மகா வ்யதீபாத யோகத்தில் நடராஜர் தரிசனம்!

மகா வ்யதீபாத யோகத்தில் நடராஜர் தரிசனம்!

சைவர்களுக்கு கோயில் என்றாலே அது சிதம்பரம்தான். ஆனந்த நடராஜர் எப்பொழுதும் நடனமிடுவதும், தரிசித்தால் முக்தி தருவதும், பஞ்சபூதத் தலங்களில் ஆகாச தலமாக விளங்குவதும் சிதம்பரம் ஆகும். சிவபெருமானுக்கும் ஐந்து என்ற எண்ணுக்கும் அநேக தொடர்புகள் உள்ளன. பஞ்சாக்ஷரம் ஐந்து எழுத்து, நடராஜ பெருமான் செய்யும் செயல்கள் ஐந்து (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் அருளல்), பஞ்ச பூதங்களுக்கும் அதிபதியாக அமைந்த தலங்கள் ஐந்து, மகேஸ்வரனின் சக்தி ரூபங்கள் ஐந்து (ஆதிசக்தி, பராசக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி), சிதம்பரம் தலத்தின் முக்கியமான பிராகாரங்கள் ஐந்து, ஈஸ்வரனின் முகங்கள் ஐந்து, சித்தாந்தக் கலைகளின் ஐந்துக்கும் நாயகராக விளங்குபவர் ஈசன், பஞ்சாங்கம் என்பது ஐந்து அம்சங்களை உள்ளடக்கியது.

அவை: திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் ஆகும். இந்த பஞ்சாங்க அம்சங்கள் ஐந்தின் அடையாளமாகத் திகழ்பவர் சிவபெருமான். திதி: திதிக்குக் காரணமாகிய சந்திரனை தலையில் சூடியவர், வாரம்: கிழமைகளுக்கு நாயகராகிய சூரியனை குண்டலமாக அணிந்தவர், நட்சத்திரங்கள்: இவற்றை மாலையாக அணிந்தவர், யோகம்: வேண்டுவோருக்கு வேண்டும் யோகங்களை அருள்பவர், கரணம்: கரணங்களை தன்னுள் கொண்டவர்.

நட்சத்திரங்களும், ராசி மண்டலங்களும் ஸ்ரீ நடராஜப் பெருமானின் கட்டளைக்கிணங்க இயங்குகின்றன. மார்கழி மாதம் அனைத்து தெய்வங்களுக்கும் உகந்ததாக அமைகின்றது. மார்கழி மாதமும் வ்யதீபாத யோகமும் இணையும் வேளையில் ஸ்ரீ நடராஜப் பெருமானை வழிபடுவது மிகுந்த யோகங்களைத் தரவல்லதாகும். சிதம்பரம் ஆலயத்தில் மார்கழி அதிகாலைப் பொழுதாகிய பிரம்ம முகூர்த்த நேரத்தில் மிகச் சிறப்பாக திருப்பள்ளியெழுச்சி நடைபெறும். மார்கழி மாதத்தில் (பஞ்சாங்கத்தில் ஒரு அங்கமாகிய) வ்யதீபாதம் என்னும் யோகம் வரும் நாளில் ஸ்ரீ சித்ஸபேசரை தரிசனம் செய்வது ஸர்வ பாபங்களையும் நீக்கி, பெரும் புண்யங்களையும், அனைத்து செல்வங்களையும் தரவல்லது. மார்கழி மாதத்தின் அனைத்து நாட்களிலும் நடைபெறும் திருப்பள்ளியெழுச்சி தரிசனப் பலனை இந்த தனுர் வ்யதீபாத ஒரு நாள் தரிசனத்தில் பெறலாம் என்பது ஐதீகம். மகேஸ்வரப் பெருமானும் மனோன்மணி எனும் சக்தியும் இணைந்த நாள் வ்யதீபாத தினம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இறைவனும் இறைவியும் இரண்டறக் கலந்த நன்னாளில் மனம் ஒன்றுபட்டு சிவபெருமானை வழிபடுவது இல்லற வாழ்வை சிறக்க வைக்கும்.

