பிஜேபி போஸ்டரில் தமிழ் எழுத்தாளர் படம்: உருவானது சர்ச்சை!
டெல்லியில் விரைவில் நடக்கவுள்ள மாநகராட்சி தேர்தலில் ஜெயிப்பதற்காக ஆளுங்கட்சியானஆம் ஆத்மி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதேபோல பிஜேபி–யும் பல்வேறு நடவடிக்கைககளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, குடிசைவாசி வாக்காளர்களைக் கவர்வதற்காக, பிஜேபி தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் 'குடிசைவாசிகளை மதிக்கும் யாத்திரை' என்ற யாத்திரை நடத்தப் பட்டது. இதற்கான போஸ்டரில் குடிசைவாசிகளில் ஒருவராக தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகனின் படம் இடம்பெற்றது, பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இந்த போஸ்டரில் மேற்பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி, அக்கட்சியின் டெல்லி மாநில தலைவர் அதேஷ் குமார் குப்தா, அப்பகுதி எம்.பி.யும் மத்திய இணை அமைச்சருமான மீனாட்சி லேக்கி ஆகியோரின் படம் பெரிதாக இருந்தது. அதன் கீழே குடிசைவாசிகள் படத்தில் பெருமாள் முருகன் படம் வைக்கப்பட்டது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இதுகுறித்து பிஜேபி நிர்வாகிகள் வட்டாரத்தில் கூறப்பட்டதாவது:
பொதுவாக எங்கள் கட்சி போஸ்டர்களை தகவல் தொழில்நுட்பக்குழு உருவாக்கி, அதனை மூத்த தலைவர்கள் ஒப்புதல் அளித்தபின் பயன்பாட்டுக்கு வரும். ஆனால், இந்த குறிப்பிட்ட போஸ்டரில், தமிழ் எழுத்தாளரான பெருமாள் முருகனின் படம் இணையத்திலிருந்து தவறுதலாக எடுக்கப்பட்டு இடம்பெற்று விட்டது. இனிமேல் அதிக எச்சரிக்கையுடன் செயல்படுமாறு எங்கள் தகவல் தொழில்நுட்பக் குழுவுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.
–இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதனிடையே, பிஜேபி தலைவர்கள் பலரும் தம் டிவிட்டரில் இந்த போஸ்டரை பதிவு செய்ததால், சமூகவலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.