விநோத திருவிழாவும் வித்தியாச வழிபாடும்!

விநோத திருவிழாவும் வித்தியாச வழிபாடும்!

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதிக்கு அருகே உள்ளது கொன்னையூர் முத்துமாரியம்மன் திருகோயில். மிகவும் பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் நடைபெறும் பங்குனித் திருவிழாவில் நடைபெறும் நாடு செலுத்துதல் விழா புகழ்பெற்றது. விழாவின் தொடக்கமாக, கடந்த மாதம் 19ம் தேதி சுவாமிக்குப் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கொடியேற்றத்துடன் பங்குனித் திருவிழா ஆரம்பமானது. தொடர்ந்து 14 நாட்கள் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தினசரி இரவு அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. மண்டகப்படி நாட்களில், சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் கும்மியடித்து அம்மனை வழிபட்டனர்.

இதைத் தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வான நாடு செலுத்துதல் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில், பொன்னமராவதி நாடு, ஆலவயல் நாடு, செம்பூதி நாடு, செவலூர் நாடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஈட்டி போன்ற கம்புகளுடன், உடலில் சேறு, சகதிகளைப் பூசிக்கொண்டு நூதன முறையில் கொம்பு, பறை இசை, வான வேடிக்கைகள் முழங்க ஊர்வலம் வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு ஏற்றியும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

நாடு செலுத்துதல் நிகழ்வின் முக்கியமான நிகழ்வு உடலில் சேறு, சகதி பூசிக்கொள்ளுதல். சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் கோயிலின் அருகே இருக்கும் கண்மாயில் படுத்து உருண்டு, சேறு, சகதிகளை உடம்பு முழுவதும் பூசிக் கொள்வார்கள். இந்த நேர்த்திக்கடனைச் செய்வதால், வெயிலின் தாக்கத்தினால் வரும் நோய்களிலிருந்து மக்களைக் காப்பதுடன், விவசாயம் செழிக்க மழை பெய்யவும் மாரியம்மன் அருள்புரிவாள் என்பது ஐதீகம் என்கின்றனர் கிராம மக்கள். இது இன்று நேற்று அல்ல, பல தலைமுறைகளாக இந்த நேர்த்திக்கடன் தொடர்கிறது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com