பூக்கம்பளம் விரித்து பிரியாவிடை!

பூக்கம்பளம் விரித்து பிரியாவிடை!

-ரேவதி பாலு.

ன்று (செப்டம்பர் 5) டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் .. இந்நாள்  நாட்டின் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப் படுகிறது.

ஆசிரியர்கள் தினம் கொண்டாடும் வழக்கத்திற்கு காரணமே மிகச் சிறந்த ஆசிரியராக விளங்கி தன் மாணாக்கர்களால் கொண்டாடப்பட்ட  முன்னாள் குடியரசுத் தலைவர்  சர்வபள்ளி திரு.எஸ். ராதாகிருஷ்ணன்தான்!

இவர்  செப்டம்பர் 5-ஆம் தேதி 1888-ம் ஆண்டு தமிழ்நாட்டில் திருத்தணியில் பிறந்தவர். இவர் பிறந்த தேதிதான் ஆசிரியர் தினமாக 1962 முதல் நம் நாட்டில்  கொண்டாடப்பட்டு வருகிறது.

டாக்டர். ராதாகிருஷ்ணன் தன் பள்ளிப் படிப்பை திருத்தணியிலும், பிறகு ஊரிஸ் காலேஜ் வேலூரிலும் முடித்தார். மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் பி.ஏ. மற்றும் எம்.ஏ (தத்துவம்) முடித்தார். முதலில் சென்னை மாநிலக் கல்லூரியில் பேராசிரியாக பணியாற்றினார்.

இவர் 1918-ம் ஆண்டு மைசூர் பல்கலைக் கழகத்தின் தத்துவப் பேராசிரியராக தேர்வாகி அங்கே பணி புரிய ஆரம்பித்தார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உள்ளிட்ட உலகின் பல்வேறு மேடைகளில் மகத்தான சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார்.

பின்னர் 1921 இல் இவர் கொல்கத்தாவிற்கு மாற்றப்பட்ட போது இவருடைய சிறந்த வழிகாட்டுதலால் பயன் பெற்ற இவரது மாணாக்கர்களை இவருடைய பிரிவு பெரிதும் பாதித்தது. அப்போது நடந்த சம்பவம் மிகவும் நெகிழ்ச்சிக்குரியது.

தங்கள் ஆசிரியரான டாக்டர். ராதாகிருஷணனுக்கு  மிகச் சிறந்த முறையில் பிரிவு உபசார விழா நடத்த  மாணவர்கள் திட்டமிட்டபோது அவர் அதற்குத் துளியும் சம்மதிக்கவில்லை.

ஏதாவது செய்து அவரை கௌரவிக்க எண்ணிய மாணவர்கள் வேறு விதமாக யோசித்தனர். அவர் செல்லவிருந்த ரயில் பெட்டியை மிக அழகாக ஒரு அரியாசனம் போல மலர் அலங்காரம் செய்தனர். ஒரு மஹாராஜா அமரப்போகும் பெட்டியாக அது காட்சியளித்தது.

அத்துடன் நில்லாமல் அந்த ரயில்வே ஸ்டேஷனின் நடைமேடை முழுவதும் பூக்களைத் தூவி பூக்களாலேயே கம்பளம் விரித்து அதில் திரு.ராதாகிருஷ்ணனை நடக்க வைத்தனர்.

அது மட்டுமா? அந்த மாணவர்கள் செய்த மற்றொரு செயல் நம் மனதை நெகிழ வைக்கிறது.அவர் தங்கியிருந்த இடத்திலிருந்து ரயில்வே ஸ்டேஷன் வரை குதிரை வண்டியில் அவர் செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த மாணவர்கள் என்ன செய்தனர் தெரியுமா?  வண்டியிலிருந்த குதிரைகளை அவிழ்த்து விட்டு அவர்களே வண்டியை இழுத்தனர். எத்தகைய அன்பு? எத்தகைய மதிப்பு? ஊர் முழுவதும் பேராசிரியருக்கு அளிக்கப்பட்ட பிரிவு உபசாரத்தைக் கண்டு  வியந்து போயினர்.

விழிகளிலிருந்து வழிந்து கொண்டிருக்கும் கண்ணீரையே மாலையாக்கி தங்கள் அடித்தொண்டையிலிருந்து "பேராசிரியர் ராதாகிரிஷ்ணன் வாழ்க!" என்று ரயில் கிளம்பும் வரை கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர் அந்த அன்பான மாணவர்கள்.

டாக்டர். ராதாகிருஷ்ணன் வாழ்க்கையில் நடந்த ஒரு அசாதாரணமான அதே சமயத்தில் முக்கியமான சம்பவமாக இந்த பிரிவு உபசார விழா கருதப்படுகிறது.

மேலும் டாக்டர். ராதாகிருஷ்ணன் சுதந்திர இந்தியாவின் முதல் துணை குடியரசு தலைவராக முதலில் பதவி ஏற்றார். பிறகு சில வருடங்கள் கழித்து குடியரசுத் தலைவராகவும்  பணியாற்றினார்.

இவர் அடிக்கடி கூறிய சில முக்கியமான விஷயங்கள், பணம், ஆற்றல் ஆகியவை வாழ்க்கைக்குரிய பொருட்களேயன்றி அவை மட்டுமே வாழ்க்கையில்லை,முதலில் சேவை பின்பே தன்னலம் என்னும் மனப்பான்மையை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே!

டாக்டர். ராதாகிருஷ்ணனுக்கு 1931-ல்  'சர்' பட்டம் வழங்கப்பட்டது.  பின்னர் 1933-லிருந்து 1937 வரை இவர் பெயர் ஐந்து முறை இலக்கியத்தில் நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நம் நாட்டின் தலை சிறந்த பாரத ரத்னா விருது திரு எஸ்.ராதகிருஷ்ணனுக்கு 1954 ம் வருடம் வழங்கப்பட்டது. 1975-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17-ம் தேதி ராதாகிருஷ்ணன் மறைந்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com