மார்கழி எனும் மங்கல மாதம்!

மார்கழி எனும் மங்கல மாதம்!

‘தனுர் மாதம்’ எனும் சிறப்புப் பெற்றது மார்கழி திங்கள். தட்சிணாயன புண்யகாலம் இந்த மாதத்தோடு நிறைவடைகிறது. ஆன்மிகச் சிறப்பு வாய்ந்தது என்றால், அது மார்கழி மாதம்தான். இந்த வருடம் மார்கழி டிசம்பர் 16ஆம் தேதி துவங்குகிறது. இந்த மாதத்தை இறை வழிபாட்டுக்கென்றே ஒதுக்கி வைத்தனர் நமது முன்னோர்கள். மற்ற மாதங்களில் ஓரிரு நாட்கள் மட்டுமே இறைவனுக்கு உகந்த நாட்களாக இருக்கும். ஆனால், மார்கழி மாதம் முழுவதும் இறை வழிபாட்டுக்கு உரியதாகப் போற்றி வணங்கப்படுகிறது.

மனிதர்களாகிய நமக்கு ஒரு வருடம் என்பது, தேவர்களுக்கு ஒரு நாளாகும். தை முதல் ஆனி வரையுள்ள மாதங்கள் பகலாகவும் ஆடி முதல் மார்கழி வரையுள்ள மாதங்கள் இரவாகவும் தேவர்களுக்கு உள்ளது. இதன்படி தேவர்களின் இரவுப் பொழுது முடிந்து வைகறைப் பொழுது மார்கழி மாதமாக விளங்குகிறது. நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களின் ஒரு நாள் என்று கூறும்போது, அந்த ஒரு நாளின் அதிகாலை (காலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை) பிரம்ம முகூர்த்த நேரமாக மார்கழி மாதம் தேவர்களுக்கு விளங்குகிறது. அதனால்தான் இதை, ‘தேவர் மாதம்’ என்று கூட சிறப்பித்துச் சொல்கிறார்கள்.

கோள்களை ஆராயும் விஞ்ஞானிகளின் பார்வையில் இந்த மாதத்தைப் பற்றிய விஷயங்களை அறியும்போது நமக்கு மிகுந்த பிரமிப்பு ஏற்படுகிறது. பூமியின் வடபாதி வட்டத்தில் மார்கழி மாதம் மிக உஷ்ணமாக இருக்க வேண்டிய காலமாம். ஆனால், நமக்கு அதிகக் குளிராக இருக்கிறது. இந்த மாறுபாட்டுக்கு முக்கியக் காரணம் நம்முடைய பூமி கோள வடபகுதியின் முன்புறம் சூரிய பார்வையின் நேர் கோணத்தில் இல்லை. பூமிக்கு சூரியன் மிக அருகில் இருக்கும் இந்நேரத்தில் சூரியக்கதிர்கள் பூமியில் பட்டுத் தெறித்து விடுகின்றனவாம். பூமி சற்று விலகியிருந்திருந்தால் சூரியனின் வெப்பக்கதிர்கள் நம்மை நேரடியாகத் தாக்கியிருக்குமாம். ஆனால், பூமி மிக அண்மையில் இருப்பதால் சூரியக் கதிர்கள் தொட முடியாத கோணத்தில் இருக்கிறோம். எனவே, உஷ்ணத்தின் தாக்கமின்றி இம்மாதம் குளிர்ச்சியாக இருக்கிறது. சொல்லப்போனால் மார்கழி மாதம்தான் மனித உடல் வெப்பம் சமநிலையில் இருக்கும் காலமாம்.

மார்கழி மாதத்தில் வேளாண்மைப் பணிகள் பொதுவாக நடைபெறுவதில்லை என்பதை நாம் கவனித்திருப்போம். இந்த நேரத்தில் விதை விதைத்தால் அது சரியாக முளைக்காது என்பதாலேயே அந்த வேலைகள் இந்த மாதத்தில் நடைபெறுவதில்லை. பெண்கள் கருவுறுவதற்கும் ஏற்ற சமயம் இதுவல்ல என்பதனாலேயே இந்த மாதத்தில் திருமணங்கள் நடைபெறுவதில்லையாம். மார்கழியில் ஏன் திருமணங்கள் நடைபெறுவதில்லை என்பதற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணமாக இருக்கக் கூடும். கல்யாணம் போன்ற சுப விசேஷங்கள் நடத்த முடியாத மாதம் என்பதாலேயே, இதை ஆன்மிக மாதமாகப் போற்றி, மாதம் முழுக்க இறை வழிபாடு செய்யுமாறு வைத்திருக்கிறார்கள் நமது முன்னோர்கள்.

