மகாசங்கடஹர சதுர்த்தி வழிபாடும்; பலன்களும்!

மகாசங்கடஹர சதுர்த்தி வழிபாடும்; பலன்களும்!

பொதுவாக, சங்கடஹர சதுர்த்தி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது விநாயகர் பெருமான்தான். ‘சங்கடஹர’ என்றால் சங்கடங்களை நாசம் செய்வது என்று பொருள். அனைத்து சங்கரஹர சதுர்த்தி தினங்களும் விநாயகரை வழிபட மிகவும் உகந்ததுதான் என்றாலும், செவ்வாய்க்கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி தின வழிபாட்டுக்கு மிகுந்த பலன் உண்டு. இனி, செவ்வாய்க்கிழமை சங்கடஹர வழிபாட்டையும் அதன் பலன்களையும் சற்றுக் காண்போம்.  

சங்கடஹர சதுர்த்தி விரதம் மாதத்துக்கு ஒருமுறை, பௌர்ணமி தினத்தில் இருந்து நான்காவது நாள் கடைப்பிடிக்கப்படும் விரதம் ஆகும். சங்கடங்கள் அனைத்தையும் அழிக்கும் வல்லமை இந்த ‘சங்கடஹர சதுர்த்தி’ விரதத்துக்கு உண்டு. கணநாதனாம் கணபதியை வழிபட பல்வேறு விரதங்கள் இருந்தாலும், ‘சங்கடஹர சதுர்த்தி’ விரதம் மிகவும் முக்கியமானது. இந்த விரதத்தை முதன்முதலாகக் கடைப்பிடிப்பவர்கள் ஆவணி மாதத்தில் தொடங்குவது நலம் தருவதாகும்.

செவ்வாய்க்கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு மிகவும் சிறப்பான ஒன்றாகும். இது, ‘மகாசங்கடஹர சதுர்த்தி’ என்று அழைக்கப்படுகிறது. திதிகளில் கடைப்பிடிக்கக்கூடிய இந்த விரதங்களைக் கடைப்பிடித்தால், இல்லத்தில் சுபிட்சம் உண்டாவதோடு, சகல சௌபாக்கியமும் ஏற்படும். நாள்பட்ட நோய்கள் குணமாதல், நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம் போன்றவை உண்டாகும். அனைத்து விதமான தோஷங்களும் நீங்கும்.

செவ்வாய்க்கிழமை சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு விரதமிருந்து அவரை வழிபடுவதால் நீண்ட நாட்கள் திருமணம் தடைபட்டு வந்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். அதேபோல், திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல குழந்தைப் பேறு கிடைக்கும். வீடு கட்டுவது, சொத்துக்கள் வாங்குவது போன்ற முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் நீங்கி, அவற்றில் வெற்றிகள் உண்டாகும். நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக வழிவகை செய்யும் இந்த செவ்வாய்க்கிழமை சங்கடஹர சதுர்த்தி வழிபாடு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com