ரு சமயம் குரு பகவான் மனைவி தாரையின் மீது சந்திரன் தனது பார்வையைப் பதித்தார். இதை அறிந்த சூரியன், சந்திரன் மீது தனது பார்வையை செலுத்துகிறார். அச்சமயம் இருவரின் பார்வைகளும் ஒன்று சேர, அந்த சக்தியிலிருந்து ஒரு மிகப்பெரும் வடிவம் எழுந்து, உலகத்தையே விழுங்கப் பார்த்தது. அந்த உருவத்தைச் சாந்தப்படுத்திய சூரிய, சந்திரர்கள் அதற்கு ‘வ்யதீபாதம்’ என்று பெயர் சூட்டி, யோகங்களுக்கு அதிபதியாக பதவி அளித்தனர். ‘உலகை விழுங்க ஆசைப்பட்டு, சாந்தப்படுத்தியதால் பூலோக மக்கள் உனது யோகம் வரும் நாளில் எந்தப் புனித காரியத்தையும் செய்ய மாட்டார்கள்’ எனவும் கூறி அருளினர்.

மக்கள் நல்ல செயல்களைச் செய்ய விரும்பாத திதிகளான, அஷ்டமி, நவமி ஆகியவை மஹாவிஷ்ணுவை வேண்டி, அவரது அவதார தினப் பெருமையைப் பெற்றது போல, வ்யதீபாத யோகம், ‘தனது நாளில் மக்கள் எந்தப் புனித காரியமும் செய்யாதிருக்கிறார்களே’ என எண்ணி, நடராஜப் பெருமானின் தூக்கிய திருவடியை சரணடைய நடேசர், ‘மார்கழி மாதமும், வ்யதீபாத யோகமும் வரும் நாளில், திருப்பள்ளியெழுச்சியில் என்னைத் தரிசனம் செய்வோருக்கு அனைத்துப் பலன்களும் கிடைக்கும்’ என்று அந்த யோகத்துக்கு மகிழ்வையும், நற்பேற்றையும் அளித்தார். வல்லமை வாய்ந்த வ்யதீபாத யோகத்தில் நடராஜ பெருமானை தரிசனம் செய்தால் பதினாறு பேறுகளும் கொண்ட பெருவாழ்வினை சித்ஸபேசர் அருளுவார்.

வானவியல் சாஸ்திரப்படி மார்கழி, ‘தனுர் மாதம்’ என்றழைக்கப்படுகிறது. தனுசு ராசிக்கு அதிபதி குரு பகவான். இந்த ராசியில் சூரியன் சஞ்சரிக்கும்போது, சந்திரன் சூரியனுக்கு முன்பு வரும்போது, வ்யதீபாத யோகம் ஏற்படுகிறது. மார்கழி மாத வ்யதீபாத நன்னாளில், வானில் சூரியனும், சந்திரனும் சிவபெருமானுக்கு செய்யப்படும் அலங்காரம் போல் தோன்றுமாம். ஸ்ரீ உமாபதி சிவம் அருளிய, ‘குஞ்சிதாங்கிரிஸ்தவம்’ எனும் நூலில், ‘வ்யதீபாத யோக நாயகர் சிதம்பரத்தில் நடராசரைப் பணிந்து தோஷ நிவர்த்தி செய்துகொண்டார்’ எனக் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், ஸ்ரீ அப்பைய தீக்ஷிதர் தனது, ‘சிவார்ச்சனா சந்திரிகை’யில் (தந்த சுத்தி படலம்) வ்யதீபாத யோகம் வரும் நாளின் பிரம்ம முகூர்த்தத்தில் சிவனை வழிபட வேண்டும் என வலியுறுத்துகிறார்.

நாளை (29.12.2022) வ்யதிபாத நான்னாள். இன்று நடராஜப் பெருமானை தரிசனம் செய்வோம். யோகம் மற்றும் வளங்கள் அனைத்தையும் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com