CUET நுழைவுத் தேர்வு;  எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம்!

 CUET நுழைவுத் தேர்வு;  எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம்!

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு கட்டாயம் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தனித்தீர்மானத்தை முன்மொழிந்தார்

இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதியுதவியுடன் இயங்கும் அனைத்து மத்தியப் பல்கலைக்கழகங்களிலும், இளங்கலை உள்ளிட்ட பல்வேறு படிப்புகளில் சேர்வதற்கு 'பொது நுழைவுத் தேர்வு' முறையை மத்திய அரசு அறிவித்துள்ளது. வரும் கல்வியாண்டு முதல் செயல்படுத்த திட்டமிடப் பட்டுள்ளது.

இந்த நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை மாநிலப் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள்கூட இளங்கலைப் படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.

மேலும் தேசிய தேர்வு முகமை (National Testing Agency) மூலமாகவே  இந்த பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (Common University Entrance Examination-CUET) நடைபெறும் என்று அறிவித்துள்ளது. . +2 தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களைக் கணக்கில் கொள்ளாமல், பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் (CUET) மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடைபெறும் எனவும், மாநிலப் பல்கலைக்கழகங்கள், தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் விரும்பினால் மாணவர்கள் சேர்க்கையை நடத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.


தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (NCERT) பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு நுழைவுத் தேர்வும், நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலப் பாடத் திட்டங்களில் படித்த மாணவர்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்பினை வழங்கிடாது என்று இந்தப் பேரவை கருதுகிறது.

மாநிலப் பாடத் திட்டங்களில் பயின்று வரும் மாணவர்கள், NCERT பாடத் திட்ட அடிப்படையிலான இந்த நுழைவுத் தேர்வை எப்படி எதிர்கொள்ள முடியும்?! இந்நுழைவுத் தேர்வும், நீட் தேர்வைப் போன்றே அமையக் கூடும். நாடு முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிக் கல்வி முறைகளை ஓரங்கட்டி, மாணவர்கள் இந்த நுழைவுத் தேர்வுக்காக பயிற்சி மையங்களைச் சார்ந்திருக்கும் ஒரு சூழலை ஏற்படுத்திவிடும். எனவே, மாநில அரசுகளின் உரிமையினை நிலைநாட்டும் பொருட்டு, மத்திய அரசு CUET நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேன்டும் எனும் தீர்மானத்தை நான் மொழிகிறேன்.

– இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவிக்க, பிஜேபி தவிர மற்ற கட்சிகளின் ஆதரவோடு இத்தீர்மானம் நிறைவேறியது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com