எங்கே செல்லும் இந்த பாதை? அல்லாடுகிறதா அதிமுக?!

எங்கே செல்லும் இந்த பாதை? அல்லாடுகிறதா அதிமுக?!

-மூத்த பத்திரிகையாளர் ஜாசன்.

தமிழகத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி,ஆர் தலைமையில் அதிமுக கட்சி உருவாகி, இந்தாண்டு பொன்விழா கொண்டாடுகிறது. திராவிட அரசியலைப் பொறுத்தவரை அதிமுகவை ஒதுக்கிவிட்டு யாரும் பேச முடியாது. அத்துடன் தமிழகத்தில் அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த திராவிட கட்சி அதிமுகதான் என்ற பெருமையும் அதற்கு உண்டு. நாடாளுமன்றத்தின் மக்களவையில் இரண்டு தேசிய கட்சிகளுக்கு அடுத்து பெரும்பான்மை பெற்ற ஒரே மாநில கட்சி அதிமுக தான்!

ஆனால், அதிமுகவின் இப்போதைய நடவடிக்கைகளைப் பார்க்கும்போது பொதுமக்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது. சரியான தலைமை இல்லாமல் தள்ளாடுகிறதோ என்று தோன்றுகிறது.

திமுகவிலிருந்து எம்.ஜி,ஆர் நீக்கப்பட்டு அவர் அதிமுகவைத் தொடங்கியதே தனிக்கதை! எம்.ஜி.ஆர் கட்சிப் பணத்துக்குக் கணக்கு கேட்டார் என்பதற்காக அவர் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அவர் நீக்கப்பட்ட செய்தியே தமிழக அரசியலை பரபரப்பாக்கியது.

அரசியல் சாணக்கியர் கருணாநிதிக்கு எம்ஜிஆர் கட்சியை விட்டு நீக்கம் என்பது மிகப் பெரிய சறுக்கல்! எம்ஜிஆரை கட்சியை விட்டு நீக்கும் அறிவிப்பை வெளியிட்டவர் நாவலர் நெடுஞ்செழியன்! ஆனால் பிற்பாடு அதிமுகவில் இணைந்து எம்ஜிஆரை அடுத்து இரண்டாவது இடத்தில் இருந்ததும் நாவலர் நெடுஞ்செழியன் தான்! எம்ஜிஆரிடம் அவரை கட்சியை விட்டு நீக்கிய செய்தியைச் சொன்னபோது அவர் சிரித்தபடி" நான் பாயசம் சாப்பிட்டு கொண்டு இருக்கிறேன்"என்றார்.

எம்ஜிஆர் கட்சிப் பணத்துக்கு கணக்கு கேட்டார். கருணாநிதி தப்பு கணக்கு போட்டார். எம்ஜிஆர் தனிக்கட்சி தொடங்க மாட்டார் காங்கிரஸ் கட்சியில் சேருவார் என்று நம்பினார் கருணாநிதி ஆனால் நடந்ததே வேறு காங்கிரஸ் கட்சியிடம் இருந்து அண்ணா ஆட்சியை கைப்பற்றினார் அந்த ஆட்சியை கருணாநிதியிடம் இருந்து எம்ஜிஆர் கைப்பற்றினார் இதுதான் வரலாறு!

எம்ஜிஆரின் தனிக்கட்சி அறிவிப்பு தமிழக அரசியலில் மாற்றிவிட்டது எம்ஜிஆர் அதிமுக இரண்டுமே தவிர்க்க முடியாத சக்தி என்றாகியது! எம்ஜிஆர் இறந்த பிறகு தான் கருணாநிதியால் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. இன்றளவும் தமிழகத்தில் காமராஜர், எம்.ஜி.ஆர் என்று இருவரின் ஆட்சிகள்தான் பேசுபொருள்! தேர்தல் சமயத்தில்கூட கருணாநிதி ஆட்சியை முன்னிலைப்படுத்தி திமுக என்றுமே வாக்கு கேட்டது கிடையாது.

