கார்த்திகை சோமவார சங்காபிஷேகம்!

கார்த்திகை சோமவார சங்காபிஷேகம்!

சிவபெருமான் அபிஷேகப்பிரியர். அதிலும் சங்கினால் அபிஷேகம் செய்வது என்பது ஈசனின் மனதை மிகவும் குளிர்விப்பதாகும். சங்கு தீர்த்தத்தினால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வது பிரணவத்தினைக் கொண்டு சிவனுக்கு பூஜை செய்வதற்கு ஒப்பானதாகக் கருதப்படுகிறது. கார்த்திகை மாத சோமவாரத்தில் (திங்கட்கிழமைகளில்) சிவாலயங்களில் சங்கில் புனித நீர் நிரப்பி, அந்தத் தீர்த்தத்தை கங்கையாகப் பாவித்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வது மரபு. சங்கு, செல்வத்தின் சின்னம். வற்றாத செல்வம் வேண்டுபவர், இறைவனின் அருளை வேண்டுபவர்கள் சங்கு பூஜையை மேற்கொள்வது வழக்கம்.

ஒருவர் சங்கில் பால், பன்னீர், பஞ்ச கவ்யம் போன்றவற்றை நிரப்பி சிவனுக்கு அபிஷேகம் செய்தாலும், அதை கங்கையாக பாவித்தே அபிஷேகம் செய்ய வேண்டும். 108, 1008 என்ற எண்ணிக்கையில் அவரவர் வசதிப்படி பூஜையில் சங்குகளைப் பயன்படுத்தலாம். சங்காபிஷேகத்துக்கு என்று தனி காயத்ரி மந்திரமே உள்ளது.

‘ஓம் பாஞ்சஜந்யாய வித்மஹே

பவமா நாய தீமஹி

தந்நோ சங்க ப்ரேசோதயாத்’

கார்த்திகை மாதத்தில் இறைவன் அக்னிப் பிழம்பாகத் திகழ்வார். அவரைக் குளிர்விக்கும் பொருட்டு சங்காபிஷேகம் செய்யப்படுகிறது. கார்த்திகை மாதம் சூரியன் பகை வீடான விருச்சிகத்தில் சஞ்சரிப்பார். அப்போது சந்திரன் நீச்சத்தில் இருப்பதால் இதை தோஷம் என்பர். இந்த தோஷத்தை நீக்கவே சிவனுக்கு சங்காபிஷேகம் செய்விக்கப்படுகிறது. சங்காபிஷேகத்தைப் பார்த்தாலோ, சிவமூர்த்தத்திலிருந்து விழும் தீர்த்தத்தைப் பருகினாலோ உடல் சமன் நிலை பெறும். தோஷம் நீங்கும், பிணிகள் அண்டாது.

வாழை இலை மீது தானியங்களைப் பரப்பி அதன் மீது சங்குகளை முறையாக வைத்து நீர் வார்த்து, மாவிலை, தர்ப்பை நுனிகளை விட்டு சங்குக்கு பூஜை செய்து சுவாமிக்கு அபிஷேகிப்பர். திருக்கடையூர், திருப்பனந்தாள், திருவையாறு, திருவானைக்கோயில், பேரூர், போளுர், திருவேடகம், திருப்பாதிரிப்புலியூர், ராமேஸ்வரம், திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் ஆகிய கோயில்கள் சங்காபிஷேகம் நடைபெறும் முக்கியமான தமிழகத் திருத்தலங்கள் ஆகும்.

ஒரு வலம்புரிச்சங்கு, கோடி இடம்புரிச் சங்குகளுக்கு சமம். எனவே, ஈசனுக்கு வலம்புரிச் சங்கினால் அபிஷேகம் செய்வது விசேஷமாகும். சங்காபிஷேகத்தால் சகோதர ஒற்றுமையும் வளரும். சங்கு செல்வத்தின் அம்சம் என்பதால், செல்வ அபிவிருத்திக்காகவும் சங்காபிஷேகம் செய்யப்படுகிறது. சங்காபிஷேகத்தை தரிசிப்பவர்களுக்கும் லட்சுமி கடாட்சம் கிடைக்கும். கார்த்திகை சோமவார சங்காபிஷேக வழிபாட்டை தரிசிப்போம், வாழ்வில் வளம் பல காண்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com