நைமிசாரண்யம் என்று உள்ளூர் மக்கள் சொல்கிறார்கள்.

இந்தத் திருத்தலத்தில் ஸ்ரீ மகாவிஷ்ணு ஆரண்ய ஸ்வரூபியாக இருப்பதாக ஐதீகம். அதாவது, பெருமாள் வன வடிவாக அருள்பாலிக்கிறார். வியாச முனிவராலும், சுக பிரம்ம மகரிஷியாலும் போற்றப்பட்ட நைமிசாரண்ய வனம், மகாவிஷ்ணுவின் வடிவமாகவே வணங்கப்பட்டு வருகிறது. இறைவனை இயற்கையோடு இயைந்த வன வடிவில் வணங்கும் முறை 108 வைணவ திவ்ய தேசங்களில் இங்கு மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தலத்தில், விநாயகப் பெருமானுக்கு தனி சன்னிதி அமைந்துள்ளது சிறப்பாகும்.

திருமங்கை ஆழ்வாரால் பாடல் பெற்ற ஸ்தலம் இது. திருமங்கையாழ்வார் நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் பாசுரம் 998 முதல் 1007 வரை 10 பாசுரங்களில் நைமிசாரண்யப் பெருமாளைப் போற்றுகிறார். அதில் ஒன்பது பாசுரங்கள்  ‘நைமிசாரண்யத்துள் எந்தாய்’ என்றே முடியும்.

இதோ அதில் ஒரு பாசுரத்தைப் பருகி இன்புறலாமே.

‘நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும் நீதியல்லாதன செய்தும்
துஞ்சினார் செல்லும் தொல்நெறி கேட்டே துளங்கினேன் விளங்கனி முனிந்தாய்
வஞ்சனேன் அடியேன் நெஞ்சினில் பிரியா வானவா தானவர்க் கென்றும் நஞ்சனே
வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய்’

பொருள்: நைமிசாரண்யத்துள் வசிக்கும் என் தந்தையே! தப்பு தப்பான காரியங்களை மனதில் நினைத்தும், வாயினால் சொல்லியும், நியாயம் இல்லாததை செய்தும், (இப்படியெல்லாம் வீணான வாழ்க்கை வாழ்ந்து) இறந்தவர்கள் செல்லும் (நரகம் பற்றி) பெரியவர்கள் சொல்லக் கேட்டு (பயந்து போய்) நடுங்கினேன். விளா மரமாகி (நின்ற அசுரனை) அழித்தாய்! தீய எண்ணங்கள் உடைய அடியேனின் நெஞ்சினில் பிரியாமல் இருக்கும் வானவனே! (தேவாதி தேவனே!) அசுரர்களுக்கு என்றும் விஷமானவனே! வந்து உன் திருவடி அடைந்தேன். (எம்கண்ணனே!) தீய எண்ணங்கள் உடைய அடியேனின் நெஞ்சினில் பிரியாமல் இருக்கும் வானவனே! (தேவாதி தேவனே!) அசுரர்களுக்கு என்றும் விஷமானவனே! வந்து உன் திருவடி அடைந்தேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com