மார்கழியென்றாலே தமிழ் மக்கள் வசிக்கும் வீட்டு வாசல்களில் போடப்படும் பெரிய பெரிய கோலங்கள்தான் நினைவுக்கு வரும். அந்தக் கோலங்களில் நடுவில் ஒரு பூசணிப்பூ வேறு அலங்காரமாக வைப்பார்கள். மார்கழி மாதம் அதிகாலையில், ‘நகர சங்கீர்த்தனம்’ என்று பக்தர்கள் பஜனைப் பாடல்களை பாடிக்கொண்டு வீதிகளை வலம் வருவார்கள். வீதிகளில் மங்களகரமான பெரிய பெரிய கோலங்களும் பஜனைப் பாடல்களுமாக மார்கழியின் அதிகாலை நேரம் தெய்வாம்சத்தோடு விளங்கும்.

மாலை நேர கோலாகலத்துக்குக் கேட்கவே வேண்டாம்! ஆமாம், மார்கழி இசைக்கச்சேரிகள் நடைபெறும் மாதமல்லவா? இரண்டு வருடங்களாக கொரோனா நோய் தொற்றால் தவிர்க்கப்பட்டிருந்த சபா கச்சேரிகள் இந்த வருஷம் நிச்சயம் சக்கைப் போடு போடும். மெல்லிய குளிரும் பனியும் படர்ந்த மார்கழி மாத மாலை நேரங்களில் நேரிலேயே சபாக்களுக்குப் போய் தாங்கள் விருப்பப்படும் சங்கீதக் கச்சேரிகளைக் கேட்டு மகிழலாம்.

னைத்து சிவன் கோயில்களிலும், பெருமாள் கோயில்களிலும் அதிகாலை நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். மங்கள வாத்தியங்கள் முழங்க சிவன் கோயில்களில் திருவெம்பாவை, திருபள்ளியெழுச்சியும், விஷ்ணு கோயில்களில் திருப்பாவையும் பக்தர்களால் பாடப்படுவது வழக்கம்.

தமிழகத்தின் ஸ்ரீவில்லிபுத்தூரில் விஷ்ணு சித்தர் எனப்படும் பெரியாழ்வார் தனது வீட்டுத் தோட்டத்தில் துளசி செடியின் அடியில் கண்டெடுத்த குழந்தையே ஆண்டாள் எனும் கோதை நாச்சியார். ஆண்டாள் பாடிய திருப்பாவை மார்கழி முப்பது நாளும் கோயில்களில் குழந்தைகளாலும் பெரியவர்களாலும் அதிகாலையில் பாடப்படுகிறது. ஆண்டாள் தினமும் அதிகாலையில் தனது ஊரிலுள்ள பெண்களைத் துயிலெழுப்பி பெருமாளின் தரிசனத்துக்காகக் கூட்டிப் போகும்போது பாடப்பட்ட பாடல்களே திருப்பாவை முப்பது பாடல்களாகும். மார்கழி முப்பது நாட்களும் திருப்பாவை பாடப்படுவது 'பாவை நோன்பு' என்று சிறப்பித்துக் கூறப்படுகிறது.

இந்த வருடம் இன்னும் ஒரு சிறப்பு இந்தத் திருப்பாவைக்கு. திருப்பதியில் தினமும் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாத சேவைக்குப் பதிலாக திருப்பாவை சேவையை தினமும் நடத்தப் போகிறார்கள் மார்கழி மாதம் முழுவதும். பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வார், பூரத்தில் பிறந்த புகழ்க்கொடி, சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்றெல்லாம் சிறப்பித்துப் போற்றப்படும் ஆண்டாள் நாச்சியாரின் பெருமையை சிறப்பிப்பதாக இந்த நிகழ்வு நடைபெற உள்ளது.

மாணிக்கவாசகர் சமயக்குரவர் நால்வரில் ஒருவர். மாணிக்கவாசகர் பாடியது திருவாசகம், திருக்கோவையார் என்றும் அழைக்கப்படுகிறது. இதைத்தவிர, இவர் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்களையும் பாடியுள்ளார். திருப்பெருந்துறை சிவன் கோயிலில் இறைவனை துயிலெழுப்பப் பாடிய பாடல்களே திருப்பள்ளியெழுச்சி எனப்படுகிறது.

திருப்பாற்கடல் கடையப்பெற்றபோது முதலில் ஆலகால விஷம் வெளிப்பட, அதை சிவன் உண்டு எல்லோரையும் காப்பாற்றியது மார்கழி மாதத்தில்தான். அதேபோல இந்திரனால் பெருமழையும் வெள்ளமும் உருவாகி கோகுலத்தில் மக்கள் பெரும் அவதிக்குள்ளானபோது கோவர்த்தனகிரியைக் குடையாகப் பிடித்து ஸ்ரீ கிருஷ்ணபெருமான் அவர்களைக் காப்பாற்றியதும் மார்கழியில்தான் என்று புராண வரலாறு கூறுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com