மராத்தியர்களின் புத்தாண்டும் குடீயும்!

மராத்தியர்களின் புத்தாண்டும் குடீயும்!

ராத்தியரின் பண்டிகைகளில் ’குடீபாட்வா’ முக்கியமானதொன்றாகும். ‘பிரதிபாத்’ என்கிற சமஸ்கிருத சொல்லில் இருந்து பாட்வா (பாத்வா) தோன்றியதெனக் கூறப்படுகிறது ’குடீ’ என்றால் வெற்றிக் கம்பம் என்று பொருள். குடீபாட்வா மராத்தியர் புத்தாண்டின் முதல் நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் கன்னட, தெலுங்கு வருடப் புத்தாண்டு நாள் யுகாதியும் ஆகும். இந்தத் திருநாள் இந்த வருடம் நாளை (22.3.2023) அன்று கொண்டாடப்படுகிறது.

’குடீபாட்வா’ மராத்தியர்களின் வழக்கப்படி ஸ்ரீராமபிரான் ராவணனைக் கொன்று சீதையுடன் அயோத்தி திரும்பும் சமயம், அயோத்தி நாட்டு மக்கள், ஸ்ரீராமனின் குடீ (வெற்றிக்கம்பம்) நட்டுக் கொண்டாடியதாகவும் கருதுகின்றனர். இந்நன்னாளில் புது ஆடைகள், நகைகள் வாங்குவர். புதிய செயல்களைத் தொடங்க நன்னாளாகவும் இது கருதப்படுவதால், குழந்தைகள் சரசுவதி தேவிக்கு பூஜை செய்வார்கள். இந்த நாளில்தான் பிரம்மன் உலகைப் படைத்ததாகவும் நம்புகின்றனர்.

‘குடீபாட்வா’ வசந்த காலத்தின் வருகையையும், ரபி பயிர்களின் அறுவடையையும் குறிக்கிறது. ஒவ்வொரு வீட்டு வாயிலிலும் குடீ கட்டப்பட்டிருக்கும்.

குடீ செய்யும் முறை: ஒரு நீண்ட மூங்கிலின் உச்சியில் வண்ணமயமான பட்டுத் துணி ஒன்று கட்டப்பட்டு அதன் மேல், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வேப்ப இலைகள், மாவிலைகள் ஒரு மலர் மாலையுடன் இணைக்கப்பட்டிருக்கும். இது வெற்றியைக் குறிப்பதாகும். எல்லாவற்றிற்கும் மேலாக வெள்ளி, வெண்கலம் அல்லது செப்பு கலசத்தினால் அது மூடப்பட்டிருக்கும். வீட்டிற்கு வெளியே, பொதுவாக வலதுபுறம் அல்லது ஒரு ஜன்னல் அல்லது Terraceல் குடீ ஏற்றப்பட்டிருப்பது அனைவருக்கும் தெரியும்படி இருக்கும்.

Shailesh Andrade

குடீயின் சில முக்கியத்துவங்கள்:

குடீ என்பது பிரம்ம புராணத்தில் குறிப்பிட்டுள்ள பிரம்மத்வஜத்தை, அதாவது பிரம்மதேவனின் கொடியைக் குறிக்கிறது. இந்த நாளில் பிரம்மா பிரபஞ்சத்தைப் படைத்தாகக் கூறப்படுகிறது.

குடீ, மன்னன் ஷாலிவாஹனாவின் வெற்றியைக் குறிப்பதோடு, அவன் பைத்தானுக்குத் திரும்பியபோது அவனது மக்களால் ஏற்றப்பட்டதாகும்.

குடீ வரலாற்று ரீதியாக, ராவணனைக் கொன்று ஸ்ரீராமர் அயோத்திக்குத் திரும்பிய வெற்றி மற்றும் மகிழ்ச்சியைக் குறிக்கிறது. வெற்றியின் சின்னம் உயர்ந்ததாக இருப்பதால், குடீயும் உயர்ந்தது.

குடீ, தீமையை விரட்டி, செழிப்பு மற்றும் செல்வத்தை வீட்டுக்குள் வரவழைக்குமென நம்பப்படுகிறது.

மகாராஷ்டிர குடும்பங்கள் ஸ்ரீகண்ட், பூரி, பூரண் போளி போன்ற பதார்த்தங்களை இன்று செய்வதுண்டு. மராட்டியர்களின் புத்தாண்டு தினமாகிய ‘குடீபாட்வா’ பிற மாநிலங்களில், பிற மொழிகளில் அவரவர்களது புத்தாண்டு தினத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.

சிந்தி மக்கள் - சேட்டி சந்த், ஜம்மு காஷ்மீர் பண்டிட்டுகள் – நவ்ரேஹ், அசாமிய மக்கள் – பிஹூ, மேற்கு வங்கம் மற்றும் பங்களாதேஷ் – பைசாக், கோவா - சம்வத்சர் பட்வோ, கேரளா – வீஷு, தமிழ்நாடு - தமிழ்ப் புத்தாண்டு, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலங்கானா – உகாதி.

குடீபாட்வா தினத்தில் புதிதாகத் திருமணமாகி இருக்கும் மகளையும் மருமகனையும் வீட்டிற்கு அழைத்து விருந்தோம்பல் செய்வது வழக்கம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com