திரௌபதி முர்மு: பிஜேபி-யின் குடியரசுத் தலைவர் வேட்பாளர்!

திரௌபதி முர்மு: பிஜேபி-யின் குடியரசுத் தலைவர் வேட்பாளர்!

நாட்டின் குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் பாஜக-வின் வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை மாதம் 24-ம் தேதியுடன் முடிவடைவதையடுத்து, இப்பதவிக்கான அடுத்த தலைவரை தேர்வு செய்வததற்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜூன் 15-ம் தேதி தொடங்கி, வருகிற 29-ம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில் எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இவர் ஜூன் 27-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இந்நிலையில் பிஜேபி அரசு ஜார்க்கண்டின் முன்னாள் ஆளுநராகப் பணியாற்றிய திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்துள்ளது.

தற்போது 64 வயதான முர்மு, ஒடிசாவைச் சேர்ந்த பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.  இவர் 1958-ம் ஆண்டு ஜூன் 20-ம் தேதி ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தின் பைடாபோசி கிராமத்தில் பிறந்தார்.

அவர் தனது அரசியல் பயணத்தை 1997-ம் ஆண்டு ராய்ரங்பூர் பஞ்சாயத்து கவுன்சிலராகத் தொடங்கி, பின்னர் பாஜக-வின் பழங்குடியினர் மோர்ச்சாவின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார் . இரண்டு முறை பாஜக எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட திரௌபதி முர்மு,  ஒடிசா மாநிலத்தில் பிஜூ ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சியில் இருந்த போது அமைச்சராக பதவி வகித்துள்ளார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு ஒடிசா சட்டமன்றத்தால் சிறந்த எம்.எல்.ஏ.வுக்கான நீலகந்தா விருது அவருக்கு வழங்கப்பட்டது. பட்டியல் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை ஜார்கண்ட் மாநிலத்தின் 9-வது ஆளுநராக பணியாற்றியுள்ளார். ஐந்தாண்டு காலத்தை முழுமையாக நிறைவு செய்த ஜார்கண்ட் மாநில முதல் ஆளுநரும் இவர் தான்.

திரௌபதி முர்மு இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் பழங்குடியினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com