எம்.ஜி.ஆரின் இந்த வெற்றிக்கு என்ன காரணம்? எம்ஜிஆர் மக்கள் தலைவராக இருந்தார் அவர் மக்களுக்காக ஆட்சியை நடத்தினார் அவருக்குப் பின்னால் இருந்த அதிமுக ஆட்சியை அப்படி சொல்ல முடியவில்லை இரட்டை இலை எம்ஜிஆர் இவை இரண்டுமே அன்றும் இன்றும் அதிமுகவின் வாக்கு வங்கி. ''எம்ஜிஆர் ஒரு நடிகர் அவரால் நல்ல அரசை தரமுடியாது'' என்ற விமர்சனங்களை தவிடுபொடி ஆக்கினார். மிகச் சிறந்த நிர்வாகி என்று எல்லோராலும் பாராட்டப்பட்டார் மக்கள் பிரச்சனையை யார் வேண்டுமானாலும் அவரிடம் போய் சொல்லலாம். சுட்டிக்காட்டப்படும் தவறுகளை திருத்திக்கொள்ள எம்ஜிஆர் என்றும் தயங்கியது கிடையாது. மேலும் தன் ஆட்சிகாலத்தில் விலைவாசியை கட்டுப்படுத்தியதுடன், அடிமட்டத்தில் ஊழல் இல்லாமல் பார்த்துக்கொண்டார்.

ஆனால் இப்போது?! ''வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி அதிமுக அமைச்சர் ஏமாற்றிவிட்டார்.. முதல்வராக இருந்த எடப்பாடியின் உதவியாளர் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டார்'' என்றெல்லாம் புகார்களும் வழக்குகளும் வரத் தொடங்கியிருக்கின்றன. மேலும் சசிகலா அதிமுகவின் ஆட்சியிலும் கட்சியிலும் எந்த முக்கிய பொறுப்பிலும் இருக்கவில்லை ஆனால் அவரது பல கோடி ரூபாய் சொத்துக்களை வருமான வரித்துறை துறை அமலாக்கத்துறை அவரைப் பற்றி முடக்கி இருக்கிறது. ''ஊழலுக்காக சிறை சென்ற முதல்வர்'' என்று ஜெயலலிதா சிறைக்கு செல்ல, அவருடன் சேர்ந்து சசிகலாவும் சிறை சென்றார்.

சசிகலாவுக்கு இவ்வளவு சொத்து, பணம் எப்படி வந்தது என்ற கேள்விக்கு அவரால் உண்மையான பதிலை சொல்ல முடியாது அதிமுகவின் கறுப்பு பக்கங்களுக்கு இவரும் முக்கிய காரணம்.

ஜெயலலிதா காலம் வரையில் தமிழகத்தின் அசைக்க முடியாத சக்தியாக இருந்த அதிமுக, இப்போது பொன்விழா கொண்டாடும் வேளையில் தன்னைத் தானே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள் ஏராளம் குறிப்பாக அவர்கள் போகும் பாதை சரிதானா என்பதை அவர்களே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் அப்போதுதான் அவர்களால் மீண்டும் வெற்றிகரமான எம்ஜிஆர் காலத்துக்கு போக முடியும். இல்லையென்றால் காணாமல் போய்விடும் வாய்ப்பு உண்டு!

அதிமுக தொடங்கப்பட்டபோது அப்போது திமுகவில் இருந்த நாவலர் நெடுஞ்செழியன் ''அதிமுக இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் கரைந்து காணாமல் போய்விடும்'' என்றார். ஆனால் எம்ஜிஆர் இருந்த வரையில் திமுக தலையெடுக்கவில்லை. அதே நாவல பிற்பாடு அதிமுகவில் இணைந்து இரண்டாவது தலைவராக கடைசிவரை விளங்கினார். ஆனால், அன்று நாவலர் சொன்னது இன்று உண்மையாகி விடுமோ என்ற பயம் உண்மை அதிமுக தொண்டர்களுக்கு வரத் தொடங்கியிருக்கிறது. அப்படி நடக்க விடாமல், அக்கட்சித் தலைவர்கள் சுதாரித்து செயல்பட்டால் நல்லது!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com