#BREAKING: வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு செல்லாது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

#BREAKING: வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு செல்லாது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு அளித்து தமிழக அரசு நிறைவேற்றிய அவசர சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது சரியே என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில்  69 சதவீத இட ஒதுக்கீடு முறை அமலில் உள்ளது. இதில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அளிக்கப்படும் 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கி தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் அவசரச் சட்டம் நிறைவேற்றப் பட்டது. இந்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி 35 வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களில், 'தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கியது சட்டவிரோதம். சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஆதாயம் கருதி அவசரமாக் நிறைவேற்றப்பட்ட சட்டம் இது. ஆகவே இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்' என அந்த மனுக்களில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ''சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் ஒரு வகுப்புக்கு மட்டும் உள் இட ஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. எனவே, வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு நிறைவேற்றிய அவசரச் சட்டம் செல்லாது'' என உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மற்றும் பாமக தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று இந்த விவகாரத்தில் தீர்ப்பளித்து உத்தரவிட்டதாவது:

தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு அளித்து மாநில அரசு நிறைவேற்றிய அவசர சட்டத்தை அம்மாநில உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது செல்லும். ஏனெனில் வன்னியர்களை மட்டும் தனிப் பிரிவாக கருதுவதற்கு முகாந்திரம் இல்லை. சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்ய மாநில அரசுக்கு முழு அதிகாரம் உண்டு என்றாலும், அதற்கான சரியான, காரணங்களை அரசாணையில் குறிப்பிட வேண்டும். இந்த வழக்கில் அப்படி குறிப்பிட்ட காரணங்கள் எதுவும் சொல்லப்படவில்லை. ஆகவே வன்னியர்களுக்கான 10.5 உள் இடஒதுக்கீடு செல்லுபடியாகாது.

-இவ்வாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com