ஆனந்தத்தைத் தரும் அசோகாஷ்டமி!

ஆனந்தத்தைத் தரும் அசோகாஷ்டமி!

சோகம் என்றால் வருத்தம்; அசோகம் என்றால் வருத்தம் நீங்குதல் (மகிழ்ச்சி) என்று பொருள். சோகத்தை நீக்கி, மகிழ்ச்சியைத் தரும் அஷ்டமி என்பதால் இந்நாளுக்கு அசோகாஷ்டமி என்று பெயர். நாளை (29.3.2023) அசோகாஷ்டமி நன்னாள். சீதையை கவர்ந்து சென்று இலங்கையின் ஒரு மலர்ச்சோலையில் சிறை வைத்தான் ராவணன். அந்த மலர்ச்சோலையில் சீதையின் உள்ளம் ராமனைப் பிரிந்த வருத்தத்தால் அனலாய் சுட்டது. சீதையின் சோகத்தைப் போக்குவதற்காக இலைகளையும் மலர்களையும் சீதையின் மேல் சொரிந்து அவளை சாந்தப்படுத்த முயன்றது அவள் அமர்ந்திருந்த மரம். சீதையின் தாபத்தையும் சோகத்தையும் தணித்த அந்த மரம் அசோகமரம் என்று கூறப்படும் மருதாணி மரமாகும்.

அந்த மரம் எப்படியாவது ஸ்ரீராமன் வந்து சீதையை மீட்டுச் செல்ல வேண்டும் என்று பகவானை பிரார்த்தனை செய்தது. அந்தப் பிரார்த்தனை விரைவில் நிறைவேறியது. சீதை அசோக வனத்தில் சிறையில் இருந்து விடுபட்டபோது அந்த மரங்கள் சீதா தேவிக்குப் பிரியா விடை கொடுத்தன. அப்பொழுது சீதை மருதாணி மரங்களை நோக்கி, ‘உங்களுக்கு என்ன வரம் வேண்டும்?’ எனக் கேட்டாள்.

அதற்கு அந்த மரங்கள், 'அம்மா, பதிவிரதையான தங்களுக்கு வந்த இந்தத் துன்பம் வேறு எந்தப் பெண்மணிக்கும் வரக்கூடாது’ எனக் கூறின. சீதா தேவியும், ’மருதாணி மரங்களான உங்களை யார் தண்ணீர் விட்டு வளர்த்து பூஜிக்கிறார்களோ, இலையை கைகளில் பூசிக் கொள்கிறார்களோ இலைகளை யார் சாப்பிடுகிறார்களோ அவர்களுக்கு எந்தத் துன்பமும் நேராது’ என்று வரம் அளித்தாள். ஆகவேதான், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் மருதாணி இலைகளை அரைத்து கைகளில் பூசிக் கொள்கிறார்கள். சீதா தேவி மருதாணி மரங்களுக்கு வரம் அளித்த நன்னாளே அசோகாஷ்டமியாகும். பங்குனி மாத அமாவாசையிலிருந்து எட்டாவது நாளில் வரும் அஷ்டமி திதிக்கு துன்பத்தைப் போக்கி இன்பத்தைத் தரும் சக்தி உள்ளது. அன்று சுத்தமான இடங்களில் மருதாணி மரங்களை பயிர் செய்விக்கலாம். தண்ணீர் ஊற்றலாம். மூன்று முறை வலம் வந்து வழிபடலாம்.

அசோகா அஷ்டமி திருவிழா சிவன் மற்றும் பார்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் உள்ள லிங்கராஜா திருக்கோயிலில் அசோகாஷ்டமியன்று தேர்த் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. மகிழ்ச்சி மற்றும் வளமான வாழ்க்கைக்காக இந்த நாளில் தெய்வீக ஆசீர்வாதத்தைப் பெற பக்தர்கள் சக்தி தேவியை வணங்கி வழிபடுகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com