13 புதிய மாவட்டங்கள் இன்று ஆந்திராவில் தொடக்கம்!

13 புதிய மாவட்டங்கள் இன்று ஆந்திராவில் தொடக்கம்!

ஆந்திராவில் இதுவரை இருந்த மொத்தம் 13 மாவட்டங்கள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, மேலும் 13 புதிய மாவட்டங்கள் இன்று தொடங்கப்பட்டன. இதையடுத்து ஆந்திராவில் இப்போது மொத்தமுள்ள மாவட்டங்கள் 26 ஆக உயர்ந்துள்ளது. இந்த புதிய மாவட்டங்களை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று திறந்து வைக்கிறார்.

இதுகுறித்து ஆந்திர அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது:

ஆந்திராவில்  ஸ்ரீகாகுளம், விஜயநகரம், விசாகப்பட்டினம், கிழக்கு கோதாவரி,மேற்கு கோதாவரி, கிருஷ்ணா,குண்டூர்,நெல்லூர்,பிரகாசம், அனந்தபுரம், கர்நூல், கடப்பா, சித்தூர் ஆகிய 13 மாவட்டங்களில் இருந்து புதிய மாவட்டங்களை பிரிப்பதற்கான வரைவு அறிவிப்பை மாநில அரசு கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது. இதையடுத்து மேலும் 13 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

அதன்படி,மண்யம்,அல்லூரி சீதாராம ராஜு,அனகாப்பள்ளி, காக்கிநாடா, கோன சீமா, ஏலூரு,என். டி.ஆர் மாவட்டம், பாபட்லா, பல்நாடு, நந்தி யாலா,ஸ்ரீசத்யசாய்,அன்னமய்யா, மற்றும் ஸ்ரீ பாலாஜி ஆகிய புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில்,13 புதிய மாவட்டங்களை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று திறந்து வைக்கிறார். இந்த புதிய மாவட்டங்களுக்கான ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களை நியமிக்கப் பட்டுள்ளனர்.

-இவ்வாறு ஆந்திர அரசின் செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி,கடந்த 2019–ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, தேர்தல் வாக்குறுதியாக தனது கட்சி ஆட்சிக்கு வந்தால்,ஒவ்வொரு மக்களவைத் தொகுதியையும் ஒரு மாவட்டமாக மாற்றுவதாக